ஆணையமும் வரலாறும்
பொருளடக்கம்
முகவுரை
நிரந்தர ஆணையம்
கள யதார்த்தம்
வாரன் ஆணையம் (1963)
வாட்டர்கேட் ஆணையம் (1973)
இந்திய தேர்தல் ஆணையம் (1950)
கபூர் ஆணையம் (1964)
மண்டல் ஆணையம் (1979)
சர்க்காரியா ஆணையம் (1983)
தக்கர் ஆணையம் (1984)
வர்மா ஆணையம் (மே 1991)
ஜெயின் ஆணையம் (ஆகஸ்ட் 1991)
ஸ்ரீகிருஷ்ணா ஆணையம் (1993)
வோரா ஆணையம் (1993)
கலைஞரின் ஆணையங்கள்
ராஜமன்னார் ஆணையம் (1969)
சர்க்காரியா ஆணையம் (1976)
ஆறுமுகசாமி ஆணையம் (2017)
அருணா ஜெகதீசன் ஆணையம் (2018)
முடிவுரை
விவரணைகள்
முகவுரை
ஒரு பிரச்சனையை பற்றிய தகவல்களை கண்டறிய அல்லது பிரச்சனைக்கான காரணங்களை ஆராய அரசின் அதிகாரம் பெற்ற ஒரு நபர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட குழுக்கள் "ஆணையம்" என்று அழைக்கப்படுகின்றன. நியமிக்கப்பட்ட ஒவ்வொரு ஆணையத்திற்கும் ஒரு கதை உள்ளது எனினும் பொதுவாக ஆணையங்களை அமைப்பது பயனற்றது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள். அதே நேரத்தில் ஆணையங்களை அமைப்பது அடிப்படையற்றது என்று சில அரசியல்வாதிகள் பதறுகிறார்கள்.
மொத்தத்தில் ஆணையங்களால் ஒருபோதும் பயன் இருந்ததில்லை என்பது உண்மையா? அவ்வாறு இல்லை என்றே துணிந்து கூறலாம். ஏன்? இங்கு அசுரன் திரைப்பட வசனத்தை இரவல் வாங்கி கொள்கிறேன். வெங்கடேஷ் “அரசாங்கத நடத்துறதே நாங்க தான் தெரியும்ல?” என்பார். அதற்கு எதிர்வினையாக பிரகாஷ் ராஜ் “அந்த அரசாங்கத்துல ஒரே ஒரு நேர்மையான அதிகாரி இருந்த உங்க ஜோலி முடிஞ்சது தெரியும்ல?” என்பார். நீங்கள் இத்துடன் ஆணையங்களின் வரலாறையும் இணைத்து அணுக வேன்டும்.
நிரந்தர ஆணையம்
ஆணையங்கள் தற்காலிக அமைப்பாக அல்லது நிரந்தர அமைப்பாக அமைக்கப்படலாம். தலைமை கணக்கு தணிக்கையாளர் ஆணையம், ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம், மனித உரிமைகள் ஆணையம், மத்திய புலனாய்வு பணியகம், இந்திய தேர்தல் ஆணையம், மத்திய தகவல் ஆணையம், திட்டக்குழு ஆணையம், நிதி ஆணையம் போன்றவை நிரந்தர அமைப்புகளாகும். மேலும் நிரந்தர ஆணையங்கள் Statutory, Constitutional, Quasi Judicial அமைப்பின் கீழ் வருகின்றன. இதற்கிடையில், இந்த கட்டுரையில், நிரந்தர ஆணையங்களை விட ஒரு பிரச்சனையை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக ஆணையங்கள் குறித்து தான் பெருமளவில் காண இருக்கிறோம்.
கள யதார்த்தம்
ஆணையங்கள் மூலம் வெளியிடப்பட்ட அறிக்கைகளால் மக்கள் மன்றங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பல கதைகள் உள்ளன. மேலும் ஆணையத்தின் அறிக்கைபடி நடவடிக்கை எடுக்கவும், ஆணையத்தை கலைக்கவும், ஆணையத்தை மாற்றவும் அரசுகளுக்கு உரிமை உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் ஜெயின் ஆணையம் மற்றும் மண்டல் ஆணையம் அறிக்கையால் இந்தியாவில் இரண்டு ஒன்றிய அரசுகள் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய ஆணையங்கள் குறித்து விரிவாக எடுத்துரைப்பது நீண்ட நேரம் பிடிக்கக்கூடிய காரியம் என்பதால் மேற்கோளுக்கு சில ஆணையங்களின் கதைகளை (Summary) மட்டும் கையாண்டு அமெரிக்காவில் தொடங்கி இந்தியாவில் நிறுத்தி தமிழ்நாட்டில் முடித்துள்ளேன்.
வாரன் ஆணையம் (1963)
ஜனாதிபதி ஜான் எப். கென்னடியின் படுகொலை குறித்தும் கொலையாளி என்று கூறப்பட்ட லீ ஹார்வி ஓஸ்வால்ட் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்தும் விசாரிக்க ஜனாதிபதி லிண்டன் பி. ஜான்சன் அவர்களால் வாரன் ஆணையம் நியமிக்கப்பட்டது.
லீ ஹார்வி ஓஸ்வால்டின் வாழ்க்கையை பற்றிய அதன் விசாரணையை விரிவாக விவரித்தாலும், வாரன் ஆணையம் ஓஸ்வால்டின் நோக்கங்களை பகுப்பாய்வு செய்ய முயற்சிக்கவில்லை. மேலும் வாரன் ஆணையம் இரகசிய சேவையை வலுப்படுத்தவும், ஜனாதிபதியைப் பாதுகாக்க மேம்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவும், ஜனாதிபதி அல்லது துணை ஜனாதிபதியை கொல்வதை கடும் குற்றமாக மாற்ற சட்டத்தை இயற்றவும் முன்மொழிந்தது.
வாட்டர்கேட் ஆணையம் (1973)
ரிச்சர்ட் நிக்சனை மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கும் முயற்சியில் 1972 முதல் 1974 வரை ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனின் நிர்வாகத்தை உள்ளடக்கிய அரசியல் ஊழல் தான் வாட்டர்கேட் ஊழல். ஊடகத்துறையால் வெளிக்கொணரப்பட்ட வாட்டர்கேட் ஊழல் இறுதியில் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனை ராஜினாமா செய்ய வழிவகுத்தது.
செனட் உறுப்பினர்களால் சாம் எர்வின் தலைமையில் அமைக்கப்பட்ட வாட்டர்கேட் ஆணையம், வெள்ளை மாளிகையின் அரசியல் ஊழலை அம்பலப்படுத்திய நீதி மற்றும் பிற குற்றங்களுக்காக நாற்பது அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கும், ரிச்சர்ட் நிக்சனின் உதவியாளர்கள் பலருக்கு தண்டனை வழங்குவதற்கும் உரிய ஆதாரங்களை சேகரிப்பதில் முக்கிய பங்கு வகித்தது. மேலும் எதிர்காலத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தவும், அரசாங்கத்திற்கு தகுதிநிலையுடன் கூடிய சிறப்பு வழக்கறிஞரை நியமிக்கவும், காங்கிரஸில் சட்ட சேவையை உருவாக்கவும் வாட்டர்கேட் ஆணையம் பரிந்துரைத்தது.
இந்திய தேர்தல் ஆணையம் (1950)
இந்திய தேர்தல் ஆணையம் என்பது இந்தியாவில் ஒன்றிய மற்றும் மாநில தேர்தல் செயல்முறைகளை நிர்வகிப்பதற்கு பொறுப்பான ஒரு தன்னாட்சி அரசியலமைப்பு அதிகாரமாகும். சுருக்கமாக, இந்தியாவில் மக்களவை, மாநிலங்களவை, மாநில சட்டமன்றங்கள், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் ஆகியவற்றுக்கான தேர்தல்களை நடத்துதல், கண்காணித்தல், வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்படுத்தல் ஆகியவற்றை இந்திய தேர்தல் ஆணையம் நிர்வகிக்கிறது.
உலகின் மிகப்பெரிய மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசாக 15 ஆகஸ்ட் 1947 இல் இந்திய அரசு உருவாக்கப்பட்ட பிறகு, இந்திய தேர்தல் ஆணையம் அரசியலமைப்பின் 324வது பிரிவின் கீழ் 25 ஜனவரி 1950 அன்று நிரந்தர அரசியலமைப்பு அமைப்பாக நிறுவப்பட்டது.
கபூர் ஆணையம் (1964)
1964 இல் காந்தியின் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளின் விடுதலைக்காக புனேவில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் “காந்தி கொல்லப்படுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு நாதுராம் கோட்சே காந்தியைக் கொல்லும் எண்ணத்தை வெளிப்படுத்தியதாகவும், தொடக்கத்தில் அதனை எதிர்த்து தகவலை பாலுகாகா கனிட்கரிடம் தெரிவித்ததாகவும், அவர் அதை பம்பாய் மாநிலத்தின் அப்போதைய முதல்வர் பி.ஜி.கேருக்கு தெரிவித்ததாகவும்” பாலகங்காதர திலகரின் பேரன் கஜனன் விஸ்வநாத் கேட்கர் பேசியது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கேட்கர் கைதானார்.
மேலும் காந்தியின் படுகொலை சதியை விசாரிக்க கோபால் ஸ்வரூப் பதக் தலைமையில் 1965 இல் பதக் ஆணையம் அமைக்கப்பட்டது. பதக் ஒன்றிய அமைச்சராகவும் பின்னர் மைசூர் ஆளுநராகவும் பணியாற்ற வேண்டியிருந்ததால் பதக் ஆணையத்துக்கு பதிலாக கபூர் ஆணையம் 1966 இல் அமைக்கப்பட்டது.
கபூர் ஆணையம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத சாவர்க்கரின் மெய்க்காப்பாளர் ராமச்சந்திர காசர் மற்றும் செயலாளர் கஜானன் விஷ்ணு டாம்லே ஆகியோரின் சாட்சியங்களை ஆய்வு செய்தது. ராமச்சந்திர கசார் மற்றும் கஜானன் விஷ்ணு டாம்லே இருவரும் காந்தியின் படுகொலைக்கு முன்னும் பின்னும் கோட்சே கும்பல் சாவர்க்கரை பலமுறை சந்தித்ததை உறுதிப்படுத்தினர்.
“காந்தியின் படுகொலையில் சாவர்க்கரின் உடந்தையை நிரூபிக்கும் இரண்டு சாட்சியங்கள் (Corroborative Evidence) விசாரிக்கப்படவில்லை. நீதிமன்ற விசாரணை காலத்தில் இருவரிடமும் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு இருந்தால் காந்தியின் படுகொலையில் சாவர்க்கரின் பங்கு உறுதி செய்யப்பட்டு அவருக்கு குறைந்தபட்ச ஆயுள் தண்டனை கிடைத்திருக்கும்” என்று கபூர் ஆணையம் தெரிவித்த கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. 1966 இல் சாவர்க்கர் இறந்தார் என்பதையும் கபூர் ஆணையத்தின் இறுதி அறிக்கை 1969 இல் வெளியிடப்பட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மண்டல் ஆணையம் (1979)
1978 டிசம்பரில் அன்றைய ஜனதா கட்சி பிரதமர் மொரார்ஜி தேசாய் இந்தியாவின் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினரை அடையாளம் காணவும், சாதி சமத்துவமின்மை மற்றும் பாகுபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறையாக இடஒதுக்கீட்டை கண்டறியவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.பி.மண்டல் தலைமையில் மண்டல் ஆணையத்தை அமைத்தார்.
சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினரை வரையறுப்பதற்கான அளவுகோல்களை நிர்ணயிக்க, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைக்க, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒன்றிய அரசு வேலைகளில் இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட மண்டல் ஆணையம் அதன் அறிக்கையை 1980 டிசம்பரில் சமர்ப்பித்தது.
இந்தியாவின் மக்கள் தொகையில் 52 சதவீதம் பின்தங்கிய வகுப்பினரை உள்ளடக்கியதாக ஆணையம் கண்டறிந்தது. இந்த பின்னணியில், மண்டல் ஆணையம், ஒன்றிய அரசு பணிகளில் 52 சதவீதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று ஆரம்பத்தில் வாதிட்டது. இருப்பினும், அரசியலமைப்பின் 15(4) மற்றும் 16(4) பிரிவுகளின் கீழ் பணியிடங்களுக்கான இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்ற இந்திய உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பின் சட்ட கட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு முந்தைய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சாதிகளுக்கு இருந்த 22.5 சதவீத இடஒதுக்கீட்டுடன் கூடுதலாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு பரிந்துரைக்கப்பட்டது.
// வி.பி.சிங் ஆட்சி கவிழ்ப்பு //
மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை தேசிய முன்னணி அரசு அமல்படுத்த முன்வந்தால் கூட்டணி அமைப்போம் என தி.மு.க தலைவர் கலைஞர் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த பின்னணியில், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவுடன் 10 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட பின்னர் மண்டல் ஆணையத்தின் அறிக்கையை வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு ஏற்றுக்கொண்டது. 7 ஆகஸ்ட் 1990 அன்று ஒன்றிய அரசு பணிகளில் பின்தங்கிய வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதாக தேசிய முன்னணி அரசு அறிவித்தது.
மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த முடிவு செய்த வி.பி.சிங் ஆட்சிக்கு அழுத்தம் கொடுத்து இந்து வாக்கு வங்கியைக் கவர அத்வானி தலைமையிலான பா.ஜ.க ராம ரத யாத்திரை நடத்தியது. இதனையடுத்து, அத்வானி கைது செய்யப்பட்டார். இதையெடுத்து, வி.பி.சிங் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க வாபஸ் பெற்றது. மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்ட போது ஆதரவாக 142 வாக்குகளும் எதிராக 346 வாக்குகளும் பெற்று வி.பி.சிங் அரசு பெரும்பான்மையை இழந்தது. ராஜினாமா செய்த பிறகு வி.பி.சிங் நாடாளுமன்றத்தில் "உங்களுக்கு எப்படிப்பட்ட நாடு வேண்டும்?" என்று கேட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
சர்க்காரியா ஆணையம் (1983)
1986 இல் ஒன்றிய அரசு “கூட்டாட்சி முறையை மேம்படுத்தவும், ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகார சமநிலையை ஆய்வு செய்யவும், இந்திய அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் மாற்றங்களை பரிந்துரைக்கவும்” சர்க்காரியா ஆணையத்தை அமைத்தது. குறிப்பாக சட்டமியற்றும் அதிகாரங்கள், ஆளுநர்களின் அதிகாரங்கள் மற்றும் 356வது பிரிவின் பயன்பாடு குறித்து பல்வேறு மாநில அரசுகள் முன்வைத்த வாதங்கள் ஆராயப்பட்டன.
1988 இல் சர்க்காரியா ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பித்தாலும் சர்க்காரியா ஆணையத்தின் பெரும்பாலான பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தக்கர் ஆணையம் (1984)
பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட இருபது நாட்களுக்கு பிறகு படுகொலைக்கு வழிவகுத்த நிகழ்வுகளை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி.தக்கர் தலைமையில் தக்கர் ஆணையம் அமைக்கப்பட்டது. தக்கர் தலைமையில் கண்காணிக்கப்பட்ட சாட்சி விசாரணையில் சதிச்செயல் குறித்த ஆய்வை ஆனந்த் ராம் IPS மேற்கொண்டார்.
இந்திரா காந்தியின் பாதுகாப்பு குழுவில் இருந்து நீக்கப்பட்ட பியாந்த் சிங் மற்றும் சத்வந்த் சிங் ஆகியோரை மீண்டும் பணியில் சேர்த்ததாகவும், 31 அக்டோபர் 1984 அன்று காலை பீட்டர் உஸ்டினோவ் உடனான இந்திரா காந்தியின் தொலைக்காட்சி நேர்காணல் நேரத்தை கவனக்குறைவாக கையாண்டு படுகொலையை எளிதாக்கியதாகவும் தவான் மீது குற்றம் சாட்டப்பட்டது. “குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகவோ அல்லது சம்பந்தப்பட்டதாகவோ சந்தேகிக்க கணிசமான காரணங்கள் உள்ளன என்ற முடிவில் இருந்து தவான் தப்ப முடியாது” என்று தக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்திரா காந்தியின் தொலைக்காட்சி நேர்காணல் காலை 8:30 மணிக்கு திட்டமிடப்பட்ட பிறகு, அது பிரதமரின் நாட்குறிப்பில் 8:45 மணி ஆக மாற்றப்பட்டு, அச்சிடப்பட்ட அட்டவணையில் காலை 9 மணி ஆக பட்டியலிடப்பட்டது. இந்திரா காந்தியின் அலுவலகத்தில் இருந்து ஒரு மர்மமான அழைப்பாளர் பீட்டர் உஸ்டினோவை காலை 8:30 மணிக்கு பதிலாக காலை 9 மணிக்கு வருமாறு அழைத்துள்ளார், அதை உஸ்டினோவும் உறுதிப்படுத்தினார். ஆணையத்தின் விசாரணைப்படி நேரத்தை மாற்றி பீட்டர் உஸ்டினோவை அழைத்த நபர் குறித்து கண்டறியப்படவில்லை.
ஐந்து தொகுதிகளை கொண்ட தக்கர் அறிக்கையின் இரண்டு தொகுதிகள் மட்டுமே நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டன. பிரதமரின் பாதுகாப்பை கையாளும் பாதுகாப்பு குழு மற்றும் பிரதமரின் உடல்நிலையை கையாளும் மருத்துவக் குழு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அறிக்கை முன்வைத்தது. அத்துடன் வெளிநாட்டுத் தொடர்புகளையும் ஆணையம் நிராகரிக்கவில்லை. மேலும் இந்திரா காந்தியின் சிறப்பு உதவியாளர் ஆர்.கே.தவான், பாதுகாப்பு ஆலோசகர் ராம்நாத் காவ், டெல்லி காவல் ஆணையர் டாண்டன், உளவுத்துறை இணை இயக்குனர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கடமை தவறியதாக குற்றம் சாட்டப்பட்டது.
வர்மா ஆணையம் (மே 1991)
ராஜீவ் காந்தியின் படுகொலைக்கான சதித்திட்டம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்த நிலையில் ராஜீவ் காந்தியின் பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் கடமை தவறிவிட்டார்களா என்று விசாரிக்க வர்மா ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகள் குறித்து வர்மா ஆணையம் விசாரித்தது.
வர்மா ஆணையம் அரசு உளவுத்துறை அமைப்புகளின் தவறுகளை கண்டறிந்தது. வி.பி.சிங் அரசு ராஜிவ் காந்திக்கு வழங்கப்பட்ட SPG பாதுகாப்பை திரும்பப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. ராஜீவ் காந்திக்கு நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்ய எதுவும் செய்யாமல் கட்சிக்காரர்களின் தயவில் ராஜீவ் காந்தியை தமிழ்நாடு காவல்துறை விட்டுவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. ராஜீவ் காந்தியின் பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல் கூட்டம் நடைபெற்ற ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸார் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாக ஆணையம் விமர்சித்தது. மேலும் கவலையளிக்கும் வகையில் குற்றம் தொடர்பான ஆதாரங்களை அழிக்க வேண்டுமென்றே முயற்சி நடந்ததாக ஆணையம் குறிப்பிட்டது.
கூட்டத்தின் வழியாக ராஜீவ் காந்தி சைகை செய்த போது தாணுவை ராஜீவ் காந்தி அருகே செல்லவிடாமல் காவலர் தடுக்க முயன்றார் என்ற காவல்துறையின் வாதத்தை வர்மா நிராகரித்தார். பாதுகாப்புப் பணியாளர்கள் பெண்களை அரிதாகவே சோதனை செய்ததாகவும், புகைப்படங்கள் வாயிலாக தாணு தனது மாலையுடன் நடந்து சென்று ராஜீவ் காந்தியை தடையின்றி அடைந்ததாகவும், தாணு தன்னை வெடிக்கச் செய்ய முயன்றவுடன் ஒட்டுமொத்த பாதுகாப்பு அமைப்பும் சரிந்ததாகவும் வர்மா கூறினார். மேலும் ராஜீவ் காந்தியை சுற்றிலும் கூட்டம் கூடியதால் தாணுவை 30 அடி தூரத்தில் நிறுத்தி வைத்திருந்தால், குண்டு வெடித்திருந்தாலும் ராஜீவ் காந்தி காயமின்றி தப்பியிருப்பார் என்று வர்மா அடிக்கோடிட்டார். சுருக்கமாக, வர்மா ஆணையத்தின் அறிக்கையை யாரும் சரியாக ஒப்புக் கொள்ளவில்லை ஏனென்றால் அறிக்கை அனைவரையும் குற்றம் சாட்டியது.
ஜெயின் ஆணையம் (ஆகஸ்ட் 1991)
ராஜீவ் காந்தியின் படுகொலைக்கான சதித்திட்டம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு போன்றே அனைத்து தரப்பிலும் விசாரணை மேற்கொள்ள ஜெயின் ஆணையம் அமைக்கப்பட்டது. ராஜீவ் காந்தியின் படுகொலை ஏற்படுத்திய அரசியல் தாக்கங்கள், 1981 முதல் 1991 வரையிலான ராஜீவ் காந்தியின் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் சதித்திட்டத்திற்கு ஒரு நபர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் அல்லது வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் காரணமா என ஜெயின் ஆணையம் விசாரித்தது.
சீக்கிய விடுதலை அமைப்பு, காஷ்மீர் விடுதலை அமைப்பு, அசாம் விடுதலை அமைப்பு, ஈழ விடுதலை அமைப்பு, நேபாள் மன்னர் வகையறா உட்பட பல்வேறு உள்நாட்டு வெளிநாட்டு அமைப்புகளால் ஒருங்கிணைந்த அச்சுறுத்தல் ராஜீவ் காந்திக்கு இருந்ததாக ஆணையத்தின் அறிக்கை நிறுவியது. மேலும் மதகுரு சந்திரசுவாமி படுகொலைக்கு நிதியுதவி செய்ததாக சந்தேகிக்கப்பட்டது. ஜெயின் ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பித்ததிலிருந்து அதன் பரிந்துரைகள் எதுவும் முறையான கவனத்துடன் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
// சீக்கிய விடுதலை அமைப்பு //
ஜர்னையில் சிங் பிந்தரன்வாலாவின் தம்தாமி தக்சல் அமைப்பு இந்தியாவிலிருந்து பஞ்சாபை பிரித்து காலிஸ்தான் என்ற தனி நாடாகக் கோரியது. காலிஸ்தான் இயக்கத்தை ஒடுக்க பாதுகாப்புப் படைகளுக்கு இந்திரா காந்தி உத்தரவிட்டது சீக்கிய கோவில் வளாகத்தில் Operation Bluestar நடவடிக்கைக்கு வழிவகுத்தது. இது உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்களிடையே வேதனையை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, சீக்கியப் படையினர் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டு கொன்றனர். இதை தொடர்ந்து, இந்தியா முழுவதும் சீக்கியர்களுக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் கலவரமாக மாறியது.
// காஷ்மீர் விடுதலை அமைப்பு //
காஷ்மீர் மீதான உரிமை கோரும் பிரச்சனை முதன்மையாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ளது. அதே நேரத்தில் சீனா மூன்றாம் தரப்பு பாத்திரத்தை வகிக்கிறது. 1947 இல் இந்தியாவின் பிரிவினைக்கு பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரின் முழு உரிமையை கோரத் தொடங்கி பல்வேறு கட்ட ஆயுத மோதலுக்கு பிறகு காஷ்மீர் பிராந்தியத்தின் நிலப்பரப்பில் தோராயமாக 55% இந்தியா கட்டுப்பாட்டிலும், 30% பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலும், 15% சீனா கட்டுப்பாட்டிலும் உள்ளது. காஷ்மீர் விடுதலை அமைப்புகள் புரட்சி, மக்கள் வாக்கு, மதம் மற்றும் நிலம் மூலம் சுதந்திர காஷ்மீருக்காக குரல் கொடுக்கின்றன.
// அசாம் விடுதலை அமைப்பு //
ஆயுதப் போராட்டத்தின் மூலம் பழங்குடி அசாமிய மக்களுக்காக தனி சுதந்திர மாநிலத்தை அமைக்க அசாம் விடுதலை அமைப்புகள் குறிப்பாக அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி (ULFA = United Liberation Front of Asom) போராடுகிறது. ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு ஊற்றுக்கண்ணாக இருந்த ஒற்றைக்கண் சிவராசனின் நாட்குறிப்பில் ULFA அமைப்பு பற்றிய குறிப்புகள் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
// ஈழ விடுதலை அமைப்பு //
1987 இல் இந்திய அரசும் இலங்கை அரசும் இந்திய அமைதி காக்கும் படை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது அந்த ஒப்பந்தத்தில் விடுதலைப் புலிகள் அங்கம் வகிக்கவில்லை. இருப்பினும் சுவாரஸ்யமாக 29 ஜூலை 1987 அன்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்தியாவின் அரசு விருந்தினராக வந்து டெல்லியில் உள்ள அசோகா விடுதியில் அறை எண் 518 இல் தங்கி இருந்தார். இந்திய அமைதிப்படை ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியை பிரபாகரன் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்கத்தில் இந்திய அமைதி காக்கும் படைக்கு ஆயுதங்களை ஒப்படைக்க விடுதலைப் புலிகள் தயக்கத்துடன் ஒப்புக்கொண்டனர். எவ்வாறாயினும், இந்திய அமைதி காக்கும் படையில் இருந்து “அமைதி” கைவிடப்பட்டதாக குற்றம் சாட்டி விடுதலைப் புலிகள் விலகிய பின் ஈழத்தில் நடைபெற்ற சம்பவகளால் விடுதலைப் புலிகள் ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசுக்கு எதிராக திரும்பினர். இந்த பின்னணியில் ராஜீவ் காந்தியின் படுகொலையில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணை குழுவினரால் குற்றம் சாட்டப்பட்டது.
// நேபாள் மன்னர் வகையறா //
நேபாளத்தின் இந்து சாம்ராஜ்யத்தை பகைத்து கொள்ளும் விதமாக, நேபாள அரசியலில் தலையிட சீன கம்யூனிஸ்டுகளை ராஜீவ் காந்தி ஆதரித்ததாக கருதிய நேபாள் மன்னர் குடும்பம் ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசுக்கு எதிராக திரும்பியதாக பரவலாக விமர்சிக்கப்பட்டது.
// ஐ.கே.குஜ்ரால் ஆட்சிக் கவிழ்ப்பு //
விடுதலைப் புலிகளுடன் தி.மு.க நட்புறவை பேணி வந்ததாக ஜெயின் ஆணையத்தின் அறிக்கை 1997 நவம்பரில் கசிந்ததை தொடர்ந்து ஜனதா தளத்தின் சார்பில் பிரதமராக இருந்த I.K. குஜ்ரால் தி.மு.க தலைவர்களை பதவி நீக்க வேண்டும் இல்லையெனில் அரசியல் ஆதரவை வாபஸ் பெறுவதாக காங்கிரஸ் அச்சுறுத்தியது. இதையடுத்து, 1998 இல் தி.மு.க தலைவர்களை பதவி நீக்கம் செய்ய முடியாது என I.K.குஜ்ரால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
// கோப்புகள் காணவில்லை //
ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பான சில கோப்புகள் 1995 முதல் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 1987 இல் ராஜீவ் காந்தி ஆட்சியை கவிழ்க்க ஜைல் சிங் மற்றும் சந்திரசாமி ஆற்றிய பங்கு, சந்திரசாமிக்கும் சுப்பிரமணியசாமிக்கும் அனுப்பப்பட்டதாக கூறப்படும் வெளிநாட்டு உளவு நிறுவனங்களில் இருந்து இடைமறித்த செய்திகள், வர்மா மற்றும் ஜெயின் விசாரணைக் ஆணையங்களின் விதிமுறை குறிப்புகளை கொண்ட கோப்பு எண் 1/12014/5/91-IAS/DIII.
// சிறப்பு புலனாய்வு குழு விசாரணை //
வர்மா ஆணையம் மற்றும் ஜெயின் ஆணையம் தவிர, சிறப்பு புலனாய்வு குழு ராஜீவ் காந்தியின் படுகொலை குறித்து விசாரணை நடத்தியது. உள்ளூர் முதல் வெளிநாடுகள் வரை விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழு, விடுதலைப் புலிகள் சார்பில் ஒற்றைக்கண் சிவராசன் தலைமையில் தீட்டப்பட்ட சதியால் தான் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்ற முடிவுக்கு வந்தது.
இதற்கிடையே, CBI சார்பில் சிறப்பு புலனாய்வு குழு முதற்கட்ட விசாரணையை தொடங்கிய போது அப்போது உளவுத்துறை இயக்குநராக இருந்த எம்.கே.நாராயணன் வீடியோ ஆதாரங்களை மறைத்து சிதைத்தாக சந்தேகிக்கப்பட்டார் என்றும் படுகொலை தொடர்பாக பலரிடம் உரிய விசாரணை நடத்தப்படவில்லை என்றும் விடுதலைப் புலிகளுக்கு அப்பால் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என்றும் விசாரணை அதிகாரிகளில் ஒருவரான கே.ரகோத்தமன் கூறியது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீகிருஷ்ணா ஆணையம் (1993)
டிசம்பர் 1992 முதல் ஜனவரி 1993 வரையிலான மும்பை கலவரங்களுக்கான காரணங்களை கண்டறிய நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தை மகாராஷ்டிர காங்கிரஸ் அரசு அமைத்தது.
6 டிசம்பர் 1992 இல் அயோத்தியில் சங்பரிவார் அமைப்புகளால் நடத்தப்பட்ட பாபர் மசூதி இடிப்புக்கு எதிராக முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்திற்கு பதிலடியாக முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட தாக்குதல்களை நடத்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே சிவசேனா உறுப்பினர்களுக்கு கட்டளையிட்டதை ஆணையம் கண்டறிந்தது.
மேலும் சிவசேனாவின் உயர்மட்டத் தலைவர்களின் தூண்டுதலின் பேரில் சிவசேனா உறுப்பினர்கள் முஸ்லிம்கள் மீதும் அவர்களது சொத்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் இந்து அடிப்படைவாதிகளால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை சிவசேனா கொண்டாடியது முஸ்லிம்களை எதிர்த்துப் போராடத் தூண்டியது என்றும் குற்றம் சாட்டப்பட்டது. சுருக்கமாக, ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தின் அறிக்கை மும்பை கலவரத்தின் பெரும்பகுதியை சிவசேனா மீது குற்றம் சாட்டியது. மத வன்முறைக்கு அழைப்பு விடுத்தது மற்றும் பல முஸ்லிம்களின் மரணத்திற்கு சிவசேனா தான் வழிவகுத்தது என்று முடிவு செய்தது.
எப்படியாகினும், ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் விசாரணையின்றி உயர் பதவிகளுக்கு உயர்த்தப்பட்டதும் சிவசேனா தலைவர்கள் விசாரணையின்றி விடுவிக்கப்பட்டதும் வருந்தத்தக்கது.
வோரா ஆணையம் (1993)
1993 மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு பிறகு இந்தியாவில் உள்ள நிழல் உலக குற்றவாளிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் பிரபலங்களுக்கு இடையேயான தொடர்புகளை வோரா ஆணையம் விசாரித்தது. சுருக்கமாக, குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்க உதவும் உண்மையான குற்றவாளிகளை தீவிரமாக விசாரித்து அடையாளம் காண வோரா ஆணையம் அமைக்கப்பட்டது.
அரசியல்வாதிகளின் ஆதரவுடன் அரசு அதிகாரிகளின் பாதுகாப்புடன் அரசு இயந்திரத்தை பொருத்தமற்ற நிலைக்கு தள்ளி இணை ஆட்சியை நடத்தும் நிழல் உலகம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு முன்னும் பின்னும் D Company குற்றவாளிகளுக்கு உதவிய அரசியல்வாதிகள் மற்றும் பல ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகள், மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு குற்ற பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து ஆராயப்பட்டது.
வோரா ஆணையத்தின் அறிக்கையில் சரத் பவார், அகமது படேல் போன்ற மகாராஷ்டிரா அரசியல்வாதிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மகாராஷ்டிர அரசியல்வாதிகள் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் வகையறாவின் கூட்டாளிகளாக செயல்பட்டு ஹவாலா பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதாக விமர்சிக்கப்பட்டனர். வோரா ஆணைய அறிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதன் பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை.
மேலும் அறிக்கையின் 12 பக்கங்கள் மட்டும் வெளியிடப்பட்டு மீதமுள்ள 100 பக்க அறிக்கை வெளியிடப்படாமல் அதிகாரத்தின் தாழ்வாரங்களில் புதைந்து கிடப்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னணியில், முன்னாள் மத்திய தகவல் ஆணையர் ஷைலேஷ் காந்தியின் கூற்றுப்படி, வோரா ஆணையத்தின் மீதமுள்ள பக்கங்கள் குறித்த தகவல்களை கோரி அவர் தாக்கல் செய்த RTI விண்ணப்பம் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு துறைகளுக்குத் அனுப்பப்பட்டு இறுதியில் அத்தகைய தரவு எதுவும் கிடைக்கவில்லை என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.
கலைஞரின் ஆணையங்கள்
தமிழ்நாட்டில் கலைஞரின் ஆட்சிக்காலத்தில் மக்கள் நலன் கருதி பல்வேறு ஆணையங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் பலவும் இந்தியாவில் முதன்முதலாக என்ற தலைப்பை தாங்கி நிற்கின்றனஆணையத்தின் பரிந்துரைகளின்படி பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டன. எடுத்துக்காட்டாக சில ஆணையங்கள்,
*1969 = தமிழ்நாடு காவல் ஆணையம்
*1969 = மாநில சுயாட்சி குறித்து ஆராய ராஜமன்னார் ஆணையம்
*1969 = பிற்படுத்தப்பட்டோர் நலன் குறித்து ஆராய சட்டநாதன் ஆணையம்
*1971 = மாநில திட்டக்குழு ஆணையம்
*2011 = பஞ்சமி நிலங்களை மீட்க மருதமுத்து ஆணையம்
ராஜமன்னார் ஆணையம் (1969)
1969 இல் அன்றைய தமிழ்நாடு தி.மு.க முதல்வர் கலைஞர் ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவை ஆராய பி.வி.ராஜமன்னார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். இந்தக் குழுவில் சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஏ.லெட்சுமணன், ஆந்திர முன்னாள் தலைமை நீதிபதி பி.சந்திரா ஆகியோரும் உறுப்பினர்களாக இருந்தனர்.
1967 இல் ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவை ஆராய ஒரு குழுவின் அவசியத்தை டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பிலும் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திலும் அண்ணா வலியுறுத்தினார் எனினும் 1969 இல் கலைஞரால் அது செயல்வடிவம் கண்டது.
“நிதி ஆணையத்தை நிரந்தர அமைப்பாக்குதல், மாநிலங்களுக்கு இடையிலான சபைகளை அமைத்தல், IAS - IPS - IFS ஆகிய அகில இந்திய சேவைகளை ஒழித்தல், திட்டக் குழு ஆணையத்திற்கு பதிலாக சட்டப்பூர்வ அமைப்பை நிறுவுதல், குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கையாளும் 356 / 357 / 365 ஆகிய பிரிவுகளை நீக்குதல்” போன்ற முக்கியமான பரிந்துரைகளை ராஜமன்னார் குழு வழங்கியது.
மொத்தத்தில் “சட்டமன்ற அதிகாரம், நிதி உறவு, நிர்வாக பகிர்வு, நெருக்கடி மேலாண்மை, வர்த்தக நலன்” உள்ளிட்ட 21 தலைப்புகளில் சர்வதேச சட்ட அறிஞர்களின் கருத்துக்கள், நீதிமன்றத் தீர்ப்புகள், கட்டுரைகள் மற்றும் செய்தித்தாள் அறிக்கைகளை மேற்கோள் காட்டி 1971 இல் ராஜமன்னார் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
இன்றும் தமிழ்நாடு அரசின் மாநில அதிகாரங்கள் குறித்த கோரிக்கைகள் எழுப்பப்படும் போதெல்லாம் ராஜமன்னார் குழு அறிக்கை தான் மேற்கோள் காட்டப்படுகிறது. மேலும் ராஜமன்னார் குழு அறிக்கையை மத்திய அரசு ஏற்கும் என்ற நம்பிக்கையில் முன்வைக்கப்படவில்லை அதே நேரத்தில் ஒரு மாநிலத்தின் தன்னாட்சிக் குரலை நியாயமான முறையில் வெளிப்படுத்தும் வாய்ப்பாக அறிக்கை பார்க்கப்பட்டது.
சர்க்காரியா ஆணையம் (1976)
1972 இல் எம்.ஜி.ஆரும் கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரமும் அன்றைய தமிழ்நாடு முதல்வராக இருந்த கலைஞருக்கு எதிராக ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரிடம் ஊழல் புகார்களை அளித்தனர். நெருக்கடி நிலை அடக்குமுறைக்கு அடிபணியாத கலைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு எண்ணியது. அதையெடுத்து, 1972 இல் எம்.ஜி.ஆரும் கல்யாணசுந்தரமும் கொடுத்த ஊழல் புகார்களை நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றிய அரசு தூசி தட்ட, 1971 முதல் 1976 வரை தமிழ்நாடு முதல்வராக இருந்த கலைஞர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க ரஞ்சித் சிங் சர்க்காரியா தலைமையில் 1976 இல் சர்க்காரியா ஆணையம் அமைக்கப்பட்டது.
அண்ணா திரையரங்க அவதூறு, லண்டன் டிராக்டர், திருவாரூர் வீடு, மேகலா பிக்சர்ஸ், அஞ்சுகம் பிக்சர்ஸ், வீராணம் ஒப்பந்தம் என பல குற்றச்சாட்டுகள் கலைஞர் மீது சுமத்தப்பட்டன. பலகட்ட விசாரணைகளுக்கு பிறகு கலைஞர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றசாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று சர்க்காரியா கூறினார். சுருக்கமாக, எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகள் பலிக்காததால் சர்க்காரியா ஆணையத்தின் விசாரணை தோல்வியில் முடிந்தது. மேலும் சர்க்காரியா தனது விசாரணை அறிக்கையில் எந்த இடத்திலும் விஞ்ஞானபூர்வமான ஊழல் என்று குறிப்பிடவில்லை.
ஆறுமுகசாமி ஆணையம் (2017)
2016 டிசம்பரில் மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமான சூழ்நிலையை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்று எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அரசு 2017 செப்டம்பரில் அமைத்தது.
ஜெயலலிதா இறந்த தேதியிலும் நேரத்திலும் அதிர்ச்சிகரமான முரண்பாடு இருப்பதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது. அதாவது, ஜெயலலிதா 2016 டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது ஆனால் 4 டிசம்பர் 2016 அன்று மாலை 3 மணி முதல் 3.30 மணிக்கு இடையில் ஜெயலலிதா இறந்துவிட்டார் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது சசிகலாவுக்கும் அப்பல்லோ மருத்துவமனைக்கும் தெரியும் என்று ஆணையம் குற்றம் சாட்டியது.
ஜெயலலிதாவின் ஒரே அரசியல் வாரிசாக தம்மை நிலைநிறுத்த ஓ.பன்னீர்செல்வம் முயன்றதை தற்செயல் நிகழ்வாக கருத முடியாது என்றும் அதிகார மையத்தின் சூழ்ச்சியால் தனது புதிய பதவி நீண்ட நாள் நீடிக்கவில்லை என்று ஆத்திரமடைந்த ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்ற பெயரில் அரசியல் செய்ததாக ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன ராவ், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், டாக்டர் சிவக்குமார் (சசிகலாவின் உறவினர்), சசிகலா, அப்பல்லோ மருத்துவர்கள் உட்பட பலர் மீது விசாரணை நடத்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையம் பல்வேறு ஐயங்களை எழுப்பியது.
*அமெரிக்க மருத்துவர் சமீன் சர்மாவின் பரிந்துரைப்படி ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை ஏன் செய்யப்படவில்லை?
*ஜெயலலிதா இருந்த வார்டில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராக்களை அப்பல்லோ மருத்துவமனை அகற்றியது ஏன்?
*ஜெயலலிதாவை உயர் மருத்துவ சிகிச்சைக்காக சுகாதாரத்துறை ஏன் வெளிநாடு அழைத்துச் செல்லவில்லை?
*ஜெயலலிதாவைக் காப்பாற்ற மருத்துவக் குழுவை ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய விடாமல் சசிகலா தடுத்தது ஏன்?
*ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை பொய்யான அறிக்கைகள் கொடுத்தது ஏன்?
*லண்டனைச் சேர்ந்த மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மூத்த மருத்துவர்களின் பரிந்துரைகளை அப்பல்லோ மருத்துவக் குழு ஏன் முழுமையாகப் பின்பற்றவில்லை?
அருணா ஜெகதீசன் ஆணையம் (2018)
தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் ஏற்பட்ட மாசுபாட்டிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான காவல்துறை துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அரசால் அருணா ஜெகதீசன் ஆணையம் அமைக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்த பிறகு தான் தெரிந்து கொண்டேன் என்று அன்றைய அ.தி.மு.க முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிலவரத்தை அதிகாரிகள் நிமிடத்திற்கு நிமிடம் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தது ஆணையத்தின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் எடப்பாடியின் கூற்று பொய் என்பது நிரூபணமானது.
தூத்துக்குடி கலவரத்திற்கு சமூக விரோதிகள் தான் காரணம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் பிரபலங்கள் தங்களது சமூகப் பொறுப்பை உணர்ந்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்கும் போது ஆதாரத்துடன் பேச வேண்டும் எனவும் ஆணையம் அறிவுறுத்தியது.
அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை என்பதையும் அரசு இயந்திரம் நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்பதையும் காவல்துறை வரம்பை மீறி செயல்பட்டது என்பதையும் ஆணையம் கண்டறிந்தது. மேலும் போராட்டக்காரர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்த திட்டமிட்டே துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 17 காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், அசாதாரண சூழ்நிலையை சரியாக கையாளாத அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மூன்று வருவாய்த்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு இழப்பீடாக ரூபாய் 20 லட்சத்திற்கு பதிலாக ரூபாய் 50 லட்சத்தை வழங்கவும், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் பரிந்துரைத்தது.
அண்மையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி முதற்கட்டமாக நான்கு காவலர்களை சஸ்பெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.
முடிவுரை
ஒவ்வொரு ஆணையமும் தெளிவான நிலைப்பாட்டுடன் அதன் இறுதி பாதையை அடைந்துள்ளதா என்பதற்கு பதிலளிப்பது கடினம். எடுத்துக்காட்டாக விமான விபத்தில் சஞ்சய் காந்தி மர்மமான முறையில் இறந்தது குறித்து நீதிபதி எம்.எல்.ஜெயின் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. விசாரணையின் போது ஒரு கட்டத்தில் வெளிப்படையாகக் கூறப்படாத காரணங்களால் ஆணையம் திடீரென கலைக்கப்பட்டது.
இந்தியாவின் வங்கித் துறைக்கான விதிமுறைகளை ஆய்வு செய்து பரிந்துரைத்த நரசிம்மம் ஆணையம், சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை விசாரித்த நானாவதி ஆணையம், கும்பகோணம் தீ விபத்து குறித்து விசாரித்த சம்பத் ஆணையம், ஏர்வாடி தீ விபத்து குறித்து விசாரித்த ராமதாஸ் ஆணையம், கலைஞரின் நள்ளிரவு கைதுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்து விசாரித்த பக்தவச்சலம் ஆணையம், மாஞ்சோலை பேரணியில் நடந்த வன்முறை குறித்து விசாரித்த மோகன் ஆணையம், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம், தெலங்கானாவுக்கு தனி மாநில கோரிக்கையை ஆய்வு செய்த ஸ்ரீகிருஷ்ணா ஆணையம் என பல்வேறு ஆணையங்கள் அமைக்கப்பட்டு அறிக்கைகள் வெளிவந்துள்ளன.
உலகளவில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் எதிர்காலத்தில் நிகழ வேண்டிய மாற்றங்கள் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உதவவும் வழிகாட்டவும் ஒரு பயனுள்ள கருவியாக ஆணையம் (Commission / Committee) உள்ளது. பொதுவாக நீதித்துறை அனுபவம் அல்லது நாடாளுமன்ற, சட்டமன்ற அனுபவம் உள்ளவர்களால் ஆணையங்கள் (Chairperson) வழிநடத்தப்படுகிறது. சுருக்கமாக, பரிந்துரை செய்வது ஆணையர்களின் வேலை மற்றும் சரியான நடவடிக்கை எடுப்பது ஆட்சியாளர்களின் வேலை என்றால் அது மிகையல்ல.
