Monday, August 26, 2024

வாழையும் கீழ்வெண்மணியும்

 வாழை திரைப்படத்தின் உள்ளடக்கங்களில் உழைக்கும் மக்களின் ஊதியப் பிரச்சனை கதையின் மைய இழையாக நெய்யப்பட்டிருக்கிறது. பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கான ஊதிய உரிமையை அளவிடவும், ஊதியத்தை உரிமைகோரவும் இடதுசாரி இயக்கத்தின் முன்னெடுப்புகளை மாரி செல்வராஜ் வாழையில் பதியவிட்டிருக்கிறார். 

பல காததூரம் கான்களையும் (வாழைத் தோட்டத்தின் நடுவில் உள்ள நீர்ப்பிடிப்பு வாய்க்கால்) தெரட்டு மேடுகளையும் (மண் அரண் மேடு - திரட்டு மேடு) சதுப்பு வயல்களையும் கடந்து சுமந்து வரும் வாழைத்தார் ஒன்றுக்கு சுமைகூலியாக ஒரு ரூபாய் தருகின்றமையைக் காட்சிப்படுத்தியுள்ளார்.


ஒரு தாருக்கு ஒரு ரூபாய் கூலியைக் கேட்பதிலும், வியாபாரியோ கேட்ட கூலியில் 1.50 என்றபோது விடாப்பிடியாய் நிற்பதிலும் கீழவெண்மணி காட்சிப்பட்டது. கூலியாக ஒரு படி நெல் கேட்ட மக்களை கூண்டோடு எரித்த கோபாலநாயுடுவின் தன்மையை மாரிக்கே உரிய பாணியில் கொஞ்சம் உக்கிரம் தளர்த்தி வெளிப்படுகிறது வியாபாரியின் லாபநோக்கும் வஞ்சனையும்.

கோர விபத்துக்கு காரணமான வியாபாரி மாலையோடு வரும்போது எதிர்ப்புணர்வு வலுப்பதும் அந்த எதிர்ப்பை அடக்க போலீசும் லத்திகளும் சீறுவதும் கோபாலநாயுடுவை இந்திய நீதிமன்றங்கள் காப்பாற்றிய விதத்தை நினைவுக்குத் தந்தன.


சிவனணைந்தானின் அப்பாவின் டிரங்குப் பெட்டி உழைக்கும் மக்களுடனான இடதுசாரிய இருப்பைப் பேசுகின்ற ஒரு முக்கியமானக் குறியீடாகும். அதே பெட்டி சமகாலத்தில் நினைவுகளில் மட்டும் தங்கிப்போன பழைய போராட்டக் குணாதிசயமாகவும் இடதுசாரிய இயக்கங்களின் நிலையையும் காட்டத் தவறவில்லை. என்றாலும் போராட்டக் குணம்கொண்ட கனி அண்ணனிடம் அறிவாள் சுத்தியல் நட்சத்திர பேட்ஜை தரும்போது உழைக்கும் மக்களின் விடுதலைக்கான அடையாளமாக இடதுசாரியத்தை முன்வைப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. சமகாலத்தில்  அம்பேத்கரியர் என கூறிக்கொள்ளும் சிலரின் இடதுசாரிய விலக்குணர்வைக் கண்டிப்பதாகவும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.

சிவனணைந்தானின் அப்பாவைப் பற்றி அம்மா வேதனைப்படும்போது 'போராட்டம்னு போனவன் அப்படியே ஆத்தோடு போய்ட்டான்' என்று சொல்வதாக காட்சியமைத்து தாமிரபரணி போராட்டத்தினை நினைவுகூற வழி செய்கிறார் மாரி.

மொத்தத்தில் தனது முந்தைய படங்களைப்போலவே வாழையிலும் சிறப்பான திரைமொழியால் வரலாற்றுப் பக்கங்களைப் ப(பா)டமாக நிகழ்த்திக்காட்டுகிறார் மாரி செல்வராஜ்.

No comments: