ஒழுக்கம் என்பது... ஒழுக்கம் என்பதே தனிமனித உரிமைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்ற நடைமுறையே ஆகும். சமூகத்தின் பெரும்பான்மைப் பிரிவினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுநிலை வாழ்வியல் நெறிப்பாடுகளே ஆகும். இந்தியப் பண்பாட்டில் ஒழுக்கங்களை வரையறுத்தவர்கள் தங்கள் அறிவுக்கும் அனுபவத்திற்கும் தேவைக்கும் ஏற்ப முன்மொழிந்தனர். காலத்தோடு ஒத்து நடைபெறாத எந்த ஒழுக்கமும் மக்களால் மாற்றியமைக்கப்படும் அல்லது முழுதாய் புறந்தள்ளப்படும் என்பதே வரலாற்றுப் படிப்பினை. பொதுச் சமூக ஒழுக்கங்கள் பரும (Macro Metrics) அடிப்படைகளைக் கொண்டவை அவை பெரும்பான்மை மக்களின் சமூக ஒவ்வாமையை அடைந்து ஒத்தக் கருத்தமைவுக்கு வந்து மாற்றத்துக்கு உள்ளாக வெகுகாலம் எடுத்துக்கொள்கிறது. ஆனால் தனிமனித ஒழுக்கங்களாக விதிக்கப்பட்டவை எதுவும் காலத்துடனான நேரடி நுண் (Micro Metrics) அடிப்படைகளான தனிமனித அனுபவங்களுடன் நிற்பவையாதலால் காலத்தையொட்டி மாற்றத்தை விரும்பும் அல்லது மோதும் தன்மையுடையது.
தமிழ்ச்சமூகத்தில் தனி மனித ஒழுக்கங்களாகக் கற்பிக்கப்பட்டவற்றை அகநிலை ஒழுக்கங்கள், புறநிலை ஒழுக்கங்கள், பொதுச்சமூக வெளிப்பாட்டு நடத்தை ஒழுக்கங்கள் (Internal, External, Exposure) என்பனவாகப் பிரித்துக்கொள்ளலாம். இவற்றில் உள்ளார்ந்த ஒழுக்கங்களானவைப் பெரும்பாலும் சமூக ஒழுக்கங்களை மய்யமிட்ட உளவியல் ஒழுங்குகளே. பொதுச்சமூக நடத்தை ஒழுக்கங்களில் சில நடைமுறை முரண்கள் இருந்தாலும் ஊருடன் ஒத்துவாழும் சமூகக் கட்டமைப்புக்குள் ஓரளவு ஏற்புடன் அமைகின்றன. ஆனால் உடைக் கட்டுப்பாடு, உருவக் கட்டுப்பாடுகளை முன்வைத்து வலியுறுத்தப்படும் புறநிலை ஒழுக்கங்கள் காலத்துக்கு ஒவ்வாத வெறுப்புணர்வைத் தருகின்றன.
ஒழுக்கம் என்பது ஒருவரால் முன்மொழியப்பட்டு அமைவரும் ஏற்றாகக் கட்டாயப்படுத்துவதாக அமைகின்றபோது இயல்பாகவே மறுப்பும் எதிர்ப்பும் தோன்றிவிடுகிறது. ஒழுக்கங்கள் காலத்திற்கேற்ப மாறுதலை அடையவும் கைவிடப்படவும் வேண்டியது அவசியமாகும். ஒழுக்கங்களின் ஒவ்வாமையை தமிழ்நாட்டின் பெரும்பான்மைக் கல்விநிலையங்களில் வெளிப்படையாகக் காணமுடிகிறது. மாணவர்களிடம் வலியுறுத்தப்படும் ஒழுக்க நெறிப்பாடுகளில் சிகை (தலைமுடி) அலங்காரக் கட்டுப்பாடுகள், உடை சார்ந்த கட்டுப்பாடுகள் போன்றவை தனிமனித உணர்வையும் சுயமரியாதைப் பழக்கத்தையும் சிதைப்பனவாக அமைகின்றன. 70களிலிருந்து தொடரும் இந்த கல்விநிலையக் கட்டுப்பாடுகளில் இம்மாதிரியான மனித உரிமைக்கு எதிரானக் கட்டுப்பாடுகள் இன்றுவரை கல்வி நிலையங்களின் பெருவழக்காகவே இருந்து வருகின்றன. தன்னை எவ்வாறு பிறருக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்கிற உரிமையில் கல்வி நிலையங்கள் குறிப்பாக கல்லூரிகள் தலையிடுவது கண்டனத்துக்குரியது.
வேடிக்கை என்னவென்றால், பணம் படைத்தவர்களின் குழந்தைகள் படிக்கும் கல்வி நிலையங்களிலோ அல்லது பெருநகரங்களின் கல்வி நிலையங்களிலோ இந்தக் கட்டுப்பாடுகள் வலியுறுத்தப்படுவது கூட இல்லை. கிராமப்புறத்தில் அமைந்துள்ள அல்லது கிராமப்புற மக்களின் குழந்தைகளட பயிலுகிற அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்களில் இவை முக்கியத்துவம் வாய்ந்த ஒழுக்கங்களாக மாணவர்களைக் கட்டாயப்படுத்துகிற தன்மையைக் காண முடிகிறது.
வரையறுத்தபடி முடி வெட்டாத மாணவர்களை கண்டிப்பது, தண்டிப்பது, வகுப்பிலிருந்து வெளியேற்றுவது என்பவற்றோடு நில்லாமல் அதீதமாக தலையில் கத்திரியை வைப்பது போன்ற செயல்களையும் சில மூளைப்பிசகு கொண்டவர்கள் நிகழ்த்தி வருகிறார்கள். இம்மாதிரி வறட்டுக் கட்டுப்பாடுகளைக் கட்டாயமாக்குவதில் சாதிச் சங்கங்கள் மற்றும் மத நிறுவனங்கள் நடத்தும் கல்வி நிலையங்கள் முன்னணியில் நிற்கின்றன.
மாணவர்களிடம் தேவையற்றக் கட்டுப்பாடுகளால் வெறுப்பை ஏற்படுத்திவிட்ட ஒரு ஆசிரியர் எவ்வாறு சுயம் பேணுதலைப் போதிக்க முடியும். இந்த ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுடன் இம்மாதிரியான அணுகுமுறைகளை மேற்கொள்வார்களா.? ஆம் எனில் அந்தக் குழந்தைகளுக்காகவும் நாம் வருந்தத்தான் வேண்டும்.
மாணவர்களுக்கு இம்மாதிரியான காலத்துக்கு ஒவ்வாத ஒழுக்கத்தைக் கட்டாயப்படுத்தும் கல்விநிலையங்களின் ஒழுக்கக்கேட்டையும் விதிமீறல்களையும் பேசுப் புகுந்தால் பக்கங்கள் போதாது. அரசு வரையறுத்துள்ள சட்டங்களின்படி மட்டுமே மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிக்கிறோம் என்றோ.! யூஜிசி மற்றும் அரசு வரையறுத்தபடியே ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குகிறோம் என்றோ.! கட்டிடங்கள் அனைத்தும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே கட்டப்பட்டுள்ளன என்றோ.! யாரேனும் ஒருவர் நெஞ்சம் நிமிர்த்திக் கூற முடியுமா.? நாம் எந்தத் தார்மீகத்தின் அடிப்படையில் தனியுரிமை சார்ந்தவற்றை ஒழுக்கங்களாக்கிக் கட்டாயப்படுத்துகிறோம்?

.jpeg)


No comments:
Post a Comment