Wednesday, November 9, 2022

ஆதிமொழி - நூல் அறிமுகம்

 

ஆதிமொழி 

சட்டம்பி திருவடிகள் சுவாமி (1853 – 1924) கேரளத்தில் குமுக சீர்திருத்தத்திற்கு வித்திட்ட சிறீ நாராயண குருவிற்கு குருவாய் அமைந்தவர். தமிழிலும் சமற்கிருதத்திலும் ஆழ்ந்த புலமை பெற்றவர் இவர்1915 இல் இயற்றிய மொழியியல் ஒப்பாய்வு நூல் தான் ஆதி மொழி என்பது. அரிதினும் அரிதாக இதுகாறும் எவரும் செய்திராத வகையில் இந்நூலில் தமிழ் சமற்கிருதம் ஆகிய மொழிகளின் முதன்மையான இலக்கண நூல்களான தொல்காப்பியம் பாணினீயம் ஆகியவற்றை ஒப்பிட்டு இம்மொழிகளின் அமைப்பில் உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் சிறந்த முறையில் ஆசிரியர்  எடுத்துக்காட்டியுள்ளார். இவற்றோடு நில்லாமல் தமிழ், பிராகிருதம், சமற்கிருதம் ஆகியவற்றின் தொன்மையைப் பற்றிக்  கூறும் போது தமிழ் இம்மூன்றில் மூத்த முதுமொழி என்றும் பிராகிருதம் தமிழுக்கு பின்னது என்றும் சமற்கிருதம் பிராகிருதத்திற்கும் பிற்பட்டது என்றும் நிறுவியுள்ளார். சமற்கிருத இலக்கணத்தினும் தமிழ் இலக்கணம் பழமையானது என்று கூறுகிறார். 

https://en.wikipedia.org/wiki/Chattampi_Swamikal

176 பக்கங்கள் கொண்ட இந்நூல் வித்தியாதிராச தரும சபையால் கடந்த 31/01/2016 அன்று அவ்வை திரு நடராசன் அவர்களால் வெளியிடப்பட்டது. நான் ஆனந்த மார்க்க பிரசாரக சங்கத்தில் ஊழ்கம் பயின்றுவந்த நாளில் 9 ஆண்டுகள் முன்னம் அதில் உறுப்பினராக இருந்த திரு பி. சுப்பிமணியம் பிள்ளை என்ற மலையாளி தந்த குறுநூல் ஒன்றில் இந்த சட்டம்பி திருவடிகள் இயற்றிய ஒப்பாய்வு நூல் “ஆதிபாஷா” தமிழையே ஆதிமொழி என குறிப்பதாக இருந்த செய்தியால் ஈர்ப்புற்று வித்தியாதிராச தரும சபையின் பொதுச் செயலர் திரு சி.கெ. வாசுக் குட்டன் அவர்களைத் தொடர்பு கொண்டு 1998 இல் கெ. மகேசுவரன் நாயரால் மலையாளத்தில் வெளியிடப்பட்ட இந்நூலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதை பேரா இரா. மதிவாணன் நல்ல முறையில் செய்யவல்லவர் என்று கூறி இருவருக்கும் தொடர்பை ஏற்படுத்திவைத்து சில மாதங்களில்(2007 இல்) மொழிபெயர்ப்பு  முடிவடைந்தது. பல்வேறு காரணங்களால் நூல் வெளியீடு தடைபட்டு எமது தொடர்ந்த வற்புறுத்தலால் 2016 சனவரி இல் வெளியானது.

இந்நூல் தமிழார்வலர்கள், தமிழ் சமற்கிருதம் அறிந்த அறிஞர்கள், அயலக பல்கலையில் பயிலும் மாணவர்கள்  கற்றுவிக்கும் பேராசிரியர்கள் ஆகியோருக்கு பெரிதும் உதவியாய் இருக்கும். விலை உரூ. 180/-

உள்ளடக்கம் 

1. தொடக்கம்               – பிராரம்பம்

2. எழுத்தியல்              – அட்சர நிரூபணம்

3. புணரியல்                – சந்தி நிரூபணம்

4. சொல்லியல்           – பத விவஸ்தா நிரூபணம்

5. பால் இயல்              – லிங்க நிரூபணம்

6. எண் இயல்               – வசன நிரூபணம் 

7. வேற்றுமை இயல் – விபக்தி நிரூபணம் 

8. அடிச்சொல் இயல் – தாது நிரூபணம் 

9. தமிழ் சமற்கிருதம் ஒற்றுமை வேற்றுமைகள்  

10. ஆதி மொழி            –     ஆதிபாஷா

தொடக்கம் பக்கம். 2

 வீசிதரங்க நியாயம்: தொடக்கத்தில் ஒரு அலை புறப்பட்டு கரையை தொடுவதற்கு முன்பே அடுத்தடுத்த அலைகள்  தொடர்ந்து வந்து அலையடுக்குகளாக உருவெடுக்கின்றன. அது போல் முதலில் தோன்றிய ஒரு மொழியின் விளைவாக அடுத்தடுத்து பல மொழிகள் உருவெடுக்கும் வரலாற்றுக்கு அலை அடுக்கு முறை என்பது உவமையகிறது.

கதம்ப மூல நியாயம்: கடம்ப மரத்தின் எல்லாப் பகுதிகளிலும் ஒரு சேர மொட்டுகள் அரும்பி அவை ஒரு சேர மலரும். இதைப் போலவே ஒரு நேரத்தில் உலகின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு மொழிகள் தோன்றியிருக்கக் கூடும் என்பதற்க்கு இது உவமையாகக்  கூறப்படுகிறது.

எழுத்தியல் பக்கம் 25 – 26:

பிராகிருதம் சமற்கிருதமயமாக்கப்படாத தனக்கே உரிய முந்து எழுத்து வடிவங்களைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதால் சமற்கிருதத்தைவிட பிராகிருதம் காலத்தால் மிக மிக முந்தையது  என்பது பெறப்படுகிறது.

மேலும் சமற்கிருதம் ஒருமை இருமை பல என்னும் எண்பாகுபாடு  உள்ளது. அதனை வசனத்ரையம் என்கின்றனர். ஆனால் பிராகிருத்ததில் “த்விவசனஸ்ய பஹுவசனம்” எனக் கூறப்பட்டிருப்பதால் ஒருமை பன்மை எனும் இரண்டல்லாது இருமை (த்விவசனம்) என்பது அறவே இல்லை.

சமற்கிருதத்திலிருந்து பிராகிருதம் தோன்றியிருந்தால் சமற்கிருதம் ஏற்றுக் கொண்ட இருமை எண் (த்விவசனம்) இல்லாமலிருக்க காரணமில்லை.

புணரியல் பக்கம் .48

ஏனைய உலக மொழிகளில் இல்லாத சொற்புணர்ச்சி  (சந்தி) இலக்கணம் தமிழிலும் சமற்கிருதத்திலும் மட்டும் காணப்படுகின்றன.

சொல்லியல் பக்கம் 67

சமற்கிருதத்திலுள்ள சொற்கள் யாவும் ‘கிரியா தாது’ எனும் வினைச் சொற்களிலிருந்து தோன்றியவை. ஆனால் முன்னொட்டுகள் பெறாத தனித்த வினைச் சொற்கள் சமற்கிருதத்தில் இல்லை.

பக்கம் 69 – 70 

சமற்கிருதத்தில்எல்லாச் சொற்களும் தாதுக்கள் எனும் சொல்லடியில் தோன்றினாலும் இந்த வடிவத்தில் வினைச் சொற்கள் ஆவதில்லை. அவற்றோடு முன்னொட்டுகள், பின்னொட்டுகள் சேர்ந்தால் தான் வினை வடிவம் பெறும். தமிழில் வினைச் சொற்களுக்கு முன்னொட்டு பின்னொட்டுப் போன்றவை அறவே தேவையில்லை. இவற்றை உற்று நோக்கும்போது தமிழ் சமற்கிருதம் எனும் இரண்டு மொழிகளுக்கும் இடையே உள்ள வலுவான பெரிய  வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது.

பக்கம் 71 சமற்கிருதம் பேசப்படும் பேச்சு மொழியாக இல்லாததாலும் பல திசைகளிலிருந்தும் சொற்கள் வந்து சேரும் வாய்ப்பு இல்லை எனக்கருதி திசைச்சொல் என்னும் வகைப்பாட்டை சமற்கிருத இலக்கணத்தில் சேர்க்கவில்லை எனச் சிலர் கூறுகின்றனர். எனினும் தன்சொல் பிறசொல் எனும் இருவகை அதில் இல்லை என வாதிட முடியாது.

பால் இயல் பக்கம் 101

சமற்கிருதத்திலுள்ள பால் வேறுபாடுகள் குழப்பமும் பிழைபாடும் கொண்டவை என்பதைச் சமற்கித்தத்தில் மாபெரும் புலமையாளராகவும் சமற்கிருதத்திற்கு அதிகாரிகளாகவும் உள்ள சமற்கிருத பெரும் பண்டிதர்கள் அறியாமல் இருக்கிறார்கள்.

எண் இயல் பக்கம் 107

தமிழிலுள்ள உயர்திணை அஃறிணைப் பிரிவுகள் சமற்கிருதத்தில் இல்லை. இவை காலங்கடந்து தமிழில் சேர்க்கப் பட்டவை என்று கூறுவதை ஏற்க முடியாது. உயர்திணை முன்பு வகுக்கப்பட்ட பின்னரே  உயர்திணை அல்லாதது எனும்  அஃறிணை காரணம் கருதிப் பெயரிடப்பட்டுள்ளது. ஆதலால் தமிழிலுள்ள உயர்திணை அஃறிணை வேறுபாடு தொடக்க காலத்திலேயே உண்டாகியிருக்க வேண்டும். இதுவே உத்திக்கும் பொருந்தியுள்ளது.

பக்கம் 109

சமற்கிருதத்தில் எண்ணிக்கையை வசனம் என்றும் பிறப்பு வழி ஆண் பெண் வேறுபாட்டை  லிங்கம் என்றும் வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் தமிழில் இந்த இருவகைக்கும் வேறுபாடு காட்டாமல்  பொதுவாகப் பால் எனப் பெயரிட்டது ஏன்?

இவற்றுக்குக் காரணம் என்னவெனில் வடமொழியிலக்கணப்பாங்கு ஏற்படுவதற்கு முன்பே மிகு தொன்மைக் காலத்தில் தமிழிலக்கண வகைபாடுகள் தோன்றிவிட்டனவாதலால் அவற்றை  மாற்றமின்றித் தமிழிலிணக்க வல்லுநர் பின்பற்றி வந்திருக்கிறார்கள் என்பதேயாகும்.

ஆதிமொழி பக்கம் 175

பல்வேறு உயிரினங்கள் எங்குத் தோன்றினவோ அங்குதான் மாந்த இனமும் தோன்றியிருக்க முடியும். முதல் மாந்தன் எங்குத் தோன்றினானோ அங்குத்தான் உலக முதன் மொழியும் தோன்றியிருக்க முடியும். அந்த மாந்தனின் மொழிகள் அவனுக்குப் பிறகு தோன்றிய மாந்த இனத்துக்கும் தாய்மொழியாக அமைந்திருக்கும்.

இலங்கை தொடங்கிய அடுத்தடுத்துள்ள நிலப்பகுதிகள் இன்னும் திராவிட மொழிகளின் ஊற்றிடங்களாக உள்ளன. தென்னிந்திய மொழிகளுக்குத் தாயாக உள்ள  தமிழே பழந்திராவிட முதல் தாய்மொழியாக இருந்திருக்கும் என்னும் உண்மை இதனால்  நிலை நாட்டப்படுகிறது. இப்பகுதியிலிருந்து உலக முழுவதும் பரவிய உலகமொழிகள்  அனைத்துக்கும் தமிழே தாய்மொழி என்பது உறுதிப்படுவதால் தமிழை ஆதிமொழி என்று அழைக்கலாம்.

 http://thamizhmunai.com/product/athi-moli/  

- முகநூல் பதிவு 'தமிழ்முனை'

Thursday, November 3, 2022

இணையத்தில் தமிழ்



தமிழ் மொழி காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னை வளர்த்துக் கொண்டே வருகிறது. இன்றைய மிகப் பெரிய தகவல் ஊடகமாக விளங்குவது இணையம் ஆகும். இந்தத் தகவல் சாதனத்திலும் தமிழ் அதிக அளவில் பயன்படுத்தப் பெற்று வருகின்றது. ஏறக்குறைய இணையப் பயன்பாட்டில் தமிழ் மொழி குறித்த தகவல் பரிமாற்றம் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இணையத்தில் தமிழ் பற்றி அறிந்து கொள்ள, தமிழ்ச் செய்திகளை அறிந்து கொள்ள பற்பல வாய்ப்புகள் உள்ளன. தமிழில் உள்ள நூல்களை இணையத்தில் வாசிக்கமுடியும். தமிழ் நூல்களை மின்நூல்களாக மாற்றி இணையத்தில் வழியாக அனைவரும் பயன்கொள்ளும்படிச் செய்யப்பட்டு வருகிறது. இவற்றை மின் நூலகம், இணைய நூலகம் என்று அழைக்கின்றனர். கள்வரால் களவாடப்பட முடியாமல், வெந்தணலில் தமிழ் ஏடுகள் தற்போது இணையத்தில் ஏற்றி அழியா நிலைக்குச் சென்றுவிட்டன.

மதுரைத்திட்டம் என்ற இணைய தளம் ஏறக்குறைய பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் தன்னுள் மின்பதிப்பாகக் கொண்டுள்ளது. http://www.project madurai.org” இணையதள முகவரிக்குச் சென்றால் இத்தளத்தைப் பார்வையிடலாம். இத்தளத்தின் சிறப்பு என்னவென்றால் பல தமிழ் அன்பர்கள் ஒன்றுகூடி, அவர்கள் அவர்களாகவே சிலச்சில நூல்களை மின்வடிவமாக மாற்றி ஒட்டுமொத்தமாகத் தந்திருப்பதுதான். இது ஒரு கூட்டு முயற்சியாகும்.

தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் இணைய நூலகம் மிகவும் பயன்பாடு மிக்கது. இதனுள் பல நூறு நூல்கள் சேமிக்கப் பெற்றுள்ளன. நூல்களை அடுத்த அடுத்த பக்கங்களுக்குச் சென்று படிப்பது போல இணையப் பக்கங்களைப் புரட்டி நூல்களைப் பார்வையிட முடியும். மேலும் இந்நூலகத்தில் தேடுதல் வசதி உள்ளது. அதாவது தேடுதல் வசதி என்பது சொல் தேடல் என்பதாகும். திருக்குறளில் ஏதாவது ஒரு சொல் எந்தெந்த இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கண்டறியவேண்டுமானால் இத்தளத்திற்குச் சென்று திருக்குறள் பகுதியை அழுத்தி அதன்பின் தேடல் பகுதியில் தேவையான சொல்லை இட்டால் அந்தச் சொல் பயன்படுத்தப் பட்டுள்ள இடங்கள் அனைத்தும் கிடைக்கும். இப்படியே ஒவ்வொரு நூலிலும் தேடல் வசதி தரப் பெற்றுள்ளது. தற்போது தமிழ் இணையப் பல்கலைக் கழகம் என்ற பெயர் உலகத் தமிழ் இணையப் பயிற்சிக் களம் என்பதாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இருப்பினும் http://www.tamilvu.org என்ற முகவரியில் இத்தளம் இயங்கி வருகிறது. இத்தளத்தில் கலைக்களஞ்சியங்களும் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி சொல் வளம் பெற இயலும்.

அடுத்து சென்னை லைப்ரரி என்ற தளம் குறிக்கத்தக்கது ஆகும். சிறுகதைகள், நாவல்கள் முதலியனவற்றைப் படிப்பதற்கு இந்தத்தளம் உதவுகின்றது. குறிப்பாக சங்க இலக்கியம், சங்கம் மருவிய இலக்கியங்கள் போன்றனவும் இத்தளத்தில் கிடைக்கின்றன. கம்பராமாயணம் முழுவதும் இதனுள் கிடைக்கின்றது. பெரும்பாலும் இணையத்தில் தற்போது முல நூல்கள் மட்டுமே கிடைக்கின்றன. உரை நூல்கள் கிடைப்பதில்லை. கல்கியின் நாவல்கள், புதுமைப்பித்தன் கதைகள், ஜெயகாந்தன் படைப்புகள் போன்றவற்றை இதனுள் பெற இயலும்.

அடுத்துப் பொள்ளாச்சி நசன் அவர்களின் தமிழம்.நெட் இணைய தளம் பல அறியப்படாத நூல்களைத் தன்னுள் கொண்டுள்ளது. இத்தளத்தில் இன்னும் பல சிறப்புகள் உள்ளன. முன்னூறு தமிழ் அறிஞர்களின் புகைப்படங்கள் கிடைக்கின்றன. மேலும் சிற்றிதழ்களின் கண்காட்சியாக பல சிற்றிதழ்கள் பார்வைக்கு உள்ளன. தமிழில் உள்ள குறிக்கத் தக்க இணையதளங்களுக்கான இணைப்பு தரப்பெற்றுள்ளது. இவ்வகையில் மிக முக்கியமான தளமாக இது விளங்குகின்றது.

இதுபோன்று தமிழ் மரபு அறக்கட்டளைhttp://www.tamilheritage.org) , நூலகம்.காம் போன்ற பல தளங்கள் வாயிலாக தமிழ் நூல்களை இணைய நூல்களாகக் காண முடிகின்றது. தமிழ் மரபு அறக்கட்டளை இணையதளம் ஓலைச்சுவடிகளை மின்வடிவில் தருவதில் பெரு முயற்சி எடுத்து வருவது குறிக்கத்தக்கது.

சமண சமய நூல்களினைப் பார்வையிட ஜெயின்வோர்ல்டு .காம் என்ற இணையதளம் பயன்படுகிறது. தமிழ் விக்கிபீடியா என்ற இணையதளம் தமிழின் கட்டற்ற கலைக் களஞ்சியமாக உள்ளது. தமிழ்மொழியில் உள்ள தகவல்களைப் பெற இத்தளம் மிக முக்கியமானதாகும். மேலும் இதனுள் இடுகை இடுதலை யார் வேண்டுமானாலும் செய்யலாம். யார் வேண்டுமானாலும் திருத்தலாம். அதற்கான வழிமுறைகள் படி நுழைய வேண்டும். இதனை வளப்படுத்தவே தற்போது இளைஞர்களுக்குப் போட்டிகள் வைக்கப் பெற்றுள்ளன.

இணையப் பரப்பில் அடுத்து முக்கியமாகக் கருதத்தக்கது இணைய இதழ்கள் ஆகும். இணையத்தில் மட்டுமே இடம் பெறும் இதழ்களை இணைய இதழ்கள் என்று குறிப்பிடவேண்டும். பிரபல தமிழ நாளிதழ்கள், தமிழ் வார இதழ்கள் அனைத்தும் இணைய முகவரியைப் பெற்றுள்ளன. இருப்பினும் இவற்றை இணைய இதழ்கள் எனக் கருதமுடியாது. இணையத்தில் மட்டுமே செய்திகளைத் தருகின்ற இதழ்களே இணைய இதழ்கள் எனப்படும். அவ்வகையில் குறிக்கத்தக்க தமிழ் இணைய இதழ்களாக கருதத்தக்கனவாக திண்ணை, பதிவுகள், முத்துக்கமலம், வரலாறு.காம், வார்ப்பு, நிலாச்சாரல், தமிழோவியம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். பதிவுகள், நிலாச்சாரல், தமிழோவியம் போன்றன வெளிநாட்டுத் தமிழர்கள் நடத்தும் இணைய இதழ்கள் ஆகும். இவற்றுள் திண்ணை இதழ் மிகச் சிறப்பான இடத்தை வகித்து வருகின்றது. இது வாரம் ஒருமுறை தன் பக்கத்தை மாற்றி அமைக்கிறது. பல இலக்கியச் செய்திகள் இதில் இடம் பெறுகின்றன. வார்ப்பு இதழ் கவிதைகளை மட்டுமே தாங்கி வரும் இதழாகும். இதனுடன் கவிதை நூல்களின் விமர்சனங்கள், மற்றும் நிகழ்வுகளின் அறிவிப்புகள் போன்றனவும் இவ்விதழில் இடம் பெறுகின்றன. இது தவிர இன்னும் பல இணைய இதழ்கள் தமிழ் இணையப் பரப்பில் உள்ளன.

வரலாறு .காம் என்ற இதழ் திருச்சி அறிஞர் கலைக்கோவன் அவர்களின் மேற்பார்வையில் நடத்தப் பெற்றுவருகின்றது. இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தின் பல செய்திகளை, அரிய புகைப்படங்களுடன் தாங்கி வரும் இணைய இதழ் இதுவாகும். பழைய இதழ்களைக் காணும் வசதியும் இதில் உள்ளது. எனவே இது நல்லதொரு ஆவணமாக விளங்குகின்றது. ஏறக்குறைய ஆயிரம் செய்திகளைத் தொட்டுவிடும் தூரத்தில் இது வளர்ந்து வருகிறது. இது ஒரு மாத இதழாகும்.

செய்திகளை மட்டும் வழங்கும் தமிழ் இணைய இதழ்களும் உள்ளன. தட்ஸ் தமிழ்.காம், எம்.எஸ்.என் வெப்தூனியா.காம், யாஹூ தமிழ்.காம் போன்ற தளங்கள் இவ்வகையில் குறிக்கத்தக்கன. இந்நிறுவனங்கள் உலக அளவில் பெருமை பெற்றனவாகும். இவை தமிழிலும் தளங்கள் வைத்திருப்பது தமிழின் இணைய வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுவதாக உள்ளது. இவற்றின் வழி உலகத்தின் உடனடிச் செய்திகளை உடனே தெரிந்து கொள்ளமுடிகின்றது.

தமிழ் இணையப் பரப்பில் தற்போது வலைப்பூக்கள் அதாவது பிளாக்கர் என்ற அமைப்பு மிகச் சிறந்த இடத்தைப் பெற்றுவருகின்றது. கூகிள் என்ற நிறுவனம் பிளாக்கர் என்ற வசதியை வழங்குகின்றது. இந்த வசதி கூகிளின் மின்னஞ்சலான ஜிமெயில் பெற்றிருப்பவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஜி மெயில் முகவரியைப் பெற்றுள்ள எவரும் பிளாக்கரைத் தொடங்கலாம். எத்தனை வேண்டுமானாலும் தொடங்கலாம். பிளாக்கரில் புகைப்படங்கள், அசை படங்கள், படக் காட்சிகள் போன்ற எவற்றையும் சேர்க்க முடியும். அவற்றைப் பகிர்ந்துகொள்ள முடியும். பகிர்ந்து கொண்ட செய்திகளுக்கான விமர்சனங்களையும் பார்ப்பவர்கள் வழங்கமுடியும். இந்த வசதி மிகச் சிறப்பானதாகும். வளவுபிளாக்ஸ்பாட்.காம், மானிடள்பிளாக்ஸ்பாட்.காம், இட்லிவடைபிளாக்ஸ்பாட்.காம், மலையருவிபிளாக்ஸ்பாட்.காம், தமிழ்க்கடல்பிளக்ஸ்பாட்.காம் போன்றன இவ்வகையில் குறிக்கத்தக்கன.

இந்த வலைப்பூக்களில் இடம் பெறும் செய்திகளை ஒன்று கூட்டும் அரங்கங்கள் பல உள்ளன. அதாவது ஒருவர் வலைப்பூவில் ஒரு செய்தியைப் பதிவு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம் அதனை ஒருங்குகூட்டும் ஒரு அமைப்புக்கு அவர் தெரிவித்து விடவேண்டும். அதன்பின் அந்த ஒருங்கு கூட்டும் இணையப்பக்கத்திற்கு வரும் அனைவருக்கும் அந்தச் செய்தி தெரியவரும். இதன் முலம் வலைப்பக்கச் செய்திகள் பரவலாக்க முடிகிறது. இந்த ஒருங்கு கூட்டும் இணையப் பக்கங்களில் திரட்டி.காம், தமிழிஷ் .காம், தமிழ்மணம் .காம், தமிழ் வெளி.காம் போன்றன குறிக்கத்தக்கன. தமிழ் இலக்கியப் பாடல்களைத் தக்க இசையோடு பல இணையதளங்கள் தருகின்றன. இசைத்தமிழை வளர்க்கும் இனிய பணி இதுவாகும். முருகன் குறித்த தமிழ் இலக்கியப் பாடல்களைக் கேட்கவேண்டுமானால் கௌமாரம்.காம் செல்ல வேண்டும். தமிழ் மரபு இசை மாறாமல் திருப்புகழ், திருமுருகாற்றுப்படை போன்றவற்றை இதில் கேட்டு ரசிக்கலாம். பன்னிரு திருமுறைகளையும் மரபு இசையுடன் தேவாரம்.காம் என்பதில் கேட்டு ரசிக்க முடியும். ஓதுவார்.காம் என்பது தமிழக இசைவாணர்களான புகழ்பெற்ற ஓதுவார்களின் இசைவடிவங்களை இணைத்துத் தரும் தளமாகும். இதுபோன்று ஆழ்வார்பாசுரங்கள் http://www.tamilheritage.org) என்ற தளத்தின் வாயிலாகக் கேட்க முடியும்.

இணையத்தமிழ் வானொலி சேவை இன்னும் குறிக்கத்தக்கதாகும். பி.பி.சி தமிழ்ச்சேவை, வேரித்தாஸ்வானொலி, சக்தி பண்பலை போன்றன இவற்றுள் குறிக்கத்தக்கன. இதனுள் மிக முக்கியமான வசதி என்னவென்றால் நாள் தேதி குறிப்பிட்டு வானொலி நிகழ்ச்சிகளைத் திரும்பக் கேட்க இயலும் என்பதுதான். வானொலி நிகழ்ச்சிகளை உரிய நேரத்தில் கேட்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இவற்றில் இல்லை. தேவையான நிகழ்ச்சியை தேவையான போது கேட்டுக் கொள்ளும் வசதி இதனுள் உள்ளது.

இதுதவிர தமிழ்த் திரை இசைப் பாடல்களைக்கேட்க பல தளங்கள் உள்ளன. தேனிசை. காம், ஓசை.காம் போன்றன இவ்வகையில் குறிக்கத்தக்கன. இவ்வாறு இசைத்தமிழ் பல நிலைகளில் முன்னேறி இணையத்துக்குள் ஆட்சி செலுத்தி வருகின்றது.

இதுதவிர குழந்தைகள் கற்பதற்கான தமிழ்ப் பாடத் தளங்கள் பல உள்ளன. குறிப்பாக தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தளம் இதற்குப் பெரிதும் உதவுகின்றது. மழலைக் கல்வி முதல் இளங்கலைக் கல்வி வரை அனைத்து நாட்டுத் தமிழரும் கற்கும் வண்ணம் ஒலி, ஒளிக் காட்சிகளுடன் பாடங்கள் இதனுள் அமைக்கப் பெற்றுள்ளன. மேலும் இணைய வகுப்பறை சேவையும் இதனுள் தொடங்கப் பட்டுள்ளது. இதன் வழியாக வகுப்பறைத் தோற்றத்தினை வீட்டில் அமர்ந்து பெற இயலும். இணையவழித் தேர்வுகளும் இதன் வழியாக நடத்தப்படுகின்றன.

மழலைகள்.காம் என்ற தளமும் குழந்தைகளுக்கான தகவல்களை வழங்கி வருகிறது. இதுபோன்று பல தளங்கள் தமிழைக் குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. இதுதவிர தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் தன் பாடநூல்களை இணையத்தில் இட்டுள்ளது. இதன் காரணமாக இந்தப் பாட நூல்களை உலகத்தமிழர் காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் குறிப்பிட்ட பாட நூலைத் தன் குழந்தைகளுக்கு வழங்கி அவர்களின் தமிழறிவை வளர்க்க இயலும். இவ்வாறு அடுத்த தலைமுறைக்குத் தமிழ் இணையத்தின் வாயிலாகக் கொண்டு சேர்க்கப்படுகிறது. இதுதவிர நகைச்சுவைப் பக்கங்களும் உள்ளன. அப்புசாமி. காம் என்ற தளம் பிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியால் நடத்தப்படுகிறது. இவரின் கைவண்ணத்தில் எழுந்த நகைச் சித்திரங்களை இவற்றில் வாசிக்க முடியும். இதுபோன்று தனிநபர் இணையப் பக்கங்களும் தமிழில் அதிகமாக வாசிக்கப் பெறுகின்றன. எழுத்தாளர்களான ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா போன்றோர் தனக்கான இணையப் பக்கங்களை உருவாக்கியுள்ளனர். இதனுள் வாசகர்களுடனான உரையாடலையும் அவர்கள் நிகழ்த்துகின்றனர். சமையல் குறிப்புகள், ஜோதிடக் குறிப்புகள் போன்றவற்றைத் தமிழில் தரும் தளங்களும் உள்ளன.

மின்அஞ்சல் குழுமங்கள் என்ற குழு அமைப்பும் இணையத்தமிழுக்குப் பெருமை சேர்த்து வருகின்றது. அதாவது மின் அஞ்சலை ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்பலாம். இதற்குக் குழு மடல் என்று பெயர். இந்தக் குழு மடல் போலவே ஒரு குழுவை மின்அஞ்சல்காரர்கள் உருவாக்கிக் கொள்வார்கள். இதில் இணைவதற்கு உரிய நடைமுறைகளைச் செய்துவிட்டால் ஒருவர் மின்மடல் குழுமத்தில் உறுப்பினராகிவிடலாம். பின் ஒருவர் இடும் மடல் அனைத்து உறுப்பினருக்கும் கிடைக்கும். ஒரு செய்தியைப் பற்றி அனைவரும் விவாதிக்கலாம். இந்த முறையில் முத்தமிழ்குழுமம், மின்தமிழ் குழுமம் போன்ற மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றன. இவையும் பல இணையத் தமிழ் விவாதங்களுக்கு களம் அமைத்துத் தருகின்றன.

மொத்தத்தில் உலக அளவில் தமிழின் தரத்தை உயர்த்த இணையத்தமிழ் உதவி வருகின்றது. இதனைச் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டிய கடமை அனைத்து தமிழ் இணையப் பக்கங்களுக்கும் உண்டு.