Saturday, January 31, 2026

சூது பவளம் கண்டேன் அல்லேன் - கவிதை நூல்

கவிஞர் வி.சங்கர் எழுதிய 'சூது பவளம் கண்டேன் அல்லேன்' எனும் நூல் அறிமுக நிகழ்வில் பங்கேற்றேன்.


பல பிரயத்தனங்களுக்குப்பின் வி.சங்கரின் கவிதைகளை வாசித்து... 

நூல் குறித்து நானும்... 

அதுவாவது...

வி.சங்கர் மரபார்ந்தச் சொற்களால் தனியொரு நடையில் ஒரு நவீன உலகை வடித்துக்காட்டியிருக்கிறார். நான்கு பிரிவுகளாக அமைந்துள்ள நெடுங்கவிதைகளாக நூல் ஆக்கம் பெற்றுள்ளது. சில வரிகள் ரசிக்க வைத்தன. பல வரிகள் சமீபத்தில் எங்கோ வாசித்தது போன்றிருந்தன. மு.மேத்தா, கலாப்பிரியா, விக்கிரமாதித்யன், அபி, சுப்ர பாரதிமணியன் கவிகளின் தாக்கம் இருப்பதாகப்பட்டது. அகமனத்துணர்வுகளை விரித்துப்போடும் லாவகத்தை வாசிப்பில் பெற்றுவிட்டபின் கவிதை முனைதல் இயல்பானது. நன்முயற்சியும் கூட. கவிதை கண்டு / கொண்டு வியந்தேன் அல்லேன். ஆயினும் இப்படைப்பு ஒரு சிறந்த கவிதை முயற்சி என்பேன்.

சங்கரின் தேர்ந்த வாசிப்பில் வசப்பட்ட மரபுச் சொல்திறம் கவிதைக்குள் உள்ளடக்க வலுவற்று திக்கற்று, இலக்கற்றுத் திரிகின்றன. மரபுச் சரடுகளை எத்தனைதான் தூசுதட்டி நவீனத்தை உடுத்தினாலும் மரபின் கசடுகளைத் துடைத்தெறிய முடியாமல் தடுமாறித்தான் போகிறோம். சமூகப் பிரக்ஞை ஏதுமற்று காணும் காட்சிகளிலும் உணர்தல்களிலும் பித்து நிலைக்குப் போய் சொத்தை விளம்பல்களாகக் கவிதைகள் நின்றுவிட்டது போன்ற உணர்வைப் பெற்றேன். சங்கரின் சொற்பிரயோகங்கள் கவர்கின்றன. ஆனால் கவிதைப்பயனாக பெறப்பட்டவை மிகச்சிலவே என்பது ஏமாற்றம். பெருந்தீனி தந்தாரில்லை. சிற்றுண்டி விளம்பினார் என்பேன். இப்போதெல்லாம் தனிமனித உணர்தலும் புலம்பலும் ஏனோ என்னைக் கவர்வதில்லை. அது என் குறையாகக் கூட இருக்கலாம்.

சுருங்கச் சொன்னால்... சங்கரின் படைப்பில்...

1.கருவி (மொழிவளம், சொல்லாட்சி) திறம்பட்டது...

2.செயல் (கவிதையாக்கம்) இலக்கற்றது.

3.விளைச்சல் (கவிப்பயன்) மிகக் குறைவு.

எது எப்படியாயினும் சங்கர் எனும் சகவாசகனின் ஆக்க முயற்சியை உள்ளன்போடு வாழ்த்துகிறேன். 

தன் காலத்து அறிவுச் செயல்பாட்டினரை இலக்கியப் புலத்துக்கு அடையாளம் காட்ட எத்தனிக்கும் அன்பு நண்பன் கவிஞர் மதார் அவர்களை விழிவிரியப் பார்க்கிறேன். பெருங்கவிகள் செய்யத்தவறிய செயலதுவாதலால்.! 

கவிஞர்கள் வண்ணதாசன், லஷ்மி மணிவண்ணன், மதார், இளம்பரிதி மற்றும் விமர்சகர் ஈஸ்வரன், எழுத்தாளர்கள் சங்கர் ராம், மோகனரங்கன், இளங்கோமணி, திவ்யா ஈசன் உட்பட பலர் அமர்வில் பங்கேற்று சிறப்பித்தார்கள். 


எழுத்தை ஆய்ந்தறியும் ஆவல்மிக்கக் குழாமோடு கலந்ததில் மகிழ்ச்சி.! நன்முயற்சிகள் தொடரட்டும். வாழிய தமிழ்க் கவிப்புலம்.


-சி.விஜய்

Tuesday, June 3, 2025

பாலூட்டி வாழ்வு

 பாலூட்டி வாழ்வு


அணுத்திரட்சியின் நுண்வெளி

அண்டத்தில் கருஉருவானோம்.!

பாலூட்டிகளாகத்தான் பிறந்தோம்.!

மழலை மாறும்வரை மாறாதிருந்தோம்.!

இது இங்கே இப்படியானதைக் கற்பித்தது.!

கற்றதனால் பெற்றவற்றால் மாறினோம்.!

நான் ஆணாக... அவள் பெண்ணாக...

மேலும் கற்றோம்... ஆழம் உற்றோம்.!

கற்றதையும் கற்பித்ததையும்

மாற்றுவதற்கு கற்றுக் கற்பிக்கிறோம்.!



அணுவணுவாய் திரட்டுகிறோம்

அண்டவெளி கடந்து செல்ல.! 

திரள்... திரட்டு... மாறு... மாற்று...

எனும் மந்திரப்பாட்டை 

செங்கருநீலச் சங்கோசையுடன்

முழங்குகிறோம் இயன்றமட்டும்.!

ஊழிப் பெரும்பசி

 ஊழிப் பெரும்பசி

யாரங்கே.!

பெருந்தீனிக்காரனென்றும்

பேராசைக்காரனென்றும்

மூத்திர முடுக்குகளில் நின்று

முணுமுணுத்துப் பேசுவது.!


நானே சொல்கிறேன்.! 

கேளுங்கள்.!

வேனிற்காலத்து 

வெந்தளிர்க் கன்று நான்.!

கொடும்பசிக் காலத்து 

கொடும் புலிப்பரள் நான்.!

ஆம்,

எனக்கு 

பெரும்படையல் வேண்டும் தான்.!

நான் உண்பவை நாழியுமல்ல 

நான் உடுப்பவை இரண்டுமல்ல.! 

ஊழிக்காலத்து பெரும்பசி எனது.!


உண்டால் அம்ம இவ்வுலகம் 

எனக்கு ஊட்டிவிட்டதுண்டோ.!

என் மலரா உலகத்துள்

மன்னர் உயிர்த்ததுண்டோ.!

விலங்கனைய என்

ஏதிலி வாழ்வும் பின் மதிப்பும்

அனுபவித்துக் கடந்தால்

அப்போழ்தே மேலுலகமாம்.!


என் கதை கொடிது.! பெரிது.!

இனிதும் கூடத்தான்

ஆனால்

பார்க்க.. படிக்க... கேட்க மட்டும்.!


என் தொல்பசிக் கதைகளால்

இலக்கிய வாய்களுக்கு 

வாய்க்கரிசி இடுகிறேன்.!

பிழைத்துக் கிடக்கட்டும் தமிழ்த்தாய்.!


வழிநெடுகிலும்

வருணமாய் வர்க்கமாய்

உழைத்துக் கிடக்கிறேன்.!


வியர்வை ஒழுகும் 

என் முதுகுத் தழும்பில்

சாட்டை இட்டது 

நீங்கள் தானோ.!


கொஞ்சம் நில்லுங்கள்.!

எடுத்து வருகிறேன்.!

என் வீட்டிலும்

உண்டு ஒரு சாட்டை.!


- சி. விஜய்

Wednesday, April 16, 2025

புனைவோடையுள் ஊடிக் களிப்புறும் வாசக மனம்

 புனைவோடையுள் ஊடிக் களிப்புறும் வாசக மனம்

இலக்கியப் படைப்பு என்பது மனித மனத்தின் புறச்சூழல் உடனான அனுபவங்கள், சிந்தனைப்புலங்கள் மற்றும் விருப்பங்களின் மொழிவழி வெளிப்பாட்டுக் கலைச் செயல்பாடாகும். இலக்கில்லா இலக்கியங்கள் என்று ஏதுமில்லை. வார்த்தைகளை வீணில் வீசியெறியும் வசவுகளுக்கும்கூட இலக்குகளில்லாமலில்லை. இலக்கியத்தின் இலக்கு வாசக மனம் தான். இலக்கிய ஆக்கியோன் பல்வகை உத்தியும் சொல்லாட்சி மற்றும் வாதத் திறன்களும் கொண்டு தன் நனவுலக / கனவுலக அனுபவங்கள்வழி தானடைந்த உணர்வை வாசகனுக்குத் தந்துவிடும் இலக்குடன் இலக்கியப் படைப்பு முனைகிறான். ஆக்கியோனின் அனுபவப் பிரதியாகவே கலைப்படைப்பு எழுகிறது. 

இலக்கியப் படைப்பு எப்போதும் அரூபமான வாசகனை நோக்கியதுதான். வாசக மனத்தின் ஏற்பினை ஒட்டியே இலக்கியம் இலக்கை அடைகிறது. வாசகனே ஒரு இலக்கியத்தின் நீதிபதியாகிறான். வாசகனின் புரிதலிலிருந்து ஏற்பு, மறுப்பு, தர்க்கம், மாற்று என பன்முகத் தளங்களில் புத்தொளிக் கதிருடன் விரிகிறது படைப்பின் ஆன்மா. ஆனால் எல்லா வாசிப்பும் படைப்பின் ஆன்மாவை நெருங்குவதில்லை. “என் படைப்புகளின் உள்ளொளியைப் பெற்றவர்கள் குறைவு. என்கிற வருத்தம் எனக்குண்டு என்றாலும் பிரவாகிக்கும் என் படைப்புகளின் வீச்சுக்குள் கலந்துக் களிப்புறும் வாசகனுக்காக இதே வீரியத்தை நான் பாதுகாத்துப் பரிமளிக்கிறேன்.” என்ற தமிழவன் கூற்றினை இவ்விடம் நினைவு கூரலாம். 

படைப்பெனும் பிரதியின் உள்ளொளியை நெருங்கி நுகரும் வாசகன் இன்னொரு படைப்பாளனாகுமிடம் விமர்சனம் ஆகும். வாசிப்பின் முதிர்ச்சியானது, இலக்கியப் பெருவெளியில் தான் கூடிக் களித்த கலைப்புல வளமையை மீண்டும் மொழி வழியேப் பிரதியெடுக்கும். அவ்வாறான வாசகப் பிரதிகள் மூலப்பிரதியின் சுவை நரம்புகளைச் சுண்டி நின்று ரீங்கரிக்கும். இந்த இசைச் சுரத்தில் மூலப்பிரதியை மிஞ்சியும் மனம் ஒன்றுதலுண்டு. அவ்வாறாக பிரதியின் பிரதிமையாக வாசகக் கண்ணோட்டத்தில் இருந்து இயக்கங்கண்டுள்ள எழுத்தாக இரா. அந்தோணிராஜ் அவர்களின் “இக்கால இலக்கியப் போக்குகள்” எனும் நூல் அமைந்துள்ளது. பதினேழு கட்டுரைகளின் தொகுப்பாக வெளியாகியுள்ள இந்நூல், நூலாசிரியரின் வாசிப்பு அனுபவங்களின் கோர்ப்பாக அமைந்துள்ளது. 


வியப்பூட்டும் வாசிப்பு வெளி

இரா.அந்தோணிராஜ் வாசிப்புக்குத் தேர்ந்துள்ள நூல்கள் மற்றும் சிந்தனைப்புலங்கள் தமிழ் வாசிப்புப்புலத்தில் தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் நீங்கலாக வெகுசிலரால் மட்டுமே அணுகப்பட்டவையாகும். ஆய்வு நோக்குகளிலிருந்து விலகி வெகுசன வாசகப் பரப்பிலிருந்து இந்நூல்கள் வாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டமை சிறப்பு. பின்நவீனம், பின்காலனியம், மாய யதார்த்தம், விளிம்புநிலையியம், பெண்ணியம், சூழலியம் உள்ளிட்ட சிந்தனைப் புலங்களைப் பற்றுக்கோடாகக் கொண்டு வாசிப்புக்குள் பயணித்தமை புதிய வாசிப்புத் தூண்டலுக்கான முனைப்பு. ஒரு வாசக மனம் இங்ஙனமெல்லாம் பயணித்திடுமா என்பதை எண்ணுகை வியப்பும் அருமையுமாகும்.

ஜிதேந்திரனின் துகினம் நாவல் மெல்லிய உணர்வுகளை இழையோட்டிப் பார்க்கிற கதைப் பனுவலாகும். இந்த நாவலுடனான விவரிப்புகளிலும் விமர்சனத்திலும் மென்மையைப் பரவ விட்டுள்ளார் இரா.அந்தோணிராஜ். புதுமைப்பித்தனின் கதைபோக்கும் பாங்கு, கருத்தைப் புதைத்துப் புனையும் திறம், உரையாடல் நேர்த்தி, பாமர இலக்கியத் தன்மை, கருத்தியல் சார் புனைவு நுட்பம் போன்றவை ஒரு நூற்றாண்டு படைப்பாளர்களின் ஊக்க மருந்தும் சத்துணவுமாகும். ஆனால், இந்தத் தாக்கத்தை சமகாலப் படைப்புகளுக்குள் அலைந்து தேடி வெளிப்படுத்துகின்ற முனைப்பு புருவமுயர்த்தி கண்களை விரியச் செய்கிறது. வைரமுத்துவின் கவிதை வழியாகச் சூழலியச் சிந்தனைப் புலத்தைத் தொட முனைந்திருக்கும் முயற்சி இயல்பான கட்டுரையாக்கத் தன்மை கொண்டுள்ளது.

திகைப்பூட்டும் காட்சிக் கோணங்கள்

நூலாசிரியரின் வாசக மனம் நாவல்களுடன் பெரிதும் விரும்பிப் பயணித்திருக்கிறது. என்றாலும் படைப்பின் புனைவுக்கும் நனவுலக நடப்பிற்கும் இடையிலான இடைவெளியைக் கருத்தியல் கொண்டு நிரப்பியிருக்கிறது. சான்றாக, சுரேஷ்குமார் இந்திரஜித்தின் கடலும் வண்ணத்துப் பூச்சியும், ரயில் ஆகிய நாவல்களை அணுகிய மனப்பாங்கு ராஜநாயகத்தின் காலமற்ற காலத்தை பின்னையத்துக்குள் பொருத்தி ருசிக்கிறது. தொடக்கநிலை வாசிப்புக்கும் முதுநரை முதிர்நிலை வாசிப்புக்கமானத் தொலைவை வெகு இயல்பாகக் கடந்து நிற்கிறார் இரா.அந்தோணிராஜ். 

எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரத்துள் நூலாசிரியரின் சஞ்சரிப்பு சற்றே விரிவானது. எஸ்.ரா கதை சொல்லும் பாங்கினைப் போலவே மிக எளியது. இடஞ்சுட்டிப் பொருள் விளக்குதல் போல சஞ்சாரத்தின் பயணப்பிரதியை திண்ணைக் கதை போன்று உட்பொதிவைச் சுட்டி விளக்குகின்றமை சிறப்பு. பிரதியின் புலப்பாட்டுக்கேற்ப தன் வாசிப்பனுபவ எடுத்துரைப்பினைப் பொருத்திக்கொள்ளும் இலாவகம் அவர்தம் மொழிப் பழக்கத்தின் விளைச்சலாகக் கருதிக்கொள்ளலாம். 

மூன்றாம் பாலின நடப்புகளை நாவல்களையும் ஆய்வுகளையும் முன்வைத்து விளக்கியிருத்தல் தரமான தகவல் திரட்டு. மணிமேகலை மறுவாசிப்புகள் பல்வேறு நிலைகளில் சமூகக் கட்டுடைப்புகளை நிகழ்த்திவரும் சூழலில் விளிம்புநிலையியப் பார்வை ஊடான குறுக்கு வெட்டு பாய்ச்சல் புது வெளிச்சமாகும். மனிமேகலைக் கதைகளின் நம்பகத்தன்மையைத் தாண்டி படைப்பு வெளி உள்ளீடுகளை ஆசிரியர் நிரல்பட விளம்பி நிற்கிறார்.

மெச்சத்தக்க விசாரணைகள்

தமிழ் இலக்கிய வெளிக்குள் அறம் என்கிற பொதுச் சமூக ஏற்பாட்டினுள் புறக்கணிக்கப்பட்ட உழைக்கும் தொல்குடி மக்களின் நிலைகளை கட்டுடைத்து முன்னை மாதிரிகளை கலைத்துப்போட்ட அறிஞர்களான ராஜ்கவுதமன் மற்றும் தமிழவனின் முன்வைப்புகளை ஆய்வு நோக்கில் கையாண்டிருக்கும் பகுதியில் நூலாசிரியரின் சிந்தனைத்திறம் மிளிர்கிறது. விசாரணையின் மீதான மறுவிசாரணையாக நடைபெறும் விவாதம் இறுதியில் அறிஞர்கள் ராஜ்கவுதமனும் தமிழவனும் வழங்கியத் தீர்ப்பையே வழிமொழிகிறது. இக்கட்டுரை முந்தைய சிந்தனை வெளிச்சத்தின் மேல் கூடுதல் வெளிச்சமேற்றியுள்ளமை சிறப்பு. 

பெண் எழுத்தும் பெண்ணிய எழுத்தும் மோதிக்கொள்கிறச் சூழலில் பெண்மொழி குறித்த உரையாடலைத் தொட்டிருக்கும் ஆசிரியர் துணிச்சலானவர் தான். சங்கப் பெண் மொழி முதல் சமகாலப் பெண்மொழி வரை விவாதத்துக்குள் கொண்டமைத்திருப்பது வாதங்களுக்கு வலு சேர்க்கிறது. ஆணின் மொழியில் பெண்ணின் பிரதிமைகள் போலிகளாகிப் போனமையை உரிய சான்றுகளுடன் விளக்கியிருத்தல் கூடுதல் புரிதலுக்கு இட்டுச்செல்கிறது. குறுந்தொகை, நவீனக் கவிதைகள், மாலதி மைத்ரியின் கவிமொழி ஆகியன ஊடாகப் பயணிக்கும் உரையாடல் அருமை. 

அனைத்துக் கட்டுரைகளின் இறுதியிலும் வழங்கப்பட்டுள்ள கடைசி பத்தி ஆசிரியரின் தீர்மானப் பிரகடனமாக அமைகின்றது. மேலும், சுபம் என்று முடிகின்ற டூரிங் டாக்கீஸ் படம் போன்று திருப்தியளிக்கிறது. குறிப்பாக, 9, 10, 11 மற்றம் 17 ஆகிய கட்டுரைகள்.

எதிரிடை முரண்களும் சில…

விலை போன கலை என நவீன முதலாளியக் கலைத்துறைச் சந்தைமய நிலையை விமர்சிக்கிறப் பகுதிகளில் வாசக மனத்தின் அங்கலாய்ப்பம் சீற்றமும் வெளிப்படுகிறது. “எல்லா எழுத்தும் கலை அல்ல.” (பக்: 38) “ஒரு கலையின் வெற்றியை அக்கலை தான் தீர்மானிக்க வேண்டும்… ஆயக்கலைகள் அறுபத்து நான்கு… கலை இலட்சியமே கலைதான்.” (பக்: 39) “கலை கற்பனைக்காக என்கிற நிலை மாறி கலை விற்பனைக்காக என்றாகிவிட்டது.” (பக்: 40) “கலையை ஆராய்வதை விட அனுபவிப்பதே சிறந்தது.” என்பவை சீற்றத்தின் விபரீதங்களாகக் கருதலாம். இக்கட்டுரையின் முன் பின்னான முரண் கருத்துக்களால் மய்யப் பொருளை விளங்கிக் கொள்வது சிரமமாகவே இருக்கிறது. சற்றே நிதானித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

திருநர் குறித்தக் கட்டுரையில் திருநர் என்கிற விளி பதத்தைப் பயன்படுத்தியிருக்கலாம். ஏனைய விளிகளைக் காட்டிலும் அது சிறப்பானது. மேலும் திருநர்களை ஆண்பால் மற்றும் பெண் பாலிலிருந்து பிரித்தறியுமிடத்து ஆசிரியரின் கருத்தில் மாறுபட நேர்கிறது. ஆண் என்பது நடை, உடை, பாவனை உள்ளிட்ட புலனுணர்வு வெளிப்பாட்டினை மட்டும் மய்யமிட்டதன்று. அது பாலுறுப்பு மாறுபாடு குறித்ததுமாகும். இப்பொருண்மை குறித்து சற்றே விரிவாக விவரித்து விரித்திருக்கலாம்.

கட்டுரைகள் பலதளங்களிலான வாசிப்பை மய்யமிட்டுக் கலைந்து கிடப்பது சற்றே துருத்தி நிற்கிறது. சான்றாக, ராஜ்கவுதமன், தமிழவன் ஆய்வுகள் ஒருபுறம் காத்திரமாய் நிற்க, மறுபுறம் வைரமுத்துவின் கவிதை வழியாகச் சூழலியம் நோக்கிய புறப்பாடு தொய்வளிக்கிறது. காத்திரமான விசாரணைகளிலிருந்து விடுவித்து இன்புறு நோக்கிற்கு தன்னை மாற்றிக்கொள்ளும் வாசக மனத்தின் இயல்புப் பண்பாக இதனைக் கொள்ளலாம். என்றாலும், ஒரு விமர்சன நூல் வாசிப்புக்குள் இத்தன்மை பொருந்திடவில்லை.

வாழ்த்தும் எதிர்நோக்கும்

இந்நூலின் மொழிநடை இலக்கியச் செழுமைமிக்கது. வாசிப்போர்க்கு பல கலைச்சொற்களை அறிமுகம் செய்கிறது. கட்டுரையை கருவை நோக்கிச் செலுத்தும் பாங்கு சிறப்பு. அறிமுகநிலை வாசகர்க்கு உந்துதலையும் தேர்ந்த வாசகர்க்கு புத்தொளியும் ஆய்வுநிலை வாசகர்க்கு புதியத் திறப்புகளையும் தந்து நிற்கும் இந்நூல் தனது இலக்குகளை அடைந்திட வாழ்த்துகள். தம் வாசிப்பனுவங்களை அதன்வழி பெறப்பட்டச் சிந்தனை நுட்பங்களை நூலாக்கித் தந்திருக்கும் இரா.அந்தோணிராஜ் அவர்கள் தொடர்ந்து பல நூல்களை வழங்கிட வேண்டும். 

வணக்கம்.

சி.விஜய், தமிழாசிரியர், தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை.


Monday, April 7, 2025

இயங்கியல் புணர்ச்சி (ஒரு பக்கக்கதை)

 குட்டிக்கதை (07.04.2025)

இயங்கியல் புணர்ச்சி 

இன்று அந்த ஓட்டுத் துண்டைப் பார்த்தேன்.!

அந்த நாயின் தோலும் முடியும் ஒட்டியிருந்தன.!

விழுந்த இடத்தில் தான் கிடந்தது.!

நாயும் அந்த ஓட்டுத்துண்டும்.!

இந்த கேன்டீனை விட்டால் 

அந்த போக்கற்ற நாய்க்கு போக்கிடமில்லை போல.!


அந்தப் பையன் வெகுளியாய் தான் எறிந்தான்.!

நாய் தன் பெடையைச் சேரும் நிலையைக் கண்ட

யார்தான் வெகுளாமல் இருந்தோம்.!


நமக்கு நம்மவர்கள் சொல்லாமல் சொன்னதுபோல

பொதுவெளியில் புணர்வது தவறென 

அந்த நாய்க்கு எந்த நாயும் சொல்லியிருக்க 

வாய்ப்பில்லை தானே.!


சம்பவம் நிகழ்ந்து சில மாதமிருக்கும்

ஆனாலும் ஏதோ ஒரு குறுகுறுப்பு.!

ஓட்டுத் துண்டை வெறித்துப் பார்த்தவாறு

பழைய எண்ணை சமோசா ஒன்றை

முந்தாநாள் செய்தித்தாளில் நசுக்கி  

எண்ணெய் பிதுக்கிக் கழித்த

ஆசுவாசத்துடன் பிய்த்து வாய்க்குள் ஏற்றினேன்.!


வாலை ஆட்டி ஓடிவந்தது செவலையும்

செவலைக்கு பிறந்த செவலையும்.!

ஓட்டுத்துண்டால் பிய்ந்த முதுகில் 

தடம் கூட மாறவில்லை.!

தலைவன் இயற்கை இயங்கியலை 

இனிதே நிறைவேற்றிவிட்டான்.!


யாரோ எறிகிற ஓட்டுத்துண்டு விமர்சனங்கள் 

நம் முதுகை சொரிய மட்டுமே!

வேலையைப் பாரடா வெண்ணை மகனே.! 

என தன்னைத்தானே தேற்றிக்கொண்டு 

வந்துவிட்டேன் தேர்வ(றை)ரை கண்காணிக்க.!


ஏனோ நாய்குட்டிக்கு 

சிறுதுண்டு சமோசா கூட தரத் தோன்றவில்லை.!

உலக இயங்கியலை 

என் இருத்தலியம் 

வென்றிருக்குமோ.!?


#தமிழ்  #கவிதை #கதை

Saturday, September 28, 2024

போராட்டங்கள் சரியா? தவறா?

 


தொழில் முனையும் என் நண்பர்களுக்காகவும், போராடும் மக்களை வெறுப்பாகப் பார்க்கும் பொதுசமூகத்துக்காகவும் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

உழைக்கும் மக்களின் போராட்ட அரசியல் பற்றி பொதுமக்கள் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும்.

தொழிலாளிகளின் போராட்டங்கள் மூன்று வடிவில் நிகழும், நிகழ வேண்டும் என்கிறார் நா.வானமாமலை.

1.பொருள் ஆதாரப் போராட்டம்

2.அரசியல் போராட்டம்

3.தத்துவப் போராட்டம்

'போராட்டம் என்பது ஓர் அறிவியல் செயல்பாடு' என்பார் சமூகவியல் ஆய்வறிஞர் தொ.பரமசிவன். பொருளாதாரம் என்பது வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிற வாழ்க்கைக் கூறு. பொருளீட்டும் ஆதாரமாக உழைப்பாளி தன்னிடம் இருக்கிற உழைப்பை மூலதனமாக்கி விற்கிறார். முதலாளி அந்த உழைப்புக்கு ஈடாகவே பொருள் தருகிறார். முதலாளியின் லாப நோக்கு தொழிலாளியின் உழைப்பை அதிகப்படுத்தி கூலியைக் குறைக்க முயற்சிக்கிறது. திறன்மிகு தொழிலாளியைப் பெறுவதற்காக உழைக்கும் வாய்ப்பு அதாவது வேலையை வெற்றிக் கோப்பையாக்கி போட்டியை நடத்துகிறது முதலாளித்துவம். இதற்கென ஏற்படுத்தப்பட்ட கல்வி முறையும் (தொழிற்கல்விகள் Technical studies BE, Diploma, கலைக்கல்விகளில் BBA, BBM, IT&M முதலானவை) முதலாளிகளால் விலைக்கு வழங்கப்படுகிறது. (குறிப்பு: இந்த கல்விமுறை பற்றி பேச நிறைய இருக்கிறது) இங்கே உழைப்பை விற்கிற சந்தையில் முதலாளி என்பவர் நுகர்வாளராகவும் இருக்கிறார்.



மேலே குறிப்பிட்ட கல்விமுறை போலவே உழைப்பை மலிவு விலையில் கொள்முதல் செய்ய முதலாளித்துவம் பல உத்திகளை (மதம், இனம், சாதி, இன்னபிற) கையாள்வதோடு அவற்றை வாழ்வியல் நடைமுறையாக மாற்றி பொதுப்புத்தியில் உறைய வைத்துவிடுகிறது. இந்த அமைப்பை தொழிலாளி கொஞ்சமும் விரும்பவில்லை என்றாலும் உழைப்பாளியின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் போன்றவற்றைப் பெற இதற்குள் பொருந்திப்போகிற நிர்பந்தத்தை ஏற்க வேண்டியுள்ளது. 

உற்பத்தியில் முதலாளியின் பங்களிப்பான பொருள் முதலீடும் உழைப்பாளியின் உழைப்பு முதலீடும் சம அளவிலேயே இருக்கிறபோது (ஒன்றிலிருந்து மற்றொன்றைக் கழித்தால் உற்பத்தி நிகழாது) உற்பத்திப் பொருளை சந்தைப்படுத்தி லாபத்தை சுருட்டிக்கொள்கிற போக்கையே முதலாளித்துவம் என்கிறேன் நான். மிகத் திட்டமிட்டு நடைபெற்ற இந்த முறை இப்போது பொது நடைமுறையாகிவிட்டதும் இந்த முறைமைக்கு பொதுஜனம் பழகிவிட்டதும் அடிமைத்தனமன்றி வேறில்லை. 

சரி! போராட்டம் எங்கே நிகழ்கிறதெனப் பார்ப்போம்.

உழைப்பு வாணிகத்தை மேற்கொள்கிற தொழிலாளி தனது உழைப்பை உரிய கூலிக்கு யாரும் வாங்காதபோது பொருளாதாரத் தேவைகளை அடைய முடியாத ஏழையாகிறார். 


முதலாளியோ திறன்மிக்க, குறைந்த கூலி பெறுகிற (குறைந்த விலை நிறைந்த தரம்) தொழிலாளியைத் தேர்கிறார். அவரையும் மேலும் மேலும் சுரண்டுவதோடு அவரைத் திறன்மிகு தொழிலாளியாக தமக்கே எக்காலமும் உழைக்கிறபடி (பண்ணை அடிமை முறை, நவீன சீனியாரிட்டி போஸ்டிங்ஸ்) ஏற்பாடுகளைச் செய்கிறார்.

இந்த சீர்கேடுகளை வெகுசிலரே உணர்ந்துகொள்கின்றனர். உணர்ந்த சிலர் (மார்க்ஸ்) பலருக்கும் பகிர்கின்றனர். இந்தப் புரிதலை எட்டுகிற உழைப்பாளி தான் ஏமாற்றப்பட்டதை, படுகிறதை எதிர்க்கத் துணிகிறார் (துணியாதவர்களே பெரும்பான்மை அதற்கு காரணங்கள் பல).

தனக்காக, தனது வேலைக்காக, போராடவே பொருளாதாரப் போராட்டத்துக்கு உழைப்பாளி (பொதுமக்கள்) வருகிறான். மானுட அபிமானத்துடன் பிறர்க்காக போராட வருகிறவன் (சோஷலிசவாதி) தலைமையேற்கிறான். உலக நோக்குடையவன் (மார்க்ஸ்) தன் சிந்தனையால் இதனை வழிநடத்துகிறான்.

முதலாளித்துவ வலதுசாரி அரசுகளில் தொழிலாளிகளின் போராட்டம் எப்போதும் நடைபெறுகிறது. 

உண்மையில் போராட்டங்களே அரசுகளின் முதலாளித்துவ மனோநிலையின் செயல்பாட்டின் கணக்கீட்டு அளவைகள். 

போராட்டங்களை அரசுகள் அணுகுகிற முறைகளை வைத்து அந்த அரசு எத்தகைய சார்புடையது. அது யாருக்கான அரசு என்பதை முடிவு செய்யலாம்.

போராட்டம் எப்போதும் எல்லா அரசுகளையும் எதிர்த்து நடக்கும். ஒரு உழைப்பாளிகளால் அமையும் பொதுவுடமை அரசுக்கு எதிராக போராட்டம் நிகழுகிறதென்றால் அங்கே முதலாளித்துவம் நுழைகிறதென புரிந்து கொள்ளலாம். அதை போராட்டங்கள் தான் சுட்டிக்காட்டும். அதனை உடனடியாகக் களைந்தாக வேண்டும்.

கைவலிக்குது.!  மீதிய எழுதச் சொல்லி யாராவது கேட்டா அப்புறமா எழுதுறேன். சாரி.

Thursday, September 19, 2024

கருத்தரங்கும் பயிலரங்கும்



கல்லூரிகளில் சடங்குபோல / வருடாந்திர கும்பாபிஷேகம் போல நிகழ்ச்சிநிரல் செய்யப்பெற்று நிகழ்த்தப்பெறும் மாநில / தேசிய / பன்னாட்டு / பிரபஞ்ச அளவிலான கருத்தரங்குகள் போலல்லாமல் சமகால ஆய்வறிவியலில் நின்று கருத்தியல் பயிலரங்குகள் நிகழ்த்தப்பெறுதல் வெகுசில ஆற்றல்சால் கல்லூரிகளிலேயே சாத்தியப்படுகின்றன.

இந்நிகழ்வுகளை சமகால கற்றல், கற்பித்தல் தொழிலாளியாக நின்று கண்ணுறுகையில் நமக்கு சில தோன்றுதல்கள் உருவாகின்றன. 
அவை...
*உள்ளது உரைப்பதும், உற்றன உணர்த்தலும், உறுவன ஓதலும், பெறுவன பகிரலும் வகுப்பறைகளிலேயே நிறைவுற்றப் பின்னும் (நிறைவுற வேண்டும்) கருத்தரங்குகள் அதே வகுப்பறை பாணியில் அமைய வேண்டியதில்லை. அமர்வு அமைப்புகள் மறுபரிசீலனை செய்யப்பெற வேண்டும். விவாதப் பெருவெளி இன்னும் அதிகம் திறக்கப்பட வேண்டும். விரிவாகக் கூறினால், பயிலரங்கத் தலைப்புகள் முன்பதாகவே பங்கேற்பாளர்களுக்குத் தரப்படலாம். பங்கேற்பாளர்கள் தலைப்புகளிலிருந்து வினாநிரல் தயார்செய்து வரலாம். வினவப்படும் வினாக்களின் பொருண்மையினின்று கருத்துரை விரியலாம். விடையிறுப்புகள் குறிப்பிட்ட நேர வரன்முறை செய்யப்பெறுதல் கூடாது. ஒரு நாளில் முற்பகல், பிற்பகல் என  இரு அமர்வுகள் மட்டுமே திட்டமிடப்படலாம்.

*குறிப்பாக தத்துவப் பயிலரங்குகளில் தலைப்புகள் காலமுறைப்படி நிரல்செய்யப்பெற்று வழங்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாகவும் கூடுதல் புரிதலுக்கும் உட்பட்டிருக்கும். அதாவது, உலகாயதம், நியாயம், மாம்சம், மீமாம்சம், வைசேடிகம், சாங்கியம், பவுத்தம், சமணம், வேதம் (வைதீகம்) அவைதீகம், சைவம், வைணவம், கிறித்தவம், முகமதியம், மார்க்சியம், நவமார்க்சியம், திராவிடம், தலித்தியம், பெண்ணியம், விளிம்புநிலையியம், சமகால தத்துவ மீட்டுருவாக்கங்கள் என நீண்டிருந்தால் ஓர் தொடர் புரிதலைப் பெற எளிதாயிருக்கும்.



*சமகாலத்தில் தத்துவ அரங்கில் அதிகம் பேசுபொருளாகியிருக்கும் அவைதீகக் கருத்தியல்களான பவுத்தமும் சமணமும் சில தத்துவப் பயிலரங்குகளில் தலைப்புகளிலேயே இடம்பெறாதது வியப்பு மேலிடச் செய்கிறது. 

*பயிலரங்கில் நிகழ்த்தப்படும் உரைகள் ஆவணமாக்கம் செய்யப் பெற வேண்டும். கருத்துரைகள் கட்டுரையாக அளிக்கப்படுதல் வேண்டும். அளிக்கப்படும் கட்டுரைகள் நூலாகத் தொகுக்கப்படுதல் வேண்டும். குறைந்தபட்சம் காணொளிப்பதிவுகளாவது செய்யப்படுதல் வேண்டும். இத்தகைய செயல்பாடுகள் அரங்குகளில் நிகழ்த்தப்படும் கருத்துரைகள் ஓதல் (Repeat) முறையினின்று விடுபடும். கருத்துரைகள் யூடியூப் பதிவேற்றம் செய்தலால் வெகுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

*கருத்தியல் (தத்துவம்) அறிமுகங்கள், முன்வைப்புகள், விசாரணைகள், தத்துவங்களின் மாற்றுத் திறனாய்வு, காலந்தோறும் மாறிவரும் புரிதல்கள் என களங்கள் விரிவடைய ஏதுவுண்டாகும்.
ஆவணமாக்கங்களால் சம்பிரதாயமாக ஒரே தன்மையில் வாசித்தளிக்கப்படும் / ஓதப்படும் கருத்தியல் வாதங்கள் தவிர்க்கப்படும். ஒரு முக்கால் மணிநேர உரையில் விளக்கிவிட முடிகிற / விளங்கிக்கொள்கிற அளவுக்கு கருத்தியல்கள் அத்தனை எளிதாக நின்றுவிடாது என்கிறபோது அரங்கில் வழங்கப்பட்ட உரையை மீண்டும் வாசித்தோ / கேட்டோ நினைவேற்றி மேலதிகப் புரிதலுக்குட்படுத்த ஆவணமாக்கல் அவசியமாகிறது.



*ஆவணமாக்கம் செய்தலிலும் சில போதாமைகள் தென்படலாம். சான்றாக, கடந்த ஆண்டு ஒரு கல்லூரியில் சாகித்திய அகாதமி நிதிநல்கையுடன் நடைபெற்ற வள்ளலார் கருத்தியல் தொடர்பான கருத்தரங்கு அதிக கவனம் பெற்ற ஒன்றாகும். உள்ளபடியே மிகச்சிறப்பான திட்டமிடுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வின் கட்டுரைகள் நுண்ணிய ஆய்வு நோக்கின. இவ்வாய்வரங்கின் கருத்துரைகள் தொகுக்கப்பெற்று நூலாக்கம் செய்யப்பெற்றன. ஆனால் நூல்கள் விற்பனைக்கு இன்றுவரை வரவில்லை. முன்மாதிரியான முன்னெடுப்புகளில் இந்நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

*கல்லூரி ஆய்வுப்புலங்களில் கருத்தரங்குகள் / பயிலரங்குகள் நிகழ்த்தப்பெறுதலில் உள்ள சிக்கல்களை நாம் நன்கறிவோம். அவற்றைத் தாண்டி பேராசிரியர்கள் தன்முனைப்பிலும், கடும் உழைப்பிலும்தான் அரங்குகளை ஏற்படுத்த வேண்டியதாகிறது. நாம் செலுத்தும் உழைப்பை இன்னும் சற்றே கூர்மையாகவும் விரிவாகவும் சமகாலத் தேவையுணர்ந்தும் செய்ய வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகிறோம். குறிப்பாக, ஆய்வுப்புலச் செயல்பாடுகளுக்கான அரசு மற்றும் கல்லூரி நிர்வாக நிதிநல்கைகள் சமகாலத்தன்மையை ஒட்டி மறுவரையறை செய்யப்பெற வேண்டும். 

#உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல்
#காலத்தோடொப்ப_கடத்தல்
#புதியன_முனைதல்
#தமிழாய்வுப்புலம் #தத்துவவியல்
#கருத்தரங்கம் #பயிலரங்கம்