Saturday, February 27, 2021

இல்லவே இல்லை.! (கவிதை)

 இல்லவே இல்லை.!




தனிமை நுகராதவர்க்கு

                கற்பனை நீள்வதில்லை!

கற்பனை நீளாதவர்க்கு

                கவிதை வாய்ப்பதில்லை!

கவிதை வாய்க்காதவர்க்கு

                காதல் உணர்வதில்லை!

காதல் உணராதவர்க்கு

                மனிதம் புரிவதில்லை!

மனிதம் புரியாதவரெல்லாம்

                நிச்சயம் மனிதரில்லை!

மனிதர் அல்லாதவரிடம்

                எனக்கு வேலையேயில்லை! 


இயல்புகளைக் காதலிப்போம்.! (கவிதை)



அந்த ஓடைக்கரையின் 

தெளிவில்லாத நீரில் எதையோ துளாவிக்கொண்டு இருந்தாய்!


காற்றின் கமகம வாசத்தால்

நீயென்று அறிந்தேன்!


உன் இரு சிறகுகளும் சோர்ந்து

தரையில் பரவிக் கிடந்தன!


சிட்டுக்குருவிகள் அதில் சிக்கெடுத்துக் கூச்சலிட்டன!


தரை கவிழ்ந்த உன் தலை

நிமிராமல் இருந்ததால்

அந்த குரங்குக்கூட்டம்

எதையோ யூகித்துக்கொண்டு 

ஊழையிட்டுக் குதித்தன!


தென்றலினால் கூந்தலுக்கு

திரவியம் தெளித்த மரங்களும் கூட

மயான அமைதியோடு மயங்கி நின்றன. 


இந்த வனம் ஒருபோதும்

இப்படி இருந்ததில்லை!


உன் கொலுசொலி கேட்காமல்

நதிகளும் ஜதி மெட்டுக்களின் சப்தத்தை

தற்காலிகத் தடை செய்தன!


நிலவொளியையும் உன்

கனத்த மௌனம் கவ்விக்கொண்டது! 


அது ஏனென்று கேட்டும் 

நீ பதில்தராததால்

அடிவானம் தன் முகத்தைக்

கறுத்துக்கொண்டது!


ராக்காலம் பூத்திடும்

முல்லை மலர்கள்

ஏனோ மொட்டுகளாக

முடங்கி தயங்கி நிற்கின்றன.


நாளையின் பிறப்பில்

தன் பிறப்பைக் கொண்டாடக்

காத்திருந்த விதைகள்

நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துவிட்டு

தூங்கிவிட யோசிக்கின்றன!


முயல்கள் நடந்து திரிவதை

முதன்முறை காடு கண்டது!


படுத்த இடத்திலிருந்து

அந்த யானை

எழுந்து நீர் அருந்த மனமின்றி

மண்ணோடு புரள்கிறது! 


புரள்கின்ற யானையின் எடை

தாங்காமல் கத்திக் கூச்சலிடும்

கோரைப்புற்கள்

கோபத்தைக்கூட மறந்திருந்தன!


மான் ஒன்றை துரத்தி வந்த

கரும்புலி ஒன்று

வனத்தின் வழக்கமில்லாத

வடிவத்தைக்கண்டு

செயலற்று நிற்கிறது!


ஓடி வந்த மானின்

அருகில் சென்று

'என்னாச்சு' என்று

விசாரிப்புகளைத்

தொடக்கி வைக்கிறது வன்புலி!


"விடியலில் விண்வெளிக்கு

சென்றுவிடுவாய்! 

அதன்முன் இந்த அழகுவனத்தின் அடையாளங்களை அழித்துவிடாதே!

அவிழ்த்து வை மனதை!


முதலில் அந்த

மேல்நூலாடையை சரிசெய்! "

என்றவாறே அதட்டலுடன்

அருகில் வந்தாள் மயிலரசி!


உன் நாடியைப்பிடித்து

முகத்தை உயர்த்தினாள்! 

அப்போதுதான்

எல்லோரும் அறிந்தோம்!

கரைபுரளும் கண்ணீருடன்

இருந்த உன் முகத்தை!


முகத்தின் கண்ணீர்

தோள் சிந்தி, கைவந்து

விரல்வழி வழிந்து

ஓடைவிழ மீன்களும்

மூச்சுத்திணறியதைப் பார்த்தேன்!


மயிலரசியின் தேறுதல்

வார்த்தைகள் 

உன்னைத் தேற்றியதாக

தெரியவில்லை!


உன் தேடல் நான்

என்பதை அறிவேன்! 

தேறுதல் என்

அன்பென்று அறிவேன்!


நேற்றை நாளின் சிறுசண்டைக்கு 

நீ இத்தனை விசனப்படுவாய் 

என நான் நினைக்கவில்லை!


உன் வான்மிதக்கும் வெள்ளை உடையும், 

உயரப்பறக்கும் சிறகுகளும் என்னில் சிறுமைதரும் என்பதை

அறியாததே இதன் காரணம்!


மானுடனோடு காதல்கொண்டால் தேவதைகளுக்கும் சிரமங்களுண்டு! 

என் நேற்றைய உரைகளை மறந்துவிடு! 


சமநிலைக்காக நீ

உன்னை மாற்ற வேண்டாம்! 

எனக்காக எதையும் இழக்காதே!


ஆகாயமெங்கும் அளவளாவித்திரிந்த

உன் அழகிய சிறகுகளையும், 

பஞ்சுபொத்தி மேகங்களின் இழைபறித்து இழைத்தெடுத்த வெள்ளை உடையும், 

உள்ளத்தை உருக்கிப்போடும்

உன் உருவினையும், 

கொழுவிக் கொக்கியிட்டு

மனதைக் கொழுத்திக்

குதூகலித்த குருகுரு கண்களையும்

கண்டுதானே மையல் கொண்டேன்!


நீ உன் இயல்புகளோடு இருப்பதையே

இன்னமும் விரும்புகிறேன்! 


எனக்கு சிறகு வந்தாலோ! 

என் கருநிறம் வெண்ணிறம் ஆனாலோ!

உனக்கு சிறகு போனாலோ!

உன் வெண்ணிறம் என்நிறம் ஆனாலோ!


அது முழுதின்றி  முரணாகிப் போய்விடலாம்! 

உன் கடவுளை நீ வணங்கு!


நீ நீயாக இருப்பதற்கு நான் தடையில்லை!

இது சத்தியம்! 

ஆனால் என்னை பணிக்காதே! 


நம் இயல்புகளைக் காதலித்தோம்!

காதலிப்போம்! என்னாளும்! 


அதோ அந்தி வானில்

காட்டின் காவல்காரன்

சிவந்து சினந்து எழுகிறான்! 


என் மனதோடு நான் சொல்வது உன் செவி சேர்ந்திருக்கும் என்ற நம்பிக்கையில் செல்கிறேன்! 


அழாதே என் கண்மணியே!

போகும்முன் வனத்திற்கு உயிரூட்டிப்போ!


நாளை வா! 

ஆரத்தழுவிப் பேசலாம்! அதுவரைக்காதலுடன்!


*அடச்சீ நாய! எந்திரி...


#ஏம்மா! தண்ணி ஊத்திதான் எழுப்புவியோ!


காதல் ஒரு உயிர்விசையே!

 ஆம்! காதல் ஒரு உயிர்விசையே!

பெற்றோரிடம் உற்ற காதல் பாசம்!

உற்றார் உறவோரிடம் பெற்ற காதல் பந்தம்!

தோழமையோடு கொண்ட காதல் நட்பு!

புத்தகக்காதல், புள்ளினக்காதல், என 

புதுப்புதுக் காதலின் முகிழ்வில் தானே 

மனிதம் தினமும் உயிர்பெற்று உலவுகிறது!


உயிர்கள் எல்லாம் கொள்ளும் உறவில்

மனிதக்காதல் ஒரு சிறுபங்கே!


ஈர்ப்பும் விலக்கும் காதற் காந்தத்தின் பொதுவியல்புகள்!

பிரிவினைகள் பிரிந்துவிட்டு உயிரிணையை ஈர்த்து நிற்கும்!

பேதமைகள், மேதமைகள் வேதமுறை என்ற 

பலவும் தேவையில்லை விலக்கித் தள்ளும்!


பாரதிகண்ட அக்கினிக்குஞ்சு காதல்!

அவன் தாசன் கண்ட சிம்புட்பறவை காதல்!


கோதை ஒருத்தி கோபாலன்மேல் கொண்டதும் காதல் தான்...


என்றாலும்!

இளவரசன், கோகுல்ராஜ் என 

தண்டவாளங்களில் கண்டம்சிதறி கிடப்பதுமேனோ?


சகமனித அன்புதான் மதங்களின் இலக்காம்... 

எனில் காவிக்கும், பச்சைக்கும், வெள்ளைக்கும் இடையே 

காதல் வந்தால் என்னவாம்...?


தனிமனித மனங்களெல்லாம் தூக்கிச் சுமந்த காதல் 

இன்று தூற்றித் திரியும் காலமாய் 

திரிந்துபோகக் காரணமென்ன?

இதைச் செய்ய வைத்தவன் யார்? 

அவன் நோக்கமென்ன?


உயிரின் தேவையான காதலை, 

உடலின் தேவையென எள்ளுவதேன்?


பணமும், பகட்டும், 

நிறமும், இனமும், 

குலமும், சாதியும், மதமும் 

சரிநிகரென்றால் தான்,

சமமாயிருந்தால் தான், வருமென்றால் 

அது காதலின் வகையில் சேராது!

கணிகையர் காமுகர் கயவர்களிடையிலான 

உடல் வியாபார ஒப்பந்தமாகிப்போம்!


எனில் எது காதல்?

அது என்ன செய்யும்?


பிரித்து வைத்தப்பிரிவுகள் யாவையும் 

தோலுரித்துக் கிழித்தெறியும் காதலின் வல்லமை!


உயிர்களிரண்டு உறவுகொள்ள 

உடலின்... உலகின்...  வரையறைகள் எதற்கு?


மென்மை தான் காதலின் புறத்தோற்றம்!

அன்புதான் தான் காதலின் அடிநாதம்!


ரவுத்திரம் காதலின் அகப்பொருண்மை!

காத்திரம் காதலின் ஆத்மார்த்தம்!


கயமைகள் யாவும் தடைபல இட்டும்,  

காட்டாற்றுப் பாய்ச்சலாய் கடைமடை வந்தேறும்!


குறுக்கத்தி மலருக்கும்

செருக்கத்தி வீச்சுக்கும்

முடிச்சுபோடும் காதல்!


புனிதங்களில் புதைபட்டு 

புண்ணியமென புகுத்தப்பட்டவற்றில் 

புதுமைகளை எழுதிப்பார்க்கும்! -காதல் 

புதியோர் பூமி செய்யும்!


குரோதமும் குதர்க்கமும் பேசிப்பேசி 

பேதமைகள் வளர்த்தெடுக்கும், குறுநரிகள் 

குரல்வளையைப் பேர்த்தெடுத்துப் பீறிப்போடும்!-காதல்

நிச்சயமாய் மிச்சமின்றி கீறிப்போடும்!


காதலீர்! 

மென்மையை  பெண்மையிடம் வையும்

கடுஞ்சின வன்மையாய்...

காதலீர்!

இக்கயவர் தலைக்கொய்யும்!


காதலிற் சிறந்தது காமக்காதலே 

என்கிறது தமிழ்சங்க ஓலை!


ஐந்திணைக் காமத்தை காதலென்றும்!

காமத்துப்பாலை இன்பத்துப்பாலென்றும் 

நாம அடைகள் மாற்றிவைத்து நாகரீகம் என்றதெல்லாம் 

நாம் மாற்ற வேண்டுமன்றோ!


காதலொன்றே பேரழகு!

காமக்காதலே பேரன்பு!


காதலும் நட்பும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்!

ஓர் இதயக்குருதியைப் பரிமாறிக்கொள்பவை!


காதலின் நட்பு சிறப்பென்று அறியாதார் பேசித்திரிவார்!

நட்பின்றேல் காதலேது?

காதலின்றேல் நல்நட்பேது?

இரண்டும் ஓருயிரின் அகத்தன்பின் மையமன்றோ!


ஓ! உலக மாந்தர்களே!

நம்மைப்பிரித்து வைக்க ஆயிரமுண்டு!

இணைத்து வைக்கக் காதலே உண்டு!

ஆதலினால் காதல் செய்வீர்!


கைகூடாக் காதலால் காதலே கூடாதென்றால்!

தாயன்பு கிட்டாதான் பிறப்பே பெறக்கூடாதே!


கூடும்வரை காதலிப்போம்!

உலகக் கூட்டுறவை காதல் செய்யும்!

ஆதலினால் காதல் செய்வோம்!


மீண்டும் கூறுகிறேன்!

காதல் ஒரு உயிரின் விசை!

காதல் சமத்துவ உலகைச் செதுக்கும் வல்லுளி!

காதல் பிரிவினைப் பேயழிக்கும் வாதை!

ஆதலினால் காதல் செய்வோம்!

ஆன மட்டும் காதலுக்குத் துணைநிற்போம்!


என்ன கேட்டீர்கள்? 

நீ காதலித்தாயா என்றா?


சொன்னதை ஆராயாமல் 

சொல்பவனை ஆராயும் தமிழினமே! 

நான் கவிதைக்காதலன் விஜய்!


உறவாடு... உரையாடு…



பொழுதுகளுக்கு போக்குகாட்டி,

பொழுதுபோக்கும் பேச்சுக்கள்!


சுற்றுமுற்றும் பார்ப்பதில்லை

முற்றிலும் வெற்றுக் கூச்சல்கள்!


அமைதிக்கும் கேட்காமல்

அதிர்ந்து பேசும் வித்தைகள்!


ஓலை அனுப்பும் காலமுதல்

அலைபேசி காலம்வரை 

விலைபேசா நாழிகைகள் -இந்த

கலைச்சொற்கள் ஊற்றுக்ககள்!


உச்சுகொட்டி, அச்சம்காட்டி,

வாடா, போடா வசனங்கள்! 


ஆயிரம் அர்த்தம் அதில்வைத்து

ம், ம் என்பது பதிலாக

சொல்லு என்ற சொல் உந்திவிட

அப்புறம் என்பதே அடுத்த நிலை

ஒலிக்காத சிற்சில சொல்கூட

சலிக்காத அன்பின் நினைவிடங்கள்! 


கள்ளத்தனமாய் உரையாடி 

காதல் என்று பெயர்சூட்டி

செல்லம், வெல்லம், வாயாடி!!! 

ஐயோ! அந்நாள் வருமோடி!


அன்றைய நாளின் லட்சியமே -பேச்சு

எத்தனை மணிந்துளி என்பதுவே! 

காரியக்காரர்கள் நாமிருவர் - நம்மில்

வீரியம் பெறுவது காதலதே! 


இன்றோ!

காதல் மட்டும் காண்கிறேன் -பேசிட

கானக்குயிலை காண்கிலேனே! 

தேம்பும் நெஞ்சிங்கே காத்திருக்க,

தேவதை இன்னும் வரவில்லை!

வெயிலும், மழையும் கண்டபின்னும்

அழியாச் சங்கத்து ஒவியமாய்! 

குளிரும், அனலும் தின்றபின்னும்

உனக்காய் இவனில் மிச்சமுண்டு!

மணிக்கணக்காய் முடியாதென்றால்

நாழிகையாகச் சுருக்கிடலாம்!

மனக்கணக்கு இன்னதென்று -நீ

உதிர்க்கும் மௌனம் காட்டிவிடும்!

உன் 

பேசா சொற்களின் அகராதியொன்று

ரகசியமாக என்னிலுண்டு!

புரட்டிப்பார்த்தேன் ஏமாந்தேன்,

அமைதி 

புறக்கணிப்பென்று கண்டதினால்!


பேசிப்பேசி உயிர்கொண்டோம்!

சொற்களினாலே உற்பத்தியாகி

அர்த்தங்களாலே கருக்கொண்டோம்!

வசனங்களிலே வளம்பெற்றோம்! 

மௌனங்களாலே உரமிட்டோம்!

உள்ளங்கள் உரசி அனல்கொண்டோம்!

மெல்லப்பேசி ஆர்ப்பரித்தோம்!


இன்றைக்கு ஏனோ!? 

பழையதைப்பேசி பொழுதைக் கழிக்க

கவிதை எழுதி காகிதம் கிழிக்க 

நிமிடங்களோடு போரிட்டு

நாழிகைகளோடு நகர நினைத்து

நாள்கணக்காய் நகராமல் 

முடங்கிக்கிடக்கும் என்னை 

முடுக்கிவிடத் தேவையெல்லாம் 

உன் 

ஒற்றை அலைபேசி அழைப்பதுவே!


வருமா? வருவாய்! 


என்னைப்போல..!

என்னைப்போல..!

 

தளிர்தாலும் கிளைத்துப் பூத்தாலும்

வெட்டப்படுவோமென்று தெரிந்தால்!


நீரூற்றி உரமிடுவது 

வேலிக்காகவே என்பதை அறிந்தால்!


தான் ஒரு அழகு போகப்பொருளென 

உணர்ந்தால்!


தனது பலவர்ணமும், உடலமைப்பும் 

இயற்கையல்ல செயற்கை 

எனப் புரிந்தால்!!! 


இந்த குரோட்டன்ஸ் செடிகள் தற்கொலை செய்துகொள்ளுமா?


இல்லையேல், 

கொலையே நிகழ்ந்துவிட்ட பின்பு 

தற்கொலை எதற்கென நகைக்குமா? 


என்னைப்போல..!