Tuesday, September 26, 2023

கல்வி நிலையங்களும் மாணவர் ஒழுக்கங்களும்

 ஒழுக்கம் என்பது... ஒழுக்கம் என்பதே தனிமனித உரிமைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்ற நடைமுறையே ஆகும். சமூகத்தின் பெரும்பான்மைப் பிரிவினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுநிலை வாழ்வியல் நெறிப்பாடுகளே ஆகும். இந்தியப் பண்பாட்டில் ஒழுக்கங்களை வரையறுத்தவர்கள் தங்கள் அறிவுக்கும் அனுபவத்திற்கும் தேவைக்கும் ஏற்ப முன்மொழிந்தனர். காலத்தோடு ஒத்து நடைபெறாத எந்த ஒழுக்கமும் மக்களால் மாற்றியமைக்கப்படும் அல்லது முழுதாய் புறந்தள்ளப்படும் என்பதே வரலாற்றுப் படிப்பினை. பொதுச் சமூக ஒழுக்கங்கள் பரும (Macro Metrics)  அடிப்படைகளைக்  கொண்டவை அவை பெரும்பான்மை மக்களின் சமூக ஒவ்வாமையை அடைந்து ஒத்தக் கருத்தமைவுக்கு வந்து மாற்றத்துக்கு உள்ளாக வெகுகாலம் எடுத்துக்கொள்கிறது. ஆனால் தனிமனித ஒழுக்கங்களாக விதிக்கப்பட்டவை எதுவும் காலத்துடனான நேரடி நுண் (Micro Metrics) அடிப்படைகளான தனிமனித அனுபவங்களுடன் நிற்பவையாதலால் காலத்தையொட்டி மாற்றத்தை விரும்பும் அல்லது மோதும் தன்மையுடையது. 

தமிழ்ச்சமூகத்தில் தனி மனித ஒழுக்கங்களாகக் கற்பிக்கப்பட்டவற்றை அகநிலை ஒழுக்கங்கள், புறநிலை ஒழுக்கங்கள், பொதுச்சமூக வெளிப்பாட்டு நடத்தை ஒழுக்கங்கள் (Internal, External, Exposure) என்பனவாகப் பிரித்துக்கொள்ளலாம். இவற்றில் உள்ளார்ந்த ஒழுக்கங்களானவைப் பெரும்பாலும் சமூக ஒழுக்கங்களை மய்யமிட்ட உளவியல் ஒழுங்குகளே. பொதுச்சமூக நடத்தை ஒழுக்கங்களில் சில நடைமுறை முரண்கள் இருந்தாலும் ஊருடன் ஒத்துவாழும் சமூகக் கட்டமைப்புக்குள் ஓரளவு ஏற்புடன் அமைகின்றன. ஆனால் உடைக் கட்டுப்பாடு, உருவக் கட்டுப்பாடுகளை முன்வைத்து வலியுறுத்தப்படும் புறநிலை ஒழுக்கங்கள் காலத்துக்கு ஒவ்வாத வெறுப்புணர்வைத் தருகின்றன.

    ஒழுக்கம் என்பது ஒருவரால் முன்மொழியப்பட்டு அமைவரும் ஏற்றாகக் கட்டாயப்படுத்துவதாக அமைகின்றபோது இயல்பாகவே மறுப்பும் எதிர்ப்பும் தோன்றிவிடுகிறது. ஒழுக்கங்கள் காலத்திற்கேற்ப மாறுதலை அடையவும் கைவிடப்படவும் வேண்டியது அவசியமாகும். ஒழுக்கங்களின் ஒவ்வாமையை தமிழ்நாட்டின் பெரும்பான்மைக் கல்விநிலையங்களில் வெளிப்படையாகக் காணமுடிகிறது. மாணவர்களிடம் வலியுறுத்தப்படும் ஒழுக்க நெறிப்பாடுகளில் சிகை (தலைமுடி) அலங்காரக் கட்டுப்பாடுகள், உடை சார்ந்த கட்டுப்பாடுகள் போன்றவை தனிமனித உணர்வையும் சுயமரியாதைப் பழக்கத்தையும் சிதைப்பனவாக அமைகின்றன. 70களிலிருந்து தொடரும் இந்த கல்விநிலையக் கட்டுப்பாடுகளில் இம்மாதிரியான மனித உரிமைக்கு எதிரானக் கட்டுப்பாடுகள் இன்றுவரை கல்வி நிலையங்களின் பெருவழக்காகவே இருந்து வருகின்றன. தன்னை எவ்வாறு பிறருக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்கிற உரிமையில் கல்வி நிலையங்கள் குறிப்பாக கல்லூரிகள் தலையிடுவது கண்டனத்துக்குரியது.

    வேடிக்கை என்னவென்றால், பணம் படைத்தவர்களின் குழந்தைகள் படிக்கும் கல்வி நிலையங்களிலோ அல்லது பெருநகரங்களின் கல்வி நிலையங்களிலோ இந்தக் கட்டுப்பாடுகள் வலியுறுத்தப்படுவது கூட இல்லை. கிராமப்புறத்தில் அமைந்துள்ள அல்லது கிராமப்புற மக்களின் குழந்தைகளட பயிலுகிற அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்களில் இவை முக்கியத்துவம் வாய்ந்த ஒழுக்கங்களாக மாணவர்களைக் கட்டாயப்படுத்துகிற தன்மையைக் காண முடிகிறது. 

    வரையறுத்தபடி முடி வெட்டாத மாணவர்களை கண்டிப்பது, தண்டிப்பது, வகுப்பிலிருந்து வெளியேற்றுவது என்பவற்றோடு நில்லாமல் அதீதமாக தலையில் கத்திரியை வைப்பது போன்ற செயல்களையும் சில மூளைப்பிசகு கொண்டவர்கள் நிகழ்த்தி வருகிறார்கள். இம்மாதிரி வறட்டுக் கட்டுப்பாடுகளைக் கட்டாயமாக்குவதில் சாதிச் சங்கங்கள் மற்றும் மத நிறுவனங்கள் நடத்தும் கல்வி நிலையங்கள் முன்னணியில் நிற்கின்றன. 

    மாணவர்களிடம் தேவையற்றக் கட்டுப்பாடுகளால் வெறுப்பை ஏற்படுத்திவிட்ட ஒரு ஆசிரியர் எவ்வாறு சுயம் பேணுதலைப் போதிக்க முடியும். இந்த ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுடன் இம்மாதிரியான அணுகுமுறைகளை மேற்கொள்வார்களா.? ஆம் எனில் அந்தக் குழந்தைகளுக்காகவும் நாம் வருந்தத்தான் வேண்டும். 

    மாணவர்களுக்கு இம்மாதிரியான காலத்துக்கு ஒவ்வாத ஒழுக்கத்தைக் கட்டாயப்படுத்தும் கல்விநிலையங்களின் ஒழுக்கக்கேட்டையும் விதிமீறல்களையும் பேசுப் புகுந்தால் பக்கங்கள் போதாது. அரசு வரையறுத்துள்ள சட்டங்களின்படி மட்டுமே மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிக்கிறோம் என்றோ.! யூஜிசி மற்றும் அரசு வரையறுத்தபடியே ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குகிறோம் என்றோ.! கட்டிடங்கள் அனைத்தும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே கட்டப்பட்டுள்ளன என்றோ.! யாரேனும் ஒருவர் நெஞ்சம் நிமிர்த்திக் கூற முடியுமா.? நாம் எந்தத் தார்மீகத்தின் அடிப்படையில் தனியுரிமை சார்ந்தவற்றை ஒழுக்கங்களாக்கிக் கட்டாயப்படுத்துகிறோம்? 

     கல்வி நிலையம் என்பது வளரிளம் பருவத்தினருக்கு வாழ்வியல் நெறிகளைக் கற்றுத்தருகிற நிறுவனம் மட்டுமல்லாது சுயமரியாதையையும் மானவுணர்வையும் பழக்குகிற கடப்பாடு உடையதுமாகும். ஒழுக்கங்கள் அதன் மதிப்புறுநிலைகளைச் சுட்டிக்காட்டி வலியுறுத்தப்படலாமே ஒழிய கட்டாயப்படுத்துவது கூடாது. பாலினப் புரிதலை உருவாக்க வேண்டியக் கல்விநிலையங்கள் சமகால தலைமுறையினரின் ஆண்-பெண் உரையாடலைப் பொசுபொசுப்புடன் அணுகுவதும், மாணவர்களின் புறத்தோற்றங்களை வைத்து மதிப்பிடுதலும் தவறானவையாகும். 

    சமகால மாணவர்கள் வைத்திருக்கும் வாகனங்கள், தொழில்நுட்பக் கருவிகள், கலை ரசனை, மொழிப் பயன்பாடு ஆகியவற்றின் மீது முந்தைய தலைமுறைக்கு ஏற்படுகின்ற பொறாமை மற்றும் தமது காலத்திய பண்புகளே சரி எனும் மனநிலையும் இதன் பின்னணியில் நிச்சயமாக இருக்கவே செய்கின்றன.

மாணவர்களின் மீதான இம்மாதிரியான கட்டுப்பாடுகள் அச்சம் அல்லது மிகையுணர்வுள்ள பலவீனமான பொது உளவியலைக் கட்டமைக்கின்றன. ஆசிரியர்கள்களின் கண்டிப்பு பொதுவெளி இழிவுபடுத்துதலாகி எல்லை மீறும்போது மாணவர்கள் 'நாம் மட்டும் ஏன் பண்போடும் ஒழுக்கத்தோடும் இருக்க வேண்டும்' என்கிற பிறழ் மனவுணர்வைப் பெற்றுவிடக் கூடும். இந்தப் பிறழ் மனக்கூறுதான் தற்கொலைகளுக்கும் குற்றச்செயல்களுக்கும் மாணவர்களை வழிநடத்துகிறது என்பதை கல்விப்புலத்தார் உணர வேண்டும்.

70களில் மனிதர்கள் தமக்குள் அதிகமான உள்முரண்களுடன் தொடர்பற்று உதிரிகளாகவே இருந்தார்கள். ஆனால் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தகவல் தொடர்புநிலைகளும் தொழில்நுட்ப வளர்ச்சியும் பரவலாக்கமும் மாணவர்களைப் புத்துலகச் சிந்தனைக்குள் கடத்தியுள்ளன. சமூத வலைத்தளங்கள் உலகத்தின் சன்னலாக அமைந்து மாணவர்களின் சுதந்திர, சுயாதீனச் செயல்பாடுகளின் நிலைக்களன்களாகி நிற்கின்ற இந்தச்சூழலைக் கருத்தில்கொள்ள வேண்டியது அவசியமாகும். 
    
 ஒழுக்கங்களும் சட்டங்களும் சமூக வாழ்வமைதிக்கென மக்களே வடிவமைத்துக் கொண்டவையே.  ஒழுக்கங்களுக்காகவோ சட்டங்களுக்காகவோ மக்களைக் கட்டாயப்படுத்துவதை விட காலத்தின் கருத்தமைவுகளைப் புரிந்துகொண்டு மக்கள் தேவையை ஒட்டி ஒழுக்கங்களையும் சட்டங்களையும் மறுமதிப்பீட்டுக்கு உள்ளாக்க வேண்டும். கல்வி நிலைய ஒழுக்கங்கள் தம் நடைமுறை ஒழுக்கங்களில் காலத்தின் சூழமைவுகளைக் கருத்தில்கொண்டு அடிப்படையானத் தனிமனித உரிமைகளைப் பாதிக்கும் நடைமுறைகளைக் கைவிட வேண்டும்.  

பெற்றோர் தங்கள் குழந்தைகளின் தோற்ற அமைப்பைப் பார்த்துக் கொள்வார்கள். பார்த்துக் கொள்ள வேண்டும்.!

“மக்களுக்காகவே சட்டங்கள், சட்டங்களுக்காக மக்கள் வாழ முடியாது”

Friday, September 22, 2023

சிறார் இலக்கியத்தின் புதிய நம்பிக்கையாக மிளிரும் இளம் எழுத்தாளர் செல்வி. சூடாமணி.!

சிறார் இலக்கியத்தின் புதிய நம்பிக்கையாக மிளிரும் இளம் எழுத்தாளர் செல்வி. சூடாமணி.!


ஒரு சமூகம் எந்த அளவுக்கு மொழிவழி ஊடாடுதலை நிகழ்த்திக் கொள்ளுகிறதோ அவ்வளவினதாகவே அறிவுத்திறம் பெறுகிறது. சமூகத்தின் பொதுப்புத்தியைத் தீர்மானிப்பதில் கூட்டு வாசிப்பும் விவாதமும் முக்கிய இடத்தைப்  பெறுவதாகும். ஒரு மக்கள் குழுவின் எந்தத் தரப்பு வாசிப்பு விவாதத்திற்கு உள்ளாகிறது என்பதைக் கொண்டு சமூக அறிவுநிலையினைக் கண்ணுற முடியும். தமிழ் இலக்கியத்தளம் யாப்புத் தளைகளிலிருந்தும் இலக்கணக்கட்டுகளிலிருந்தும் விடுபட்டு நவீன கட்டற்ற, வெகுமக்களை உள்ளடக்கிய, புத்திலக்கியமாக மறுமலர்ச்சி அடைந்தமையைத் தொடர்ந்து  இளையோருக்கான வாசிப்புத் தளம், பெண்ணெழுத்துத் தளம், கருத்தியல் தளம், நாட்டார் வழக்காறு உள்ளிட்ட எழுதுத் தளங்களில் பயணித்தது. அறிவு முகிழ்வுக்கான அடிப்படைச் செயல்பாடான வாசிப்பினை வளரிளம் பருவத்தினருக்கு உட்படுத்தும் முயற்சிகள் மெச்சத்தக்கனவாகும்.

தமிழில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறார்களுக்கான இலக்கிய ஆக்கங்கள் தமிழினத்தின் அறிவுத்தேடலைச் சான்றுரைப்பதாகும். கவிமணி தேசிக விநாயகனார்,  பெரியசாமி தூரன், அழ.வள்ளியப்பா உள்ளிட்ட மாபெரும் தமிழ் எழுத்தாளுமைகளின் தடத்தில் தொடர்ந்து பலர் எழுதத் தலைப்பட்டுள்ளனர். பெண்ணைக் குறித்த பெண் எழுத்துக்கள் தமக்கானதைத் தாமே முன்வைக்கிற பெண் குறித்த ஆண்களின் முன்வைப்புகளையும் சித்தரிப்புகளையும் எவ்வாறு முறித்துப்போட்டு மாற்றுக் கோணங்களைக் கொண்டு இயங்கியதோ, அதைப்போலவே, சிறார்களுக்கான எழுத்தினை சிறார்களே முனைகின்றபோது தமக்கானதைத் தாமே முன்வைக்கிற இயல்பான எழுத்தாக அமைந்துவிடுகிறது. அப்படியான முன்னெடுப்பாக அமைந்துள்ளது தான் இளம் எழுத்தாளர் சூடாமணியின் எழுத்தியக்கம்.

சூடாமணியின் கதைக்களங்கள் குழந்தைகளின் கனவுலகையும் நனவுலகையும் மய்யமிட்டே இயக்கங்கொள்கின்றன. குழந்தைகளின் உலகத்தை ஒரு குழந்தையே வடிவமைப்பது போன்றே அமைந்திருக்கின்றது. காட்சிக்குத் தரப்பட்ட சூழமைவுகளின் காட்சிப்படுத்தல்களில் சிறார்களின் உலகம் அத்தனை அழகாகத் தெரிகிறது. மிருக தேசத்தின் அழகிய அறங்களை, இயற்கையின் இயங்கியலைக் காட்சிப்படுத்தியமை சிறார்களின் எண்ணத்துக்குள் இயல்புக்கூறாக நிற்கும் ஆதிப்பொதுமைச் சமூகத்தின் சிந்தனைப்போக்கின் அடையாளமாகும். மாடூர், புலியூர் என்கிற எளிய முன்வைப்புகளில் இந்தியாவின் பிராந்தியத் தனித்துவமும் தேசிய ஓர்மைப்பாடும் உருக்கொள்கின்றன. கதைக்குள் நிகழும் உரையாடல்களில்  பூச்சுகளற்ற இயல்புகளைக் காணமுடிகிறது. 

சூடாமணியின் எழுத்துமொழி, தமிழிலக்கியங்களின் பெரும்பான்மையான கதையாடல்களான சொல்லால் தோரணங்களைக் கட்டி, பொருத்தமற்றக் கருத்துக்களை ஒற்றைச் சார்புடன் வலிந்து வாதிட்டமைக்கும் மேதமைவாத இலக்கியத்தன்மையிலிருந்து மாறுபட்ட ஒரு வாசிப்பனுபவத்திற்கு வழிதிறந்து நிற்கின்றன. நியூட்டனின் விதி, கால இயந்திரம் போன்ற அறிவியலின் விவாதங்களின் கரு, கடவுளுடனான உரையாடலின் தெளிவு, பழங்கதையாடலாகவே நிகழ்த்தப்பட்ட உளவியல் தாக்குதலாகிய பேயுலகின் மெய்ப்பொருளறிதல் என்கிறப் பொருண்மைகளைக் கையாண்டுள்ள விதம் மிகவும் பாராட்டுக்குரியது. 

மேலெழுந்தவாரியாக, சூடாமணி அவர்களின் எழுத்துக்கள் எந்த இலக்குமின்றி தன்னை, தன்னுலகை வரைந்தெடுப்பதாக அமைந்து பல்முனையச் சிந்தனைக்குள் பயணிக்கின்றன. இவர்தம் முயற்சி சிறார்களுக்கான வாசிப்புத் தளத்திற்கானதாக மடடும் சுருக்கிவிட இயலவில்லை. சிறார்களும் எழுத்துலகின் ஆக்கியோன்களாக, ஆளுமைகளாக செயற்களம் புகுதலின் வழிகாட்டுதலாகவும் கொண்டாடப்பட வேண்டும். சூடாமணியை அடையாளப்படுத்துதலின் வழியாக எண்ணற்றத் தமிழ்க் குழந்தைகளின் எழுத்துத்துறைப் பயணத்தைத் தொடக்கிட தமிழ்ப் பெருஞ்சமூகத்ததை அறைகூவி முடிக்கிறேன். 




Tuesday, September 5, 2023

ஆசிரியர்களுக்கு...

தனது மகனின் ஆசிரியருக்கு லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்.

அனைத்து மனிதர்களும் நேர்மையானவர்கள் அல்ல, அனைத்து மனிதர்களும் உண்மையானவர்கள் அல்ல என்பதை எனது மகன் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆனாலும், மனிதர்களில் அயோக்கியர்களுக்கு இடையில் உண்மையான கதாநாயகர்களும் இருக்கிறார்கள் என்பதையும், சுயநல  அரசியல்வாதிகளுக்கு இடையில் அர்ப்பணிப்பு மிக்க தலைவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் பகைவர்களுக்கு இடையில் நண்பர்களும் இருக்கிறார்கள் என்பதையும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

அவனுக்குப் பொறாமைக் குணம் வந்துவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

மௌனமாக ரசித்துச் சிரிப்பதன் ரகசியத்தை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து சுருங்கிக்கொள்வது கோழைத்தனம் என்பதைப் புரியவையுங்கள்.

புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

வானில் பறக்கும் பறவைகளின் புதிர் மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் வேகத்தையும் பசுமையான மலை அடிவார மலர்களின் வனப்பையும் ரசிப்பதற்கும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

ஏமாற்றுவதைவிடவும் தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதைப் பள்ளியில் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். மற்றவர்கள் தவறு என்று விமர்சித்தாலும், தனது சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டு குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.

கும்பலோடு கும்பலாய்க் கரைந்துபோய்விடாமல் எந்தச் சூழ்நிலையிலும் தனது சொந்த நம்பிக்கையின்படி சுயமாகச் செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும். எனினும் உண்மை என்னும் திரையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்து எடுக்க அவனுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். கண்ணீர்விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும், வெற்றுப் புகழுரைகளைக் கண்டால், எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.

தனது செயல்திறனுக்கும், அறிவாற்றலுக்கும் மிக அதிக ஊதியம் கோரும் சாமர்த்தியம் அவனுக்கு வேண்டும். ஆனால், தனது இதயத்திற்கும், தனது ஆன்மாவிற்கும் விலை பேசுபவர்களை அவன் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

பெருங்கும்பல் திரண்டு வந்து கூச்சலிட்டாலும், நியாயம் என்று தான் நினைப்பதை நிலைநாட்ட தொடர்ந்து போராடுவதற்கு அவனுக்கு நம்பிக்கை கொடுங்கள்.

அவனை அன்பாக நடத்துங்கள். ஆனால் அதிக செல்லம்காட்டி சார்ந்திருக்கவைக்க வேண்டாம். ஏனென்றால் கடுமையான தீயில் காட்டப்படும் இரும்பு மட்டும்தான் பயன்மிக்கதாக மாறுகிறது.

தவறு கண்டால் கொதித்து எழும் துணிச்சலை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். அதே வேளையில் தனது வலிமையை மௌனமாக வெளிப்படுத்தும் பொறுமையை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

அவன் தன்மீதே மகத்தான நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான் மனித குலத்தின் மீது அவன் மகத்தான நம்பிக்கைகொள்வான்.

இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான், இதில் உங்களுக்குச் சாத்தியமானதையெல்லாம் கற்றுக்கொடுங்கள். அவன் மிக நல்லவன், எனது அன்பு மகன்.