பொழுதுகளுக்கு போக்குகாட்டி,
பொழுதுபோக்கும் பேச்சுக்கள்!
சுற்றுமுற்றும் பார்ப்பதில்லை
முற்றிலும் வெற்றுக் கூச்சல்கள்!
அமைதிக்கும் கேட்காமல்
அதிர்ந்து பேசும் வித்தைகள்!
ஓலை அனுப்பும் காலமுதல்
அலைபேசி காலம்வரை
விலைபேசா நாழிகைகள் -இந்த
கலைச்சொற்கள் ஊற்றுக்ககள்!
உச்சுகொட்டி, அச்சம்காட்டி,
வாடா, போடா வசனங்கள்!
ஆயிரம் அர்த்தம் அதில்வைத்து
ம், ம் என்பது பதிலாக
சொல்லு என்ற சொல் உந்திவிட
அப்புறம் என்பதே அடுத்த நிலை
ஒலிக்காத சிற்சில சொல்கூட
சலிக்காத அன்பின் நினைவிடங்கள்!
கள்ளத்தனமாய் உரையாடி
காதல் என்று பெயர்சூட்டி
செல்லம், வெல்லம், வாயாடி!!!
ஐயோ! அந்நாள் வருமோடி!
அன்றைய நாளின் லட்சியமே -பேச்சு
எத்தனை மணிந்துளி என்பதுவே!
காரியக்காரர்கள் நாமிருவர் - நம்மில்
வீரியம் பெறுவது காதலதே!
இன்றோ!
காதல் மட்டும் காண்கிறேன் -பேசிட
கானக்குயிலை காண்கிலேனே!
தேம்பும் நெஞ்சிங்கே காத்திருக்க,
தேவதை இன்னும் வரவில்லை!
வெயிலும், மழையும் கண்டபின்னும்
அழியாச் சங்கத்து ஒவியமாய்!
குளிரும், அனலும் தின்றபின்னும்
உனக்காய் இவனில் மிச்சமுண்டு!
மணிக்கணக்காய் முடியாதென்றால்
நாழிகையாகச் சுருக்கிடலாம்!
மனக்கணக்கு இன்னதென்று -நீ
உதிர்க்கும் மௌனம் காட்டிவிடும்!
உன்
பேசா சொற்களின் அகராதியொன்று
ரகசியமாக என்னிலுண்டு!
புரட்டிப்பார்த்தேன் ஏமாந்தேன்,
அமைதி
புறக்கணிப்பென்று கண்டதினால்!
பேசிப்பேசி உயிர்கொண்டோம்!
சொற்களினாலே உற்பத்தியாகி
அர்த்தங்களாலே கருக்கொண்டோம்!
வசனங்களிலே வளம்பெற்றோம்!
மௌனங்களாலே உரமிட்டோம்!
உள்ளங்கள் உரசி அனல்கொண்டோம்!
மெல்லப்பேசி ஆர்ப்பரித்தோம்!
இன்றைக்கு ஏனோ!?
பழையதைப்பேசி பொழுதைக் கழிக்க
கவிதை எழுதி காகிதம் கிழிக்க
நிமிடங்களோடு போரிட்டு
நாழிகைகளோடு நகர நினைத்து
நாள்கணக்காய் நகராமல்
முடங்கிக்கிடக்கும் என்னை
முடுக்கிவிடத் தேவையெல்லாம்
உன்
ஒற்றை அலைபேசி அழைப்பதுவே!
வருமா? வருவாய்!

No comments:
Post a Comment