சிறார் இலக்கியத்தின் புதிய நம்பிக்கையாக மிளிரும் இளம் எழுத்தாளர் செல்வி. சூடாமணி.!
தமிழில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறார்களுக்கான இலக்கிய ஆக்கங்கள் தமிழினத்தின் அறிவுத்தேடலைச் சான்றுரைப்பதாகும். கவிமணி தேசிக விநாயகனார், பெரியசாமி தூரன், அழ.வள்ளியப்பா உள்ளிட்ட மாபெரும் தமிழ் எழுத்தாளுமைகளின் தடத்தில் தொடர்ந்து பலர் எழுதத் தலைப்பட்டுள்ளனர். பெண்ணைக் குறித்த பெண் எழுத்துக்கள் தமக்கானதைத் தாமே முன்வைக்கிற பெண் குறித்த ஆண்களின் முன்வைப்புகளையும் சித்தரிப்புகளையும் எவ்வாறு முறித்துப்போட்டு மாற்றுக் கோணங்களைக் கொண்டு இயங்கியதோ, அதைப்போலவே, சிறார்களுக்கான எழுத்தினை சிறார்களே முனைகின்றபோது தமக்கானதைத் தாமே முன்வைக்கிற இயல்பான எழுத்தாக அமைந்துவிடுகிறது. அப்படியான முன்னெடுப்பாக அமைந்துள்ளது தான் இளம் எழுத்தாளர் சூடாமணியின் எழுத்தியக்கம்.
சூடாமணியின் கதைக்களங்கள் குழந்தைகளின் கனவுலகையும் நனவுலகையும் மய்யமிட்டே இயக்கங்கொள்கின்றன. குழந்தைகளின் உலகத்தை ஒரு குழந்தையே வடிவமைப்பது போன்றே அமைந்திருக்கின்றது. காட்சிக்குத் தரப்பட்ட சூழமைவுகளின் காட்சிப்படுத்தல்களில் சிறார்களின் உலகம் அத்தனை அழகாகத் தெரிகிறது. மிருக தேசத்தின் அழகிய அறங்களை, இயற்கையின் இயங்கியலைக் காட்சிப்படுத்தியமை சிறார்களின் எண்ணத்துக்குள் இயல்புக்கூறாக நிற்கும் ஆதிப்பொதுமைச் சமூகத்தின் சிந்தனைப்போக்கின் அடையாளமாகும். மாடூர், புலியூர் என்கிற எளிய முன்வைப்புகளில் இந்தியாவின் பிராந்தியத் தனித்துவமும் தேசிய ஓர்மைப்பாடும் உருக்கொள்கின்றன. கதைக்குள் நிகழும் உரையாடல்களில் பூச்சுகளற்ற இயல்புகளைக் காணமுடிகிறது.
சூடாமணியின் எழுத்துமொழி, தமிழிலக்கியங்களின் பெரும்பான்மையான கதையாடல்களான சொல்லால் தோரணங்களைக் கட்டி, பொருத்தமற்றக் கருத்துக்களை ஒற்றைச் சார்புடன் வலிந்து வாதிட்டமைக்கும் மேதமைவாத இலக்கியத்தன்மையிலிருந்து மாறுபட்ட ஒரு வாசிப்பனுபவத்திற்கு வழிதிறந்து நிற்கின்றன. நியூட்டனின் விதி, கால இயந்திரம் போன்ற அறிவியலின் விவாதங்களின் கரு, கடவுளுடனான உரையாடலின் தெளிவு, பழங்கதையாடலாகவே நிகழ்த்தப்பட்ட உளவியல் தாக்குதலாகிய பேயுலகின் மெய்ப்பொருளறிதல் என்கிறப் பொருண்மைகளைக் கையாண்டுள்ள விதம் மிகவும் பாராட்டுக்குரியது.
மேலெழுந்தவாரியாக, சூடாமணி அவர்களின் எழுத்துக்கள் எந்த இலக்குமின்றி தன்னை, தன்னுலகை வரைந்தெடுப்பதாக அமைந்து பல்முனையச் சிந்தனைக்குள் பயணிக்கின்றன. இவர்தம் முயற்சி சிறார்களுக்கான வாசிப்புத் தளத்திற்கானதாக மடடும் சுருக்கிவிட இயலவில்லை. சிறார்களும் எழுத்துலகின் ஆக்கியோன்களாக, ஆளுமைகளாக செயற்களம் புகுதலின் வழிகாட்டுதலாகவும் கொண்டாடப்பட வேண்டும். சூடாமணியை அடையாளப்படுத்துதலின் வழியாக எண்ணற்றத் தமிழ்க் குழந்தைகளின் எழுத்துத்துறைப் பயணத்தைத் தொடக்கிட தமிழ்ப் பெருஞ்சமூகத்ததை அறைகூவி முடிக்கிறேன்.

1 comment:
நன்றி ஐயா
சூடாமணி பற்றிய அருமையான கட்டுரை.
உங்களைப் போன்ற அறிஞர்கள் அவளை மேலும் எழுதவும் படிக்கவும் தூண்டுகிறார்கள்.
Post a Comment