கல்லூரிகளில் சடங்குபோல / வருடாந்திர கும்பாபிஷேகம் போல நிகழ்ச்சிநிரல் செய்யப்பெற்று நிகழ்த்தப்பெறும் மாநில / தேசிய / பன்னாட்டு / பிரபஞ்ச அளவிலான கருத்தரங்குகள் போலல்லாமல் சமகால ஆய்வறிவியலில் நின்று கருத்தியல் பயிலரங்குகள் நிகழ்த்தப்பெறுதல் வெகுசில ஆற்றல்சால் கல்லூரிகளிலேயே சாத்தியப்படுகின்றன.
இந்நிகழ்வுகளை சமகால கற்றல், கற்பித்தல் தொழிலாளியாக நின்று கண்ணுறுகையில் நமக்கு சில தோன்றுதல்கள் உருவாகின்றன.
அவை...
*உள்ளது உரைப்பதும், உற்றன உணர்த்தலும், உறுவன ஓதலும், பெறுவன பகிரலும் வகுப்பறைகளிலேயே நிறைவுற்றப் பின்னும் (நிறைவுற வேண்டும்) கருத்தரங்குகள் அதே வகுப்பறை பாணியில் அமைய வேண்டியதில்லை. அமர்வு அமைப்புகள் மறுபரிசீலனை செய்யப்பெற வேண்டும். விவாதப் பெருவெளி இன்னும் அதிகம் திறக்கப்பட வேண்டும். விரிவாகக் கூறினால், பயிலரங்கத் தலைப்புகள் முன்பதாகவே பங்கேற்பாளர்களுக்குத் தரப்படலாம். பங்கேற்பாளர்கள் தலைப்புகளிலிருந்து வினாநிரல் தயார்செய்து வரலாம். வினவப்படும் வினாக்களின் பொருண்மையினின்று கருத்துரை விரியலாம். விடையிறுப்புகள் குறிப்பிட்ட நேர வரன்முறை செய்யப்பெறுதல் கூடாது. ஒரு நாளில் முற்பகல், பிற்பகல் என இரு அமர்வுகள் மட்டுமே திட்டமிடப்படலாம்.
*குறிப்பாக தத்துவப் பயிலரங்குகளில் தலைப்புகள் காலமுறைப்படி நிரல்செய்யப்பெற்று வழங்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாகவும் கூடுதல் புரிதலுக்கும் உட்பட்டிருக்கும். அதாவது, உலகாயதம், நியாயம், மாம்சம், மீமாம்சம், வைசேடிகம், சாங்கியம், பவுத்தம், சமணம், வேதம் (வைதீகம்) அவைதீகம், சைவம், வைணவம், கிறித்தவம், முகமதியம், மார்க்சியம், நவமார்க்சியம், திராவிடம், தலித்தியம், பெண்ணியம், விளிம்புநிலையியம், சமகால தத்துவ மீட்டுருவாக்கங்கள் என நீண்டிருந்தால் ஓர் தொடர் புரிதலைப் பெற எளிதாயிருக்கும்.
*சமகாலத்தில் தத்துவ அரங்கில் அதிகம் பேசுபொருளாகியிருக்கும் அவைதீகக் கருத்தியல்களான பவுத்தமும் சமணமும் சில தத்துவப் பயிலரங்குகளில் தலைப்புகளிலேயே இடம்பெறாதது வியப்பு மேலிடச் செய்கிறது.
*பயிலரங்கில் நிகழ்த்தப்படும் உரைகள் ஆவணமாக்கம் செய்யப் பெற வேண்டும். கருத்துரைகள் கட்டுரையாக அளிக்கப்படுதல் வேண்டும். அளிக்கப்படும் கட்டுரைகள் நூலாகத் தொகுக்கப்படுதல் வேண்டும். குறைந்தபட்சம் காணொளிப்பதிவுகளாவது செய்யப்படுதல் வேண்டும். இத்தகைய செயல்பாடுகள் அரங்குகளில் நிகழ்த்தப்படும் கருத்துரைகள் ஓதல் (Repeat) முறையினின்று விடுபடும். கருத்துரைகள் யூடியூப் பதிவேற்றம் செய்தலால் வெகுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
*கருத்தியல் (தத்துவம்) அறிமுகங்கள், முன்வைப்புகள், விசாரணைகள், தத்துவங்களின் மாற்றுத் திறனாய்வு, காலந்தோறும் மாறிவரும் புரிதல்கள் என களங்கள் விரிவடைய ஏதுவுண்டாகும்.
ஆவணமாக்கங்களால் சம்பிரதாயமாக ஒரே தன்மையில் வாசித்தளிக்கப்படும் / ஓதப்படும் கருத்தியல் வாதங்கள் தவிர்க்கப்படும். ஒரு முக்கால் மணிநேர உரையில் விளக்கிவிட முடிகிற / விளங்கிக்கொள்கிற அளவுக்கு கருத்தியல்கள் அத்தனை எளிதாக நின்றுவிடாது என்கிறபோது அரங்கில் வழங்கப்பட்ட உரையை மீண்டும் வாசித்தோ / கேட்டோ நினைவேற்றி மேலதிகப் புரிதலுக்குட்படுத்த ஆவணமாக்கல் அவசியமாகிறது.
*ஆவணமாக்கம் செய்தலிலும் சில போதாமைகள் தென்படலாம். சான்றாக, கடந்த ஆண்டு ஒரு கல்லூரியில் சாகித்திய அகாதமி நிதிநல்கையுடன் நடைபெற்ற வள்ளலார் கருத்தியல் தொடர்பான கருத்தரங்கு அதிக கவனம் பெற்ற ஒன்றாகும். உள்ளபடியே மிகச்சிறப்பான திட்டமிடுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வின் கட்டுரைகள் நுண்ணிய ஆய்வு நோக்கின. இவ்வாய்வரங்கின் கருத்துரைகள் தொகுக்கப்பெற்று நூலாக்கம் செய்யப்பெற்றன. ஆனால் நூல்கள் விற்பனைக்கு இன்றுவரை வரவில்லை. முன்மாதிரியான முன்னெடுப்புகளில் இந்நிலை தவிர்க்கப்பட வேண்டும்.
*கல்லூரி ஆய்வுப்புலங்களில் கருத்தரங்குகள் / பயிலரங்குகள் நிகழ்த்தப்பெறுதலில் உள்ள சிக்கல்களை நாம் நன்கறிவோம். அவற்றைத் தாண்டி பேராசிரியர்கள் தன்முனைப்பிலும், கடும் உழைப்பிலும்தான் அரங்குகளை ஏற்படுத்த வேண்டியதாகிறது. நாம் செலுத்தும் உழைப்பை இன்னும் சற்றே கூர்மையாகவும் விரிவாகவும் சமகாலத் தேவையுணர்ந்தும் செய்ய வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகிறோம். குறிப்பாக, ஆய்வுப்புலச் செயல்பாடுகளுக்கான அரசு மற்றும் கல்லூரி நிர்வாக நிதிநல்கைகள் சமகாலத்தன்மையை ஒட்டி மறுவரையறை செய்யப்பெற வேண்டும்.
#உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல்
#காலத்தோடொப்ப_கடத்தல்
#புதியன_முனைதல்
#தமிழாய்வுப்புலம் #தத்துவவியல்
#கருத்தரங்கம் #பயிலரங்கம்

.jpeg)
.jpeg)
No comments:
Post a Comment