நிறமிகளோடு நிறமிலி
வண்ணமயமான உலகிது..! -எதிலும்
வண்ணங்களையேத் தேடுகிறது..!
அதிலொன்றும் வியப்பில்லை!
எனக்கொன்றும் மாற்றில்லை!
விரும்பியவைக்கெல்லாம் விரும்பியவண்ணமாய்
வண்ணங்கள் வடித்துப்பார்க்கும்
சுதந்திரம் வாழ்க!
விரும்பா வெறுப்பினுக்கும்
வருண, வண்ணமேற்றிப் பார்க்கும்
தந்திரம் வீழ்க!
யாரோ தனக்கு வண்ணமடிப்பதை
யாரும் விரும்புவதில்லை!
நானும்...!
கேட்டால் சொல்லிவிடப்போகிறேன்!
என்னை விட என்னை அறிந்தார்
எவருமிருக்க வாய்ப்பில்லை!
என் வண்ணம் எண்ணம்போல் கறுப்பு!
எனை ஊடறுத்து நுணுகிப்பார்
உதிரும் உதிரம் உலரா சிவப்பு!
ஓ..! காட்சிப்பிழையே..!
என்னில் எதை, எதற்க்காய் தேடுகிறீர்?
ஓ..! நிறமிகளே..!
ஏதோ நிறத்தில் இழைநெய்து
ஏனோ போர்த்திவிட
எத்தனிக்கிறீர்!!!
நிறத்துக்கொரு கொள்கை!
கொள்கைக்கொரு நிறம்..!
யார் இட்ட வரையறை?
ஏனிந்த பிரிவினை?
எண்ணத்துக்கோர் வண்ணம் செய்த
அண்ணாவி யாரோ?
நான் எனும் பொருள் முதலோனை ..!
ஆதிப் பொதுவானை..!
நீவிர் அறியமாட்டீர்.!
என்னுள்ளானமனிதத்தை
எந்நிறத்தாற் குறிப்பீர்?
வெண்மையென்றா? நிறமிலி என்றா?
என் கறுந்தோலை உரித்து,
கசக்கிச் சிவப்பைப் பிழிந்தால்
மிஞ்சுமிச்சம் அதுவே காணீர்!
ஓ.! நம்ப மாட்டீரோ ..!
மேற்சட்டைக் கிழித்து
காற்சட்டை அவிழ்த்து
உள்ளாடை வரையில்
ஊடுறுவிப் பாய்கிறீர்.!?
என் நிர்வாணங் காட்டித்தான்
நிறச்சான்று காட்டிடக்கூடுமோ?
அத்தனை அவசியம் எனக்கில்லை!
உமக்குமதுத் தேவையில்லை!
கறுப்பின் வியர்வை நெடி -பலரைக்
கடுகடுக்கச் செய்வதாலே...
வியர்வை விலக்க -நான்
விலக்குஞ் சட்டைகளில்
மிளிரும் நிறமிகளில்
ஒளிர்வது என் நிறமல்லவே!
சட்டைக்கு வண்ணமடி உன்னுரிமை.!
தோலுக்கு வேண்டாமே!
இது எனதுடைமை!
கூடுமானவரை கூடிவருவோரில்
தேடும் நிறங்களை மறந்திருப்போமே!
நிறமிலா வெண்மையும்
எல்லாமேற்கும் கறுப்பும்
அலைநீளமிக்கச் சிவப்பும்
உலகங் கூட்டட்டும்!
- 'நிறமிலி' விஜய்
No comments:
Post a Comment