Saturday, February 27, 2021

யாரும் சொல்லவில்லை.!

 யாரும் எனக்கு சொல்லவில்லை



அந்த கன்னக்குழியின் காட்சிக்காக கால்கடுக்க, நாட்கணக்காய் காத்திருந்தபோதும்...


வகிடெடுத்து வகைபிரித்து

வளைத்துவளைத்து அள்ளிமுடித்து 

சுருளென ஒரு ஓரமும்

சுருக்கமாய் மறுஓரமுமாய் 

காற்றைத்துளாவும்

கற்றைக் கார்குழல் கோதிட எத்தனித்தபோதும்...


பிதுக்கிச் சுழித்து

இடவலமாய் நெழித்து

அங்காத்து மனத்தை

அலைத்து அதிரவிடும் 

அதரங்களை உரசி 

உயிரறுக்க ஏங்கிக்கிடந்தபோதும்...


அதர வீட்டில்

அழகழகாய் அடுக்கிப்போட்ட

மிடுக்கு சொடுக்கும்

பால்வண்ணப் பற்களில் 

கடிபட்டு உடைபட்டு

விழுப்புண் பலபெற்ற

பொற்சங்கிலி படும்பாட்டைப்

பார்த்துவிட பாதைதோறும் பதுங்கி நின்றிருந்தபோதும்...


பின்னங்கழுத்தோரம் பிணைக்கைதி ஆகிப்போய்

வாடி, வதங்கியும்

நாற்றம் வற்றாத

நார்கொண்ட மல்லியின்

நறுமணம் முகர்ந்திட

நடைபாதைகள்தோறும் அளாவித்திரிந்தபோதும்...


குறும்புக்கார குறுக்குக் கம்பாய் 

குறுகுறுத்து குத்திக்கிழிக்கும்

குன்றிமணி கோலிக்குண்டாய்

வகைதொகையின்றி

வறுத்தெடுத்து 

வம்புக்கும் அன்புக்கும்

சாட்டை சொடுக்கும்

வசியக்கண்களில் சிக்கிடாமல்

சிரம் மறைத்து சிந்தை அழிய

சிதறிக்கிடந்த கனவுகளின்போதும்...


நடமாடும் நாட்டியமாய் 

நர்த்தன மொகனமாய்

உலாவரத் துணைவரும்

பளிங்குப் பாதங்களும்!

பட்டாம்பூச்சியின் இறக்கையாய்

காற்றில் எங்கும் 

விசிறிப் பறக்கும்

மலர்க்கொம்பாய் கைகளும்!

அதில் தளிராய் விரலும்!

அளவு அளவாய் இடையும்!

அவ்வளவாய் உடையும்!

என்று

கோலம் முழுக்கக்காண 

கொண்டைச் சேவலாய்

கொக்கரித்துத் திரிந்தபோதும்...


யாரும் எனக்கு சொல்லவில்லை!

அவள் திருமதி என்று...


No comments: