Wednesday, December 27, 2023

குடும்பம் - தனி ஆதலும் தனி ஆக்கலும்.!



குடும்பம் - தனி ஆதலும் தனி ஆக்கலும்.!

சி.விஜய்

உலகில் தோன்றிய உயிர்களில் உயிர்பிழைத்தல் (Survival) எனும் வாழ்தலை உறுதிப்படுத்திக் கொள்ள உயிர்கள் பயன்படுத்திவரும் மிக வலுவான உத்தி குழுவாதல் என்பதாகும். உலகில் மனித விலங்கினத்தின் ஆதிக்கத்தின் பின்புலத்திலும் குழுவாதல் எனும் பண்பே இயக்கங் கொள்வதை அறிய பெரிய ஆய்வுகள் ஏதும் தேவையில்லை. சக விலங்குயிர்களுடனான உயிர்பிழைத்தல் போட்டியில் மனிதன் வலுவான நிலைபெற குழுவாகி வாழ்ந்தான். மிக வெற்றிகரமான விலங்காக இன்றுவரை இந்த கிரகத்தை ஆட்சி செய்கிறது மனித உயிர்க்குழு.

குழுவாதலும் கலைதலும்

உயிர்பிழைத்தலில் சக விலங்குடன் ஏற்பட்ட மோதலுக்கு பயன்பட்ட குழுவாதல் உத்தி ஒரே குழுவுக்குள் ஏற்படும் முரண்களால்... அதிகாரப் பிணக்கால்... தனிக் குழுக்களாக உடைந்தது. உடைகின்ற குழுக்கள் தமக்குள்ளான பிணைப்பை உறுதிசெய்ய ஒருங்கிணைப்புக்கான அடையாளங்களை (தலைமை, நிலம், மொழி, வழிபாடு, சாதி, நிறம்) உருவாக்கிக்கொள்ளும். குழுக்களுக்கு இடையேயான மோதலால் உருவான நாடுகளும் அரசுகளும் ஒரு குழு பல குழுக்களால் ஆளப்படுகிற தன்மையை ஏற்படுத்தியது. இந்திய மக்கள் குழுக்களின் ஒருங்கிணைப்பு அடையாளங்களில் தெய்வ வழிபாடும் உறவுமுறைகளும் (குடும்பக் குழு) உள்முரண்களைக் களைந்து அல்லது முரண்களுடனேயே குழுவோடு இணைந்திருக்க வேண்டிய அவசியத்தைத் தந்திருக்கின்றன. அவ்வகையில் குலதெய்வ / குடும்ப தெய்வ வழிபாடு மற்றும் வருடாந்திர கொடைவிழாக்கள் தென்னிந்திய குழுக்களிடையே முக்கியமானதாகும். குழுக்கள் கலைதலும் புதுக்குழு உருவாதலும் இயல்புதான் என்றாலும் ஒரு குடும்பக் குழுவிலிருந்து தனியாக ஆதலும் தனித்து விடப்படுதலும் சிந்திக்க வேண்டியவையாகும்.

.

குடும்பக்குழு முரண்கள்

ஒவ்வொரு தனிநபருக்கும் சக குடும்ப உறுப்பினருடனான உரிமையும் அன்பும்  குடும்பக் குழுவிற்குள் ஏற்படும் உள்முரண்களுக்கு காரணமாதலும் உண்டு. முரண்களைக் களைகின்ற வாய்ப்பை மூதாதையரான குலதெய்வம் அல்லது வயதில் மூப்படைந்தோர் தருகின்ற 'மூப்பர் கட்டளை மொழி' (Supreme Command) எனும் செயல்முறையால் தணித்துக்கொண்ட குடும்பங்கள் தற்போது கால மாற்றத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ள முடியாமல் திணருகின்றன. இதனால் முரண்கள் மங்குவதற்கு பதிலாக மருக்களாகவும் வடுக்களாகவும் மாறி வசவுகளுக்கும் வஞ்சத்துக்கும் வழி திறக்கின்றன.


தனி ஆதல்

குடும்ப உள்முரண்களால் ஆற்றாமை கொள்ளும் தனியர் தன்னை குடும்பத்தினர் கட்டாயமாக ஒன்றிணைய வேண்டிய நிகழ்வுகளில் (வழிபாட்டு விழாக்கள், சுப வைபவங்கள், துன்பியல் நிகழ்வுகள்) பங்கெடுத்தலைத் தவிர்க்கிறார்கள். இந்தத் தவிர்ப்புகள் அல்லது ஒதுங்குதல் காரணமாக தனி ஆதலை மெல்ல மெல்ல சாத்தியப்படுத்திக் கொள்ள முனைகிறார்கள். ஆனாலும் தமக்கான நிகழ்வுகளின் வருகையின்போது தமது குடும்பக் குழுவினரைத் தவிர்த்து இயங்குவது சாத்தியமில்லை என்பதையும் உறவுகளில்லா வலுவிழப்பையும் உணர்ந்துவிடுகிறார்கள். ஆக தனி ஆதல் என்பது மிகக் கடினமாக மற்றும் போலியான முடிவாகும். இம்முடிவுகளில் குடும்பக்குழுவுக்கோ தனிநபருக்கோ ஏற்படும் பாதிப்புகள் தற்காலிகமானவையே தவிர நிலையான பாதிப்புகள் இல்லை.


தனி ஆக்கல்

தொன்றுதொட்டு நிலவும்  வழக்கப்படி குடும்பக் குழுக்களிலிருந்து குழுவின் உறவினரால்  வெளிக் குழுவுக்கு மணமுடித்து மகிழ்வோடு அனுப்பப்படும் பெண்டுகளின் நிலையுள் தனி ஆக்கம் நடந்து வருவது என்பது இயல்பு. இவ்வகை தனி ஆக்கம் புது ஒரு குடும்பக் குழுவுடனான ஒருவாரான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பைத் தரும் நோக்கில் பெரியோரால் தரப்பட்ட நல்ல திட்டமேயாகும்.


ஆனால்..!

வெளிக் குடும்பக் குழுவின் எதிர்பாராத அழிவில் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உயிர்பிழைத்தலுக்கு யாரையேனும் சார்ந்து வாழ வேண்டிய ஆதரவற்ற நிலைக்கு ஒரு பெண்டு ஆளாக நேரிட்டால் அதன் வாழ்வை நிலைப்படுத்த உதவும் கடமை குடும்பக் குழுவினருக்கானதே. அவரவர் வாழ்வே பல சிரமங்களுடன் நடக்கும் இக்காலத்தில் குறைந்தபட்ச தார்மீக ஆதரவு (Moral Support) என்பதை வழங்கிவிட்டு ஒதுங்கிக்கொள்வது புரிந்துகொள்ளக் கூடியதே.


அதேவேளையில் உதவிகளின்றியும் எல்லா துன்பங்களையும் தாங்கியும் தாண்டியும் மீண்டும் சுயமரியாதையுடன் உயிர் வாழ்வை உறுதிப்படுத்திக் கொள்ள எழுந்துவரும் தன் கிளையை 'பெண்வழி' & 'பொட்டச்சி வழி' என இழிவு செய்வதும் மிகக் கொடூரமான தனிமைப்படுத்தும் தனி ஆக்கமே ஆகும். இவ்வகை நிகழ்வுகளில் தனித்துவிடப்படும் பெண்டுகளின் வழித்தோன்றல்கள் நாற்புறமும் பாதிக்கப்பட்டு கடும் இழப்புகளை வாழ்வுநெடுகவே சந்திக்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டியது மிக முக்கியமானது. குடும்பக் குழுக்களிலிருந்து தனித்து விடப்படும் அல்லது விரட்டப்படும் எந்த சிறுகுழுவும் பெருங்குழுவாக சிலகாலம் தேவைப்படலாம். ஆனால் காலமும் இயற்கையும் மிக விநோதமான தீர்ப்புகளை வழங்கும் தன்மையுடையது.


'வலியது வாழும்' என்பது இயற்கையின் நியதி என்றால் 'எளியதும் வாழும்' என்பதே இறைவன் நியதி.

அறிவோம்! தெளிவோம்.! வாழ்வோம்.!

No comments: