தென் மாவட்டங்களில், குறிப்பாக எனது பிறப்பிடமான திருவைகுண்டம் தாலுகா மக்களை மையமிட்ட கதைக்களம் என்பதால் மிக நெருக்கமான உணர முடிந்தது.
வாழையின் கதைக்களம் தான் எங்கள் ஊர். சோலைப்புதூர். வாழை வழியாக என் ஊருக்குள் போவோம். வாருங்கள்.
நான் தார் (வாழைத்தார்) சுமக்கச் சென்றிருக்கிறேன். ஆனால் இத்தனை துன்பங்களை ஒருசேர அனுபவித்ததில்லை. எங்கள் ஊர் (சோலைப்புதூர்) தம்பிகள் இன்னமும் வாழைத்தார் சுமக்கிறார்கள். அந்த ஊர்களில் பெரும்பாலான சிறுவர் சிறுமிகள் ஊருக்குள் இருக்கும் தொடக்கப்பள்ளியைத் தாண்டி மேனிலைப்படிப்புக்கே நகர்வதில்லை. இந்தத் தலைமுறையில் நான், முருகப்பெருமாள், கனி அண்ணன் என ஒன்றிரண்டு பேர் விதிவிலக்காக கல்லூரி வரை வந்தோம்.
நாங்களும் கிரிக்கெட் விளையாட பந்து, பேட் வாங்கவும், பந்தயப் பணத்துக்காகவும் வாழைத்தார் சுமந்திருக்கிறோம். வாழை விளையும் முன்பு சாணி உரம் சுமப்போம்.
உண்மையில் வாழையின் கதைச்சூழல் பட்டியல் மக்களைக் குறிப்பது அல்ல. பெரும்பான்மையும் பிற்படுத்தப்பட் சமூகத்தினரின் வாழ்வியல் அது. கூடுதல் தகவல் என்னவென்றால் அங்கே சுமட்டுக்கு ஆள் கொண்டுவரும் கங்காணி (கண்காணிப்பாளர்), யாவாரி (வியாபாரி / குத்தகைதாரர்), வாழைத்தோப்பு விளைவித்தவர், நிலத்தின் உடைமையாளர் எல்லாரும் ஒரே சமூகத்தவர்களாக இருக்கிறார்கள்.
குறிப்பாக, நிலத்துக்கு உடைமையாளர் சென்னையிலோ மும்பையிலோ இருப்பார் உள்ளூர் ஆள் ஒருவர் பார்வைக்கு (வாய்மொழியாக மேற்கொள்ளப்படும் குத்தகை) எடுத்து, நடவு செய்து, கான் (வாய்க்கால்) வெட்டி, நீர் பாய்ச்சி பராமரிப்பார். காற்றில் வாழை சாய்ந்துவிட்டால் நட்டம் அவரையே சாரும். குத்தகைத் தொகையில் மாற்றமிராது. நட்டவர் தோட்டத்தில் குடும்பத்துடன் தினமும் வேலை செய்வார். போதாததுக்கு ஊர் பெண்களைக் கொண்டு உரம் சுமத்தல், களை எடுத்தல் போன்றவை நடக்கும். எங்க ஆச்சி உரம் சுமக்கப் போவாங்க. வரும்போது கடவாப் பெட்டியில் (பனையோலையில் வேயப்படும் சுமைப்பெட்டி) பழம் பறிச்சிட்டு வருவாங்க.!
விளைவித்தவர் முன்பணம் பெற்றுக்கொண்டு வியாபாரிக்கு விற்றுவிடுவார். வியாபாரி காய் வெட்டி கேரளாவுக்கு விற்றிடுவார். மலை வாழை (கேரள நேந்திரம்) ரகத்தை இங்கே விதைக்கவும் காரணங்களுண்டு. எல்லாம் ஒப்பந்தமும் முன்பணமும் தான். வாழை குலைத்து நிற்கும்போது காற்று பலமா இருந்தா என் சித்தப்பா பதைபதைப்பதையும், வாழைத்தோப்புக்கு உள்ளேயே தங்கிவிடுவதையும் பார்த்திருக்கிறேன். வாழை சரிஞ்சிட்டா முன்பணம் வாங்கிய விவசாயி வாங்கிய பணத்தை வட்டியோடு வைக்கணும்.
உண்மையில் விவசாயம் செய்பவரும் தார் சுமக்க போவார். அவர் பிள்ளைகளையும் கூட்டிகிட்டு தான். படிக்க வேண்டிய வயதில் தார் சுமந்த ஒரு தலைமுறை முழுக்க கல்வியின்றி சென்னையின் மளிகைக் கடைகளிலும், காயலான் கடைகளிலும், மிட்டாய் கடைகளிலும் வேலைக்கு சேர்ந்து வெளியூரில் வேலை செய்வதாக உள்ளூருக்குள் கவுரவப்பட்டுக் கொண்டார்கள்.
ஒப்பீட்டளவில் பட்டியலின சமூகத்து மாணவர்கள் பெற்ற கல்வியும் அரசுப்பணியும் தொழில்வாய்ப்புகளும் கால்பங்கு கூட எங்கள் சோலைப்புதூர் பெற்றதில்லை. ஆனால் சாதிய மேட்டிமை எண்ணங்கள் மட்டும் குறைவின்றி இருக்கிறது.
எங்கள் ஊர் கோவில் கிணற்றில் இன்றுவரை பட்டியல் மக்களை தண்ணீர் எடுக்க அனுமதிப்பதில்லை. இதை ஒரு மனிதாபிமானமற்றச் செயலாகவோ சட்டமீறலாகவோ எண்ணாமல் சாதிப் பெருமையாகப் பார்க்கும் எண்ணமே நிலைபெற்றுள்ளது.
கோவில் விழாக்களில், சுப, துக்க நிகழ்வுகளில் கூரை வீடுகளும் கூலித்தொழிலாளிகளும் நிறைந்த எங்கள் ஊர் ###### கோட்டை என்று விளம்பரப்பதாகைகள் தாங்கும். அதேபோல் பக்கத்து ஊர் ##### கோட்டை என்று அரிதாரம் பூசிக்கொள்ளும். பிற நாட்களில் எல்லாரும் கூலிக்காரர்கள் தான்.
இந்தத் தலைமுறையில் ஓரளவு கல்வியின் மைய நீரோட்டத்துக்குள் எங்கள் தம்பிகள் வந்தாலும் அதை அறிவியல் பூர்வமானதாகவோ வேலை வாய்ப்புக்கானதாகவோ தொழில் முனைவுக்கானதாகவோ மாற்ற முடியவில்லை. இதன் காரணமாக நான் காண்பது அடிப்படையில் ஊறிப்போன சாதிய மனோநிலை தான். தம்பிகளுக்குள் மிக மோசமான அளவில் சாதி உறைந்து கிடக்கிறது. இன்னமும் கூலிக்கார மனநிலையிலிருந்தும் விடுபடவில்லை.
அதிகபட்சமாக கிரிஸ் வண்டி (உழவுக்கு சேறு அடிக்கும் இயந்திரம்), குட்டியானை (லோடு வேன்) என்ற அளவிலேயே திருப்தி அடைந்துவிடுகிறார்கள். தங்கள் பிள்ளைகளை பெற்றோர் ஊரைவிட்டு வெளியே ஒரு உலகம் இருப்பதையே மறைத்து வளர்க்கிறார்கள். செல்போன்கள் அதை உடைத்தாலும் அறிவியல் கல்வி மயப்பட்டப் பொதுச்சமூகத்தின் மீது அவர்களுக்குள்ள பயத்தை 'கவுரவம், சுயமரியாதை, கெத்து' என மறைத்துக்கொள்கிறார்கள்.
இந்த வளர்தளத்தில் வளர்க்கப்பட்டு பின் ஏதோ ஓர் நல்வாய்ப்பால் வெளியேறி மீண்டுவிட்ட நான் அவர்களை மீட்கும் முயற்சியின்றியும் கையறுநிலையிலும்தான் இருக்கிறேன்.
வாழையின் வழியாக என் சோலைப்புதூரைக் காட்சிப்படுத்திய மாரி செல்வராஜ் அண்ணனுக்கு வாழ்த்தும் நன்றியும் அன்பும்.

2 comments:
அருமையான அனுபவப் பதிவு.
Post a Comment