Monday, August 19, 2024

கந்தர்வனின் அடையாள மீட்டுருவாக்க அறைகூவல்

 

கந்தர்வனின் அடையாள மீட்டுருவாக்க அறைகூவல்

விஜய்.சி

     பௌதிக ரீதியாக நோக்கப்போந்தால் பருப்பொருள்களான இப்பிரபஞ்சத்தின் இயங்கியல் அடிப்படையாவது நிலமேயாகும். மனிதன் தன்னையும் தான் வாழும் நிலத்தின் தன்மையையும் உணர்ந்தமையே நாகரீகங்களின் தோற்றுவாயாக அமைந்தது. உயிர் தப்பிப் பிழைத்தல் எனும் உயிர்களின் முதன்மை இயக்கக் காரணிக்கு நிலம் ஒரு துவக்கப் புள்ளியாக அமைந்தது. மனித பரிணாமத்தின் அடிப்படையும் இத்தகையதே. நிலத்தை அடிப்படையாகக் கொண்டே மானுடம் நீட்சி கண்டமையை மனிதகுல வரலாற்று ஆய்வுகள் வெட்டமாக்குகின்றன. புராதனப் பொதுவுடமை சமூகத்தில் உற்பத்தி சக்திகளின் துவக்கக் காலந்தொட்டே நிலத்தை அடையாளமாக்கிக் கொண்டு புறச்சூழலில் இருந்து தம்மை வேறுபடுத்தியும் உயர்வாகவும் காட்டிக்கொள்கிற எண்ணப்போக்கு மனித இயல்பாக இருந்ததின் வெளிப்பாடே ஒரே நிலத்திற்குள் உண்டான பன்முக அடையாள உருவாக்கங்களுக்கும் பண்பாட்டு கிளைத்தலுக்கும் காரணமாய் அமைந்தது.

     சமூகத்தின் இருப்பும் இயங்கியலும் குறித்தறிய இலக்கியங்களே நம்மிடையுள்ள பெருவாய்ப்பு. சமூகத்தின் அத்தனைக் கூறுகளையும் கண்டடைய இலக்கியம் மட்டுமே போதுமானதன்று. இலக்கியமும் தேவை என்பதாகக் கொள்ளலாம். இலக்கியக் கூறுகளை எப்படி முழுதாய் ஏற்கலாகாதோ அவ்வாறு முழுதாய் மறுத்தலும் ஆகாது. மரபிலக்கியங்கள் நில முறைப்பட்ட வாழ்வியலை அழகியலோடு பதிவு செய்துள்ளன. நீதி பக்தி காப்பிய  இலக்கியப் போதனைகளிலும் அற முறைமைகளிலும் நிலம் இறைவன் மொழி வழக்காறு உட்பட தொழில்முறைப்பட்ட கருப்பொருட்களுள் அவ்வ நிலத்துள் உயர்ந்தோர் ஏனையோர் என அடையாளங்களை இட்டு யாரைப் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும் என்கிற அரசியல் நோக்கிருப்பதைக் காணலாம்.

     மேலாதிக்க மனோநிலையின் தன்மைக்கு நிலங்களின் கோன்முறை அரசு அமைப்புகள் புதிய வடிவங்களையும் வல்லமையையும் அடையாளங்களின் வழியாகவே அளித்துள்ளன. தற்போதைய நிலம்சார் வாழ்வியலை  உண்மைத் தன்மையோடும் மாற்று அறிவியல் மற்றும் அரசியல் சிந்தனையோடு நவீனக் கவிதைத்தளங்கள் அதிகம் வாதிடுகின்றன. மானுடவியல் கருத்தாக்கங்கள் மனிதப் பண்பாட்டுக்கும் இயற்கைச் சூழலுக்குமானத் தொடர்பினை உள்வாங்கிக்கொண்டு சூழலுக்குள் அறிவியலை மையமிட்டு நகர்ந்த பின் அடையாளங்கள் சார்ந்த விவாதங்கள் நவீனக் கவிதைகளில் உக்கிரமடைந்துள்ளன என்கிறார் கவிஞர் பாலா. தமிழ் கவிஞர்களின் ஆராய்ச்சிக்கும் சிந்தனைக்கும் இடமளிக்கக் கூடிய வகையில் தமிழ் அடையாளப் பண்பாட்டுத் தளம் பரந்துபட்டுள்ளது. தன்னுணர்ச்சிக் கவிதைகளில் இத்தகைய தன்மைகள் அதிக வீரியம் பெற்றிருப்பதை காணமுடிகிறது. வெகுமக்கள் வயப்பட்ட நவீனக் கவிதையின் அரசியல் என்பது தனக்கான அல்லது தன்னைச் சார்ந்தோரின் இருப்பைப் பற்றியது தன் உடைமைகளைப் பற்றியதாக உரிமைகளைப் பற்றியதாக உள்ளது.

     இழந்த அடையாளங்களை மீட்டு பொதுமை சமைப்பது என்கிற இலக்கினை அடைய உயிரியக்கத்தின் மையப்புள்ளியான நிலத்தை உரிமை கொள்வதன் மூலம் அடைந்திட இயலும் என்கிற நோக்கத்திலேயே மக்கள் இலக்கியங்கள் தம் மனதின் குரலை சமூகத்தின் குரலாக வெளிப்படுத்துகின்றன. அடையாளங்களே அதிகாரங்களின் தலைமை பீடமென்பதை உணர்ந்த மேலடுக்கு அவற்றைப் பகிர்ந்து கொள்வதை ஒருபோதும் ஏற்காது. இதை வலியுறுத்தாமல் சமூக அமைப்பை இரசனை அம்சமாக மாற்றி அழகியல் சமைப்பதும் அதிநுட்பமான இலக்கிய அரசியலே. பிரபஞ்சத்தின் இயங்குதளங்களை விட அழகிய இயற்கைப் பயன்பாடும் கட்டமைப்பின் ஒருசார்பும் நிலைபெற வேண்டும் என்பதுவே அழகிலக்கிய அரசியல். சுமகால அடையாள இயங்கியலின் தன்மையைப் பிரதிபலித்தலன்றி பொருளாதாரச் சமத்துவத்துக்கான மறுகட்டமைப்புக்கு வழியில்லை. அதேவேளையில் அடையாளங்களை மையமிட்ட ஒருங்கிணைப்புகளும் மீண்டும் சமநிலையற்ற கட்டமைப்பிற்கே வழி செய்துவிடக்கூடிய ஆபத்தும் உண்டு. நிலம் நிலம் சார் தொழில் தொழில்சார் கல்வி அனைத்துக்குமான மொழி என ஒன்றையொன்றுப் பின்னிப்பிணைந்தவாறு அடையாளங்கள் கற்பிக்கப்பட்டு ஒன்றையொன்று ஆதிக்கம் செலுத்த, கருவிகளாய் பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளன. மரபிலக்கியங்கள் இவ்வடையாளங்களோடு நிறுவனப்படுத்தப்பட்ட சமயங்களையும் முக்கிய அடையாளமாக முன்னெடுத்தன. சங்க இலக்கிய முன்மொழிவுகளின்படி ஆதிச்சமூகத்தில் குழுமப்பட்டு நிலைநிறுத்திக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட அடையாளக் கூறுகள் காலப்போக்கில் ஆதிக்கங்களுக்கு அடிகோலுவனவாய் அமைந்தமைப் புலனாகிறது.

     உயிர் பிழைத்தலுக்காய் நாடோடிச் சமூகங்களாகக் குழுமப்பட்டபோது தொடங்கி வேளாண்குடிகளாகவும் தொழிற்குடிகளாகவும் நிலைபெற்றபின் அடையாளங்கள் பன்முகப்பட்டு பிளவுபட்டு பலபட பரிணமித்துள்ளன. இவற்றுள் நிறுவனப்பட்ட அடையாளங்கள் நிலம் மொழி சமயம் சாதி முதலியனவாகும். குழுக்கள் தத்தம் மேலாண்மையை நிறுவுவதற்கும் பிறவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் அடையாளத் தக்கவைப்பின் மூலம் சூழலைத் தன்வயப்படுத்திடத் தகவமைத்துக் கொண்டு அடையாளக் கற்பிதங்களை தமக்கேற்றார்போல் உருவாக்கிக்கொண்டன.  அடையாளக் கூறுகளின் தொகையை நிர்ணயிப்பதிலும் அவற்றைப் பெருவழக்காய் அமைப்பதிலும் நிலம் பெரும்பங்கை வகித்துள்ளது.

கவிதையும் கவிஞனும் அடையாளங்களும்



     நவீனக் கவிதை வடிவங்கள் அடையாளக்கூறுகளை நுணுகித்தேறி தமக்குள் பிரதிமை கொண்டு விரிக்கின்றன. மரபியல் தத்துவஞானியின் நோக்கை விட நவீனக்கவிஞனின் நோக்கு கூர்மையானது.  தேவையை ஒட்டிய சீற்றம் உடையது. சமூகத்தின் அங்கலாய்ப்பு மற்றும் ஆற்றாமையின் வெளிப்பாடாகவே மக்களுக்கான இலக்கியம் உருக்கொள்கிறது. அழகியலின் மறைவிடங்கள் அழுக்கையும் அழுகையும் தேக்கி வைப்பதோடு அவற்றிற்கு அழகியக் கலைப் மேற்பூச்சிடுகின்றன. மக்கள் இலக்கியங்கள் வழியாக அவற்றை வெட்டத்துக்கு இழுத்துவந்து மறுகட்டமைப்பு செய்யும் வேலையை நுவல் திறன்மிக்க சமூகப் படைப்பாளன் செய்கிறான். தீவிரமான சமூக உணர்ச்சி என்னும் நிலையிலிருந்து தன் அடையாளங்களை உரிமை கோருகிறான். பரந்த நிலப்பரப்பும் குறைந்த மக்கள்தொகையுமாய் வாழ்ந்த காலங்களில் அடையாளம் அத்தனைச் சிக்கல் மிக்கதாய் இருந்திருக்கவில்லை. ஆனால் நவ காலத்தில் ஏற்பட்டுள்ள மக்கள் குழுமங்களின் திரட்சியும் அதன் பின்புல அடையாளக் கூறுகளும் அடிக்கோடிடப்பட வேண்டும். இதை மக்கள் கவிஞன் வெகு யதார்த்தமாக செய்து முடிக்கிறான்.

     இருபத்தோராம் நூற்றாண்டின் இலக்கியச்சூழல் இவற்றை எதிர்த்து எதிர்நீச்சல் போடத்துவங்கியது. அறிவினொளி கொண்டு மரபின் மறைவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது. மரபால் கட்டமைக்கப்பட்டிருந்த அடிமைத்தனங்களையும் பிற்போக்குவாதங்களையும் அடையாளங்கள் ஆக்கியிருந்த வல்லாதிக்க நிறுவனங்களையும் கருத்தியலோடு எதிர்த்தது. மட்டுமல்லாமல்; அவசியத்தை உணர்ந்துகொண்டு அமைப்புக்கு உள்ளிருந்து போராடும் உத்தியை படைப்பாளிகள் கையாண்டனர். இதன் ஒரு பகுதியாகவே கவிதையின் ஊடாக மறுகட்டமைப்பையும் அடையாள மீட்டுருவாக்கத்தையும் முன்மொழிந்தார்கள். குறிப்பிட்ட இலக்கியக் கலைவெளிக்குள் கட்டுப்பாடற்ற கருத்தியல் நுண்ணுணர்வுடன் சீர்திருத்த நோக்கங்களைத் தீர்மானித்துக் கொண்டு செயல்பட்டனர். வெகுமக்களின் இலக்கிய அறிவுத்தளச் சார்பு இதற்கு வழிவிட்டது. கவிஞனின் குரல் மானிட வாழ்க்கையை உணர்கிற உணர்த்துகின்றதாக இருக்கவேண்டும். நடப்பியல் உண்மைகளை வெளிக்காட்டுவதன் மூலமே மனிதன் தன்னை அடையாளம் கண்டுகொள்ள இயலும். தனிமனித ரீதியில் எழுதும் எல்லா குரல்களையும் மானுட குரல்களாகவே அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அவ்வாறானக் கவிஞனின் குரல் நிகழ்காலத்தின் தன்மைகளை வரலாற்றோடு நுணுக்கமாக படம் பிடிப்பதாக இருக்க வேண்டும் என்கிறது இரா.மோகனின் வாதம். அது ஒப்புதற்குரியதே.

     சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளும் அவற்றால் உருவாகும் நடைமுறைகளும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வறுமை வேலையின்மை விலைவாசி கடத்தல் கலப்படம் லஞ்சம் பொறுப்பின்மை அறியாமை என அத்தனைத் திசைகளிலும் அடையாளங்களாக முன்னிறுத்தப்பட்ட எதுவொன்றும் கவிஞனின் சொற்களுக்குள் புதைந்து நடைமுறை வாழ்க்கையைப் பிரதிபலிப்பதோடு ஏற்றத்தாழ்விலிருந்து மீட்சிக்கான வழியையும் காட்ட வேண்டும். நடப்பியல் காட்டித் தீர்வை முன்மொழிவது கவிதை எனில் அவை பிரச்சனைகளையும் அவற்றின் பின்புலமாக அமையும் அடையாளக் குவிமாடங்களையும் இனங்கண்டுக் குறிப்பிட வேண்டும். இத்தகையக் கூறுபாடுகளைத் தாங்கியேதான் கந்தர்வனின் கவிதைத்தளம் இயங்குகிறது.

கந்தர்வ வாதம்

     நவீனக் கவிதைகளுக்குள் முற்போக்குக் கருத்தியலைப் புதைத்து அவற்றைத் தெளிவுபடுத்துவதற்கான உத்திகளைப் படைப்பாளிகள் அதிகமாகக் கையாண்டுள்ளனர்.  தேசியங்கள் உழைப்பின் பாலான சாதிக் குழுக்கள் மொழியின் பாற்பட்ட இனக்குழுக்கள் சமயம்சார் குழுக்கள் எனுமாறான இவை ஒன்றையொன்று கைப்பற்றவும் இரண்டு குழுக்கள் இணைந்து மற்றவற்றோடு மோதிக்கொள்ளவும் அடிப்படையாக அமைவதும் நில அடையாளத்தின் வாயிலாக ஆதிக்கத்தை நிறுவுகிற முனைப்பே என்றப் புரிதலுடன் தான் கந்தர்வனின் கவிதைத்தளம் இயக்கப்படுகிறது. வாழ்க்கைச் சிக்கல்களை தனிமைப்படுத்தி முற்றிலும் புறவயமாக நிறுத்தி பார்க்கும்போதுதான் வாழ்க்கை குறித்த மதிப்பீடுகளையும் அவற்றுள் புதைந்துள்ள காரணிகளையும் கண்டறிய இயலும். நடப்பியல் பிரதிபலித்து நிகழ்காலத்தை பேசும் அதேவேளையில் லட்சிய நோக்கை முதன்மைப்படுத்தும் போதுதான் பாதுகாக்கப்பட்ட அடையாளக் குறியீடுகளை மக்களை நோக்கி நகர்த்த அவற்றை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய அவசியத்தை விளக்குகிறது கந்தர்வக் கவிதை வரிகள்.

     சொற்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் கந்தர்வன் வரிகள்தோறும் வேகம் இயம்பும் நேர்த்தி கருத்துக்குத் தரும் புத்தொளி ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு புதிய உண்மைகள் புதிய உருவங்கள் தந்து உள்ளடக்கங்களை கருத்தியலால் செழுமைப்படுத்தி மறுகட்டமைப்பை வலியுறுத்துகிறார். மனிதன் தன் உணர்ச்சியை பெறுவதும் இழப்பதும் அடையாளங்களை நிலைக்களனாக வைத்தே நடைபெற்றிருக்கின்றமையும் ஆற்றல்மிக்கக் கவிதைகள் கவிஞனின் நோக்கங்களை மீறிய விளைவுகளை உண்டாக்குகின்றமையும் அவ்வாறு விளைவுகளை நோக்கி நகருகின்ற கவிதைகளே மாற்றத்திற்கானக் கருதுகோள்களை விதைக்கும் என்பதையும் கந்தர்வனின் கவிதைகளின் அடிப்படைப் புரிதலுக்குள்ளாவையாகக் கொள்ளலாம்.

     நிறுவனப்படுத்தப்பட்ட அனைத்திலும் முன்னைக் காட்டிலும் அதிவேக மாற்றங்கள் நிகழ்கின்றன. பரிணமித்த உயிரினத்தின் உன்னத வடிவாகிய இலக்கியங்கள் மட்டும் மரபு தழுவியதாக நின்றுவிட்டால் மொழி அடையாளங்களும் நாளடைவில் பயனற்றுப் போய் நின்றுவிடும். மொழி அடையாளம் தகவல் தொடர்புக்குக் கண்டறியப்பட்ட கருவியாதலால் அது எப்பொழுது போதாமையைச் சந்திக்கிறதோ அப்பொழுது அதன் தோல்வி உறுதிசெய்யப்படும். மொழி அடையாளத்தை அகவயப்பட்ட நிலையில் போற்றிப் பாதுகாத்து நெடுங்காலம் நகர்த்தி விடுதல் இயலாது. பயன்படுநிலையை ஒட்டியே மொழி எனும் கருவி மனித சமூகத்தின் அடையாளமாக நிலை பெற முடியும். புனிதம் கற்பிக்கப்பட்டு எந்த ஒரு அடையாளங்களும் நிலைபெற்றாக வேண்டிய அவசியம் எப்போதுமே மனித சமூகத்துக்கு ஏற்பட்டிருக்கவில்லை. அவ்வாறு கற்பிக்கப்பட்ட மொழி அடையாளங்கள் பலவும் சிதைந்து வழக்கொழிந்தமையே வரலாறு. ஆக  எத்தன்மைத்தாகிய அடையாளமோ வழக்கோ  அனைத்தும் பயன்படுநிலையை மையமிட்டனவே.

     நவீன முதலாளித்துவ யுகத்தில் மனித இருப்பைத் தீர்மானிக்கின்ற நிலைத்த அடையாளங்கள் வெகுகாலமாக அதிகாரச் சமூகத்தால் பிற்போக்குத்தனங்களோடு  ஏற்றுக்கொள்ளவும் பாதுகாக்கவும் ஏனையோரிடம் திணிக்கவும் பட்டிருக்கின்றன. நவீனச்சமூகம் என்பது மானுட வாழ்வின் ஒரு காலகட்டத்தின் ஒட்டுமொத்த இருப்பாக உருவாக்கப்படுவது. சிக்கலான அமைப்பு கொண்டது. முற்றிலும் தனித்தன்மை கொண்ட பல்லாயிரம் மானுடங்களின் தொகுப்பு அது. நவீனச் சமூகம் பொது அடையாளங்களாலான கருத்துத் தளத்தால் இணைக்கப்பட்டுள்ளது.      சமூக மாற்றம் பற்றிய சிந்தனைகளின் தொடக்கம் சமூகத்தின் அடையாளங்களைப் புரிந்து கொள்வதிலிருந்து ஆரம்பிக்கிறது. கவிஞனால் அதன் பல்வேறு வெளிப்பாடுகளும் கூர்மையான அவதானிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன. சமூகக் கட்டமைப்பை மீட்டுருவாக்க அல்லது மறுகட்டமைக்க அடையாளங்களை வர்க்க ரீதியிலான கூறுகளாக இனம்கண்டு கொள்ளுதலும், மானுடப் பொருளியல் சமநிலைக்கான நகர்வுக்கு அடையாளங்களை அடிப்படையாகக் கொள்ளுகின்றமையும் முற்போக்கு அரசியலுக்கு மக்களை அணியப்படுத்தும். அழகியலை தவிர்த்து அரசியலை முன்னிறுத்தும் மக்கள் இலக்கியங்கள் சாத்தியப் படுத்துகின்றன இவ்வ அடிப்படைகளிலிருந்து கந்தர்வன் கவிதைகளை மறுமதிப்பீட்டுக்கு உட்படுத்தும் பொழுது மேலதிக இலக்குகளை எட்ட முடியும்.

     மேல் கட்டுமானங்களாகிய மதம் மொழி இனம் உள்ளிட்டவை இலக்கியத்தை அரசியல் ஆய்வுகளுக்கான கச்சாப்பொருள்களாக மாற்றுகின்ற முயற்சியை நிச்சயம் மேற்கொள்ளத் தான் செய்கிறது என்றாலும் அறிவு தளப்பட்ட இலக்கியங்கள் நிச்சயம் அங்கீகரிக்கப்பட்ட அடையாளப்படுத்தப்பட்ட ஒவ்வொன்றிலும் மறுபக்கத்தைப் பார்க்க முயன்றுகொண்டே இருக்கும். அம்முயற்சியின் விளைவாகவே மறுகட்டமைப்பும் அடையாள மீட்டுருவாக்கமும் நிகழும்.

அடையாள மீட்டுருவாக்கத் தேவை

     ஆதிக்கச் சக்திகள் புதுப்புதுக் கிளைகளைத் தோற்றுவித்து அவற்றுக்கு ஒரு அடைகொடுத்து அடையாளங்களைத் தமக்கேற்றதாக தமக்கே உரிமையுடையனவாக ஏற்படுத்தி பிரிவினைக் காரணிகளாக மாற்றி அமைத்தனர். எது ஒன்றின் மீதும் வினாக்கள் தொடுத்து பரிசீலனைக்கு ஆட்படுத்தும் நவீனக் கருத்தியக் கூறுகள் அடையாளக் கூறுகளின் பிற்போக்குத் தன்மைகளை நீக்கி அவற்றை மக்கள் மயப்படுத்தும் முயற்சியை மேற்கொள்கின்றன. அடையாளங்களைத் துறந்துவிட்டு அடிப்படையில் எந்த மக்கள் குழுவும் இயங்குதல் அத்தனை எளிதானதன்று. ஏனெனில் நிலம்சார் மொழிசார் இனம்சார் அடையாளங்கள் அனைத்தும் சமூக கிரியாயூக்கிகளாக ஒன்றோடொன்று இறுகக் கட்டப்பட்டுள்ளன. அடையாளக் கட்டுமானங்களை முழுதாய்த் தவிர்த்தலை விட அவற்றை விவாதங்களுக்குட்படுத்தி புனரமைத்து மறுகட்டமைப்பு செய்யவும் மீட்டுருவாக்கம் செய்யவும் கந்தர்வன் முயல்கிறார். மார்க்சிய நோக்கிலான சமூகப் பொருளியச் சமநிலையை முன்வைத்து வர்க்க அணிதிரட்சிக்கு கவிதை வழியாய் பாதை சமைக்கிறார். நவீனத்துவ வாதங்கள் முன்வைக்கும் அடையாள அணிதிரட்டல் மீண்டும் அடையாளங்களால் நிலைபெற்ற ஏற்றத்தாழ்வுகளுக்குள்ளேயே தேங்கும்.

     முன்னை மரபுகளால் கட்டப்பட்ட நிறுவனப்படுத்தப்பட்ட அடையாளங்களான மதம் மொழி இனம் சாதி ஆகிய ஒருங்கிணைப்பு கூறுகளை புறந்தள்ளி இவற்றை வர்க்க அரசியலுக்கான ஆதாரப் புள்ளியாக பிணைப்புக் கண்ணியாக மாற்றியமைக்கின்ற வேலையை கந்தர்வன் கவிதைகள் செய்ய முனைகின்றன.

நிலமும் கந்தர்வனும்



'நாங்கள் நாற்று நட்டு பூமிக்குச் சட்டை போடுகிறோம்

ஆனால் பூமி என்னவோ வரப்பில் குடையோடு நின்று

விரட்டும் ஆளுக்கு விசுவாசமாக இருக்கிறது…”

'எங்களின் ஒடிந்த இடுப்புகளை புரட்டிக் கொள்ள

ஒரு குச்சில் இருந்தால்தானே மக்கள் வேலைக்கு கிடைப்பார்கள்

எனவேதான் நிலப் பட்டாக்களை விட

மனைப் பட்டாக்கள்  வழங்கப்படுகின்றன

'நிலத்தை ஆளவும் எங்களை அடக்கவும் என்றே

அவர்கள் வாரிசுகளைப் பெற்றுக் போடுகிறார்கள்

என்கிற வரிகளில் நிலவுடமை யாரிடம் நிலைகொள்ள வேண்டுமென்பதை முன்குறித்துக் கொள்வதை கந்தர்வன் காட்சிப்படுத்துகிறார். காட்சிகளின் ஊடாக கந்தர்வனின் கலகக்குரல் நிலவுடைமைக் கட்டுமானத்தை உடைக்கவும் மறுநிர்ணயம் செய்யவும் அறைகூவல் விடுக்கிறது. உழைப்பு என்பது பிரதானப்பட்டது என்பதை உணர்ந்த மேலாதிக்கக் குழுக்கள் நிலத்தை மூலதனமாக்கிக் கொண்டு உழைப்பை விளிம்புநிலைக் குழுக்களின் உரிமையாக்கி  விளைச்சலைக் கண்டன. தம்மை வளப்படுத்திக் கொள்ள நிறுவனப்படுத்தப்பட்ட கல்விமுறை, தொழில்முறைப்பட்ட வேலைவாய்ப்பு என்பதாக ஒருவர் கொடுக்க ஒருவர் பெற... என்கிற இழிநிலைக்கு கொண்டுவந்தமையே நவீன முதலாளித்துவத்தின் பரிணாம வளர்ச்சி.

வேலையும் கந்தர்வனும்

     நிலமும் நிலத்தில் உழைக்கும் உழைப்பும் புண்ணிய வாய்ப்புகளாகப் பார்க்கப்பட்டதன் வாயிலாக அடையாளங்கள் எங்ஙனம் மேலாதிக்க மனநிலைக்கு இட்டுச் சென்றன என்பதை திடமாக அறிய முடியும். அமைப்புக்கு உள்ளிருந்து போராடும் அதே வேளையில் முன்பு கட்டமைக்கப்பட்ட மரபுகளையும் ஆதிக்கச் சிந்தனைகளையும் கலைத்துப் போட்டு மறுகட்டமைப்பு மேற்கொள்கின்ற முயற்சியாகவே கந்தர்வனின் வரிகள் பளிச்சிடுகின்றன. நிலஉரிமை இழந்தோருக்கு உணவேனும் உறுதிப்படுத்துவதற்கு நிலைத்த வேலை குறித்த உரிமைகளை கந்தர்வன் வரிகள் முன்மொழிகின்றன.

ஐநா சபையே

இந்த ஆண்டை ஊனமுற்றோர் ஆண்டாக்கி உத்தரவிட்டதால்

ஒன்றுமே இல்லாமலும் வேலையே இல்லாமலும் இருந்த

எம் நாட்டு இளைஞர் ஒருவன்

இரயிலுக்கு தன் கரங்களை இறையாக்கி

ஊனமுற்றுப் போய் கொண்டாடி விட்டான்

என்று சுரண்டலை உலளாவியதாகக் காட்டி உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை முன்வைக்கிறார் கந்தர்வன்.

உப்பளத் தொழிலாளிக்கு உப்பு கிடைக்கும்

அப்பள தொழிலாளிக்கு ஒன்றிரண்டு அப்பறம் கிடைக்கும்

வீடுகட்டும் தொழிலாளி வீடின்றி அலைவான்

நெசவு தொழிலாளி துணியின்றி அலைவான்

வேலை கிடைக்கப் பெற்றாலும் அதை நிலையானதாக்கிக் கொள்ளுகிற சுதந்திரத்தை ஆதிக்க வர்க்கம் கவனமாக தடையிட்டுக் காத்தலையும் கந்தர்வன் சாடுகிறார்.

எங்கள் தோட்டத்தில் கனிமரங்கள் ஏராளம்

கன்றுகளாக நட்டதும் நாங்களே, நீரூற்றி வருவதும் நாங்களே.

ஆனால், எல்லா கனிகளும் எங்களுக்கு எட்டாக் கனிகளே

மாட்டு வாலின் மயிருக்கு சமமாக கூட மனித நலத்தை

மதியாத உத்தமர்கள் வெண்மணியில் வெந்த

மனித மாமிசத்தை விடவும்

மாட்டு மாமிச வேகலை சகிக்க மாட்டாத சத்தியவான்கள்

உழைப்புக்கேற்ற ஊதியம் மறுக்கப்படுதலிலிருந்து கந்தர்வக் கோபம் வெளிப்படுகிறது.

சமயமும் சதியும் கந்தர்வனும்

     மனிதனின் ஆக்கப்பூர்வமான வாழ்க்கை முறைக்காக என்று வடிவமைக்கப்பட்டனவாய் கூறிக்கொள்ளும் சமயச் சித்தாந்தங்கள், அதிகார வர்க்கங்களோடு பின்னிப்பிணைந்து இருப்பதும் நிறுவனப்படுத்தப்பட்ட அவையே உரிமைக்குரல்களை நீர்த்துப்போகச் செய்தலும் மக்களை மழுங்கடித்ததையும் கந்தர்வன் கடுமையாய் வினவுகிறார்.

உள்ளே இருப்பதாலேயே உலக கஷ்டங்கள் உரைக்கவில்லை என்று

அவனை உற்சவமூர்த்தியாக்கி வீதிகளில் பவனிவர ஏற்பாடு செய்தார்கள்

என கடவுள் சித்தாந்த உருவாக்கத்தை கேலி செய்யும் கந்தர்வன்.

அவர்களோ

கோவில் வாயில்களை விட்டு கோட்டை வாயிலுக்கு புறப்பட்டார்கள்

சீர்திருத்தங்களால் கடவுள் மறுத்து மக்கள் விழித்துக் கொண்டமையும் காட்சிக்கு வைக்கிறார்.

அரசுமுறையும் கந்தர்வனும்



நான்கு வருணம் கொண்ட நாடு

ஒன்றை குறைத்து மூவர்ணமாய் முற்போக்கிற்கு வந்தது

எளிய மக்களின் அரசியல் பங்கேற்புகளின் குறைந்தபட்ச வெற்றியாக சுதந்திரத்தைக் குறிப்பிடும் கந்தர்வன்,

ஏழை என்றும் அடிமை என்றும் எங்கும் உள்ள தேசத்தில்

நாம் எல்லோரும் சமமென்பது உறுதி ஆகாமல்

உழவுக்கும் தொழிலுக்கும் நிந்தனை செய்து

வீணில் உண்டு களித்திருப்போரை வந்தனை செய்து

விழலுக்கு நீர்பாய்ச்சி மாந்தி கொண்டிருக்கையில்

விருந்தினருக்கு உழைத்துடலம் ஓய்ந்து கொண்டிருக்கையில்

உங்களை ஆடச் சொன்னது யார்? பாடச் சொன்னது யார் ?

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்

என்று அடித்துச் சொன்னவன் யார்?....

அக்கினியானான் பாரதி! குனிந்து ஒரு காலணியைக் கையில் எடுத்தான்

பாரதியைப் படியெடுத்துக்கொண்டு பாரதியின் கற்பிதங்களையும் உடைத்துப்போடுகிறார்.  ஒருசார்புடைய அரசமைப்புகளின் மீது கடுமையானத் தாக்குதல்களை ஏவும் கவிவரிகள் அதிகார மட்டங்களின் மீது அதிக தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. கந்தர்வன் முன்வைக்கக்கூடிய வாதங்கள் பலகாறும் கற்பிக்கப்பட்டு வந்த சுதந்திரப் பதாகைகளில் மேல் வில்லம்பாய் புறப்பட்டுக் கிழித்து கந்தலாக்குகின்றன.

அஞ்சி நடுங்கிய கரங்கள் அடங்கி ஒடுங்கிய கரங்கள்

அக்கினியாய் எழுந்தன!

அவன் படைத்த அத்தனையும் அவனே ஆக்கிரமித்தான்

அவன் பார்த்த அத்தனைக்கும் அவனே ஆணையிட்டான்

வஞ்சித்த வர்க்கத்தை வாகைசூடி நின்றான்

துன்பத்தை முதன்முதலாய் தோற்கடித்து வென்றான்

என்று முழங்கும் கந்தர்வனின் நம்பிக்கைக்குரல் மற்றுமோர் சுதந்திரப்போரின் அதிகாரப்பூர்வ குரலாய் ஒலிக்கிறது.

இலக்கிய மீட்டுருவாக்கமும் கந்தர்வனும்

நாங்கள் செய்த நாற்காலியில் அமர்ந்து

நாங்கள் செய்த மேசை மேல் கை வைத்து

நாங்கள் செய்த பேனாவை எடுத்து

நாங்கள் செய்த காகிதத்தில்

பேருந்து நிறுத்தத்தில் நிற்கும்

இளம் பெண்ணை பற்றி எழுதுவான்,

எங்களை எழுதச் சொன்னால்

மூக்கைப் பொத்திக்கொண்டு ஓடுவான்

என்று சமூகத்தை பிரதிபலிக்காத தன் இனமான எழுத்துலகத்தை கந்தர்வனின் கேலிவரிகள் கேள்விக் கணைகளாக குத்திக் கிழிக்கின்றன. தன்னையொத்த இலக்கியத் தளத்தாரும் தம்மை மறுசீரமைப்பு செய்துகொள்ள அறைகூவல் விடுக்கின்றார் கந்தர்வன்

பெண்ணியமும் கந்தர்வனும்

ஆடவும் பாடவும் கேளிக்கைக்குமாகவே

நீங்கள் மேடைக்கு வந்தீர்கள் இப்போதுதான்

கோரிக்கைக்காக வருகிறீர்கள்

சளைக்காமல் வேலை செய்யவே உங்களை சக்தி என்றார்கள்

ஒரு புதிய வீடு கட்டி முடிக்கப்படுகையில்

ஒரு பெண்ணுக்கு புதிய சிறை தயாராகிறது

ஆபரணங்கள் விலங்குகள் ஆகின்றன

வரதட்சனை சைத்தானுகாய் எங்கள் தேசம் முழுவதுமே

கன்னிகாஸ்திரி மடமாய் மாறிவருகிறது

வெண்மணியில் வெந்ததில் பெண்மணிகளே அதிகம்

எல்லா விரியத்தோடும் எங்கள் தாய் ஒரு புரட்சி குழந்தையைப் பெற போகிறாள்

என அடிமைப்படுத்தப்பட்ட விளிம்புநிலைச் சமூகங்களில் மட்டுமல்லாது உலக உயிர்கள் யாவிலும் அதிக அடக்குமுறையை எதிர்கொண்ட பெண்ணியச் சமூகத்தை கந்தர்வன் உணர்வு கொள்ளச் செய்கிறார். கவிதையால் உயிர்ப்பிக்கிறார்.

கந்தர்வக் கலகம்

     உரிமையிழந்த மக்கள் பொதுவுடமை சமூகத்துக்கான தம் பங்களிப்பை அளிப்பதற்கான அறைகூவலாக கந்தர்வன் வரிகளில் ஓர் கலகக்குரல் பளிச்சிடுதலைக் காணமுடிகிறது.

மழையே! வானத்திலிருந்து வருவதுதானே வழக்கம்

இம்முறை ராக்கெட்டில் இருந்து இறங்கி

எங்கள் முதுகில் என் விழுந்தாய்

நதியே! நீ நீராடைப் போர்த்திய திமிரில்

எங்கள் பருத்தி ஆடைகளை எடுத்துக்கொண்டு நிர்வாணப் படுத்தி விட்டாய்

என்று வஞ்சனைகள் தந்த வலிகளை கந்தர்வன் காட்சிக்கு வைக்கிறார்.

மயில் ஆடுவது கூட ஆர்ப்பாட்டம் போல

குயில் கூறுவது கூட கோரிக்கைக்காக என்ற காலமிது

சிறுத்தைகள் நீங்கள் சீற்றத்தில் சிக்கனம் வேண்டாம்

என்று உரிமைகளின் தேவைகளையும் போராட வேண்டிய நிர்பந்தத்தையும் இளைய சமுதாயத்துக்கு முன்வைக்கிறார் கந்தர்வன்.

இளைஞா!

மறுபடியும்  குனிகிறாயா? மறுபடியும் குழைகிறாயா?

அதெல்லாம் சரி!

அது என்ன மேலுதட்டில் கருப்பாய்

புல் போல் வளர்த்து திரிகிறாய்?

அது மீசையா!...

உன் வேலை பாராளுமன்றத்தில் பதுங்கி கிடக்கிறது.

கறுப்புப் பணங்களில் ஒளிந்து கொண்டிருக்கிறது.

மதியாதவனை கும்பிட மட்டுமா கைகள்

உயர்த்திப் பிடிக்க இல்லையா.

என்று இளைய சமுதாயத்தைக் கொம்பு சீவி விடுகிறார்.

ஏகாதிபத்தியம் மேற்கில் உதயமானது

என் தேச மாந்தரே எதற்கும் அஞ்சாதீர்

அது ஒரு அஸ்தமன திசை

என்கிற கந்தர்வன் விடியலுக்கான நம்பிக்கையைப் பொதுச்சமூகத்திற்குத் தருகிறார்.

வேர்க்க விறுவிறுக்க வெட்டி வெட்டி வந்தான்

கூழ் தான் இருந்தது. குடிக்கப் போனான்

எஜமானன் வந்தான், உபதேசம் செய்தான்.

கூழானாலும் குளித்துக் குடி என்றான்

குளிக்க குளக்கரை போனான் கந்தலை அவிழ்த்து கரையில் வைத்தான்.

பட்டு உடையில் எஜமான் வந்தான்

கந்தையானாலும் கசக்கிக் கட்டு’….

கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்றான்.

கோயிலை நோக்கிக் கும்பிடப் போனான்

ஏதேனும் கொடு என்று எஜமான் கூடவேப் போனான்.

வேதம் ஒருபுறம் முழங்க, இவன் வயிறு ஒருபுறம் ஓலமிட.

சாஸ்திரம் ஒருபுறம் முழங்க, இவன் தரித்திரம் மறுபுறம் வளர

குடித்த கூழும் உடுத்தியக் கந்தையும்

வெகு காலம் வரைக்கும் நிலைத்துவிட்டது.

பட்டினி கிடந்தான் விரதம் என்றான்.

ஆசை முற்றும் துறந்து புத்தன் பார் என்றான்

வினவிடப் புறப்பட்டான் அகிம்சை தந்தை

அண்ணல் காந்தியைக் காட்டினான்.

தொழுது அடங்காமல் நீ ஆர்த்திடும் பட்சத்தில்

ஆயிரம் சட்டம் வரும்! அவசர சட்டம் வரும்!

நீ எங்களை பகைக்காதே என்றான் எஜமானன்

புத்தன் ஒருபுறம் காந்தி ஒருபுறம்

எஜமான் ஒருபுறம் சட்டம் மறுபுறம்

சுதந்திரம் வந்த போதும் பசிதான். சூத்திரன் ஆளும் போதும் பசிதான்

சட்டம் சோறு போடவில்லை சத்தம் சோறு போடவில்லை

பாட்டாளி ஆட்சியில்தான் பாரதத்தின் பசி போகும்…”

அடையாளங்களின் பரிணமிப்பையும் அதன் கிளைத்தலையும் கந்தர்வன் சூசகமாகக் காட்சிப்படுத்தும் தன்மை அலாதியானது. கந்தர்வன் முன்வைக்கும் மரபுகளையும் அடையாளங்களையும் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டியத் தேவைகள் அதற்குத் தரும் அடைகள் அடையாள மீட்டுருவாக்கத்தின் அறைகூவலை உணர முடிகிறது. சமுதாய விடியலுக்கான உரிமைக்குரலாய் தீர்வுகளை நோக்கிய நகர்வுக்கு மக்களை அணியப்படுத்துபவனாய் செரிவான கருத்துமிக்கச் சொற்களால் வழிநடத்துபவனாய் கந்தர்வன் வெளிப்பட்டிருக்கிறார்.

 

பயன்பட்ட நூல்கள்

     கந்தர்வன் கவிதைகள் சந்தியா பதிப்பகம்

     புதுக்கவிதைத் திறன் இரா.மோகன் - மெய்யப்பன் பதிப்பகம்

     புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை எழுத்தாளர் பாலா - அகரம் பதிப்பகம்

     தமிழ் அடையாள அரசியலின் இயங்கியல் ந.முத்துமோகன் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

     நவீன இலக்கியத்தின் அடிப்படைகள் கைலாசபதி - குமரன் பதிப்பகம்

     கவிதை இயங்கியல் பா.செல்வகுமார் - கீற்று வெளியீட்டகம்

     நவீன தமிழிலக்கிய அறிமுகம் ஜெயமோகன் - உயிர்மை பதிப்பகம்

     மனித சமுதாயம் ராகுல் சாங்கிருத்தியாயன் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

     தமிழ் இலக்கிய வரலாறு ஞா.குருசாமி - அகரம் பதிப்பகம்

     ஆண்-பெண் உழைப்பும் சமூக மாற்றமும் மா.பரமசிவன் - அன்னம் பதிப்பகம்

No comments: