Wednesday, April 16, 2025

புனைவோடையுள் ஊடிக் களிப்புறும் வாசக மனம்

 புனைவோடையுள் ஊடிக் களிப்புறும் வாசக மனம்

இலக்கியப் படைப்பு என்பது மனித மனத்தின் புறச்சூழல் உடனான அனுபவங்கள், சிந்தனைப்புலங்கள் மற்றும் விருப்பங்களின் மொழிவழி வெளிப்பாட்டுக் கலைச் செயல்பாடாகும். இலக்கில்லா இலக்கியங்கள் என்று ஏதுமில்லை. வார்த்தைகளை வீணில் வீசியெறியும் வசவுகளுக்கும்கூட இலக்குகளில்லாமலில்லை. இலக்கியத்தின் இலக்கு வாசக மனம் தான். இலக்கிய ஆக்கியோன் பல்வகை உத்தியும் சொல்லாட்சி மற்றும் வாதத் திறன்களும் கொண்டு தன் நனவுலக / கனவுலக அனுபவங்கள்வழி தானடைந்த உணர்வை வாசகனுக்குத் தந்துவிடும் இலக்குடன் இலக்கியப் படைப்பு முனைகிறான். ஆக்கியோனின் அனுபவப் பிரதியாகவே கலைப்படைப்பு எழுகிறது. 

இலக்கியப் படைப்பு எப்போதும் அரூபமான வாசகனை நோக்கியதுதான். வாசக மனத்தின் ஏற்பினை ஒட்டியே இலக்கியம் இலக்கை அடைகிறது. வாசகனே ஒரு இலக்கியத்தின் நீதிபதியாகிறான். வாசகனின் புரிதலிலிருந்து ஏற்பு, மறுப்பு, தர்க்கம், மாற்று என பன்முகத் தளங்களில் புத்தொளிக் கதிருடன் விரிகிறது படைப்பின் ஆன்மா. ஆனால் எல்லா வாசிப்பும் படைப்பின் ஆன்மாவை நெருங்குவதில்லை. “என் படைப்புகளின் உள்ளொளியைப் பெற்றவர்கள் குறைவு. என்கிற வருத்தம் எனக்குண்டு என்றாலும் பிரவாகிக்கும் என் படைப்புகளின் வீச்சுக்குள் கலந்துக் களிப்புறும் வாசகனுக்காக இதே வீரியத்தை நான் பாதுகாத்துப் பரிமளிக்கிறேன்.” என்ற தமிழவன் கூற்றினை இவ்விடம் நினைவு கூரலாம். 

படைப்பெனும் பிரதியின் உள்ளொளியை நெருங்கி நுகரும் வாசகன் இன்னொரு படைப்பாளனாகுமிடம் விமர்சனம் ஆகும். வாசிப்பின் முதிர்ச்சியானது, இலக்கியப் பெருவெளியில் தான் கூடிக் களித்த கலைப்புல வளமையை மீண்டும் மொழி வழியேப் பிரதியெடுக்கும். அவ்வாறான வாசகப் பிரதிகள் மூலப்பிரதியின் சுவை நரம்புகளைச் சுண்டி நின்று ரீங்கரிக்கும். இந்த இசைச் சுரத்தில் மூலப்பிரதியை மிஞ்சியும் மனம் ஒன்றுதலுண்டு. அவ்வாறாக பிரதியின் பிரதிமையாக வாசகக் கண்ணோட்டத்தில் இருந்து இயக்கங்கண்டுள்ள எழுத்தாக இரா. அந்தோணிராஜ் அவர்களின் “இக்கால இலக்கியப் போக்குகள்” எனும் நூல் அமைந்துள்ளது. பதினேழு கட்டுரைகளின் தொகுப்பாக வெளியாகியுள்ள இந்நூல், நூலாசிரியரின் வாசிப்பு அனுபவங்களின் கோர்ப்பாக அமைந்துள்ளது. 


வியப்பூட்டும் வாசிப்பு வெளி

இரா.அந்தோணிராஜ் வாசிப்புக்குத் தேர்ந்துள்ள நூல்கள் மற்றும் சிந்தனைப்புலங்கள் தமிழ் வாசிப்புப்புலத்தில் தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் நீங்கலாக வெகுசிலரால் மட்டுமே அணுகப்பட்டவையாகும். ஆய்வு நோக்குகளிலிருந்து விலகி வெகுசன வாசகப் பரப்பிலிருந்து இந்நூல்கள் வாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டமை சிறப்பு. பின்நவீனம், பின்காலனியம், மாய யதார்த்தம், விளிம்புநிலையியம், பெண்ணியம், சூழலியம் உள்ளிட்ட சிந்தனைப் புலங்களைப் பற்றுக்கோடாகக் கொண்டு வாசிப்புக்குள் பயணித்தமை புதிய வாசிப்புத் தூண்டலுக்கான முனைப்பு. ஒரு வாசக மனம் இங்ஙனமெல்லாம் பயணித்திடுமா என்பதை எண்ணுகை வியப்பும் அருமையுமாகும்.

ஜிதேந்திரனின் துகினம் நாவல் மெல்லிய உணர்வுகளை இழையோட்டிப் பார்க்கிற கதைப் பனுவலாகும். இந்த நாவலுடனான விவரிப்புகளிலும் விமர்சனத்திலும் மென்மையைப் பரவ விட்டுள்ளார் இரா.அந்தோணிராஜ். புதுமைப்பித்தனின் கதைபோக்கும் பாங்கு, கருத்தைப் புதைத்துப் புனையும் திறம், உரையாடல் நேர்த்தி, பாமர இலக்கியத் தன்மை, கருத்தியல் சார் புனைவு நுட்பம் போன்றவை ஒரு நூற்றாண்டு படைப்பாளர்களின் ஊக்க மருந்தும் சத்துணவுமாகும். ஆனால், இந்தத் தாக்கத்தை சமகாலப் படைப்புகளுக்குள் அலைந்து தேடி வெளிப்படுத்துகின்ற முனைப்பு புருவமுயர்த்தி கண்களை விரியச் செய்கிறது. வைரமுத்துவின் கவிதை வழியாகச் சூழலியச் சிந்தனைப் புலத்தைத் தொட முனைந்திருக்கும் முயற்சி இயல்பான கட்டுரையாக்கத் தன்மை கொண்டுள்ளது.

திகைப்பூட்டும் காட்சிக் கோணங்கள்

நூலாசிரியரின் வாசக மனம் நாவல்களுடன் பெரிதும் விரும்பிப் பயணித்திருக்கிறது. என்றாலும் படைப்பின் புனைவுக்கும் நனவுலக நடப்பிற்கும் இடையிலான இடைவெளியைக் கருத்தியல் கொண்டு நிரப்பியிருக்கிறது. சான்றாக, சுரேஷ்குமார் இந்திரஜித்தின் கடலும் வண்ணத்துப் பூச்சியும், ரயில் ஆகிய நாவல்களை அணுகிய மனப்பாங்கு ராஜநாயகத்தின் காலமற்ற காலத்தை பின்னையத்துக்குள் பொருத்தி ருசிக்கிறது. தொடக்கநிலை வாசிப்புக்கும் முதுநரை முதிர்நிலை வாசிப்புக்கமானத் தொலைவை வெகு இயல்பாகக் கடந்து நிற்கிறார் இரா.அந்தோணிராஜ். 

எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரத்துள் நூலாசிரியரின் சஞ்சரிப்பு சற்றே விரிவானது. எஸ்.ரா கதை சொல்லும் பாங்கினைப் போலவே மிக எளியது. இடஞ்சுட்டிப் பொருள் விளக்குதல் போல சஞ்சாரத்தின் பயணப்பிரதியை திண்ணைக் கதை போன்று உட்பொதிவைச் சுட்டி விளக்குகின்றமை சிறப்பு. பிரதியின் புலப்பாட்டுக்கேற்ப தன் வாசிப்பனுபவ எடுத்துரைப்பினைப் பொருத்திக்கொள்ளும் இலாவகம் அவர்தம் மொழிப் பழக்கத்தின் விளைச்சலாகக் கருதிக்கொள்ளலாம். 

மூன்றாம் பாலின நடப்புகளை நாவல்களையும் ஆய்வுகளையும் முன்வைத்து விளக்கியிருத்தல் தரமான தகவல் திரட்டு. மணிமேகலை மறுவாசிப்புகள் பல்வேறு நிலைகளில் சமூகக் கட்டுடைப்புகளை நிகழ்த்திவரும் சூழலில் விளிம்புநிலையியப் பார்வை ஊடான குறுக்கு வெட்டு பாய்ச்சல் புது வெளிச்சமாகும். மனிமேகலைக் கதைகளின் நம்பகத்தன்மையைத் தாண்டி படைப்பு வெளி உள்ளீடுகளை ஆசிரியர் நிரல்பட விளம்பி நிற்கிறார்.

மெச்சத்தக்க விசாரணைகள்

தமிழ் இலக்கிய வெளிக்குள் அறம் என்கிற பொதுச் சமூக ஏற்பாட்டினுள் புறக்கணிக்கப்பட்ட உழைக்கும் தொல்குடி மக்களின் நிலைகளை கட்டுடைத்து முன்னை மாதிரிகளை கலைத்துப்போட்ட அறிஞர்களான ராஜ்கவுதமன் மற்றும் தமிழவனின் முன்வைப்புகளை ஆய்வு நோக்கில் கையாண்டிருக்கும் பகுதியில் நூலாசிரியரின் சிந்தனைத்திறம் மிளிர்கிறது. விசாரணையின் மீதான மறுவிசாரணையாக நடைபெறும் விவாதம் இறுதியில் அறிஞர்கள் ராஜ்கவுதமனும் தமிழவனும் வழங்கியத் தீர்ப்பையே வழிமொழிகிறது. இக்கட்டுரை முந்தைய சிந்தனை வெளிச்சத்தின் மேல் கூடுதல் வெளிச்சமேற்றியுள்ளமை சிறப்பு. 

பெண் எழுத்தும் பெண்ணிய எழுத்தும் மோதிக்கொள்கிறச் சூழலில் பெண்மொழி குறித்த உரையாடலைத் தொட்டிருக்கும் ஆசிரியர் துணிச்சலானவர் தான். சங்கப் பெண் மொழி முதல் சமகாலப் பெண்மொழி வரை விவாதத்துக்குள் கொண்டமைத்திருப்பது வாதங்களுக்கு வலு சேர்க்கிறது. ஆணின் மொழியில் பெண்ணின் பிரதிமைகள் போலிகளாகிப் போனமையை உரிய சான்றுகளுடன் விளக்கியிருத்தல் கூடுதல் புரிதலுக்கு இட்டுச்செல்கிறது. குறுந்தொகை, நவீனக் கவிதைகள், மாலதி மைத்ரியின் கவிமொழி ஆகியன ஊடாகப் பயணிக்கும் உரையாடல் அருமை. 

அனைத்துக் கட்டுரைகளின் இறுதியிலும் வழங்கப்பட்டுள்ள கடைசி பத்தி ஆசிரியரின் தீர்மானப் பிரகடனமாக அமைகின்றது. மேலும், சுபம் என்று முடிகின்ற டூரிங் டாக்கீஸ் படம் போன்று திருப்தியளிக்கிறது. குறிப்பாக, 9, 10, 11 மற்றம் 17 ஆகிய கட்டுரைகள்.

எதிரிடை முரண்களும் சில…

விலை போன கலை என நவீன முதலாளியக் கலைத்துறைச் சந்தைமய நிலையை விமர்சிக்கிறப் பகுதிகளில் வாசக மனத்தின் அங்கலாய்ப்பம் சீற்றமும் வெளிப்படுகிறது. “எல்லா எழுத்தும் கலை அல்ல.” (பக்: 38) “ஒரு கலையின் வெற்றியை அக்கலை தான் தீர்மானிக்க வேண்டும்… ஆயக்கலைகள் அறுபத்து நான்கு… கலை இலட்சியமே கலைதான்.” (பக்: 39) “கலை கற்பனைக்காக என்கிற நிலை மாறி கலை விற்பனைக்காக என்றாகிவிட்டது.” (பக்: 40) “கலையை ஆராய்வதை விட அனுபவிப்பதே சிறந்தது.” என்பவை சீற்றத்தின் விபரீதங்களாகக் கருதலாம். இக்கட்டுரையின் முன் பின்னான முரண் கருத்துக்களால் மய்யப் பொருளை விளங்கிக் கொள்வது சிரமமாகவே இருக்கிறது. சற்றே நிதானித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

திருநர் குறித்தக் கட்டுரையில் திருநர் என்கிற விளி பதத்தைப் பயன்படுத்தியிருக்கலாம். ஏனைய விளிகளைக் காட்டிலும் அது சிறப்பானது. மேலும் திருநர்களை ஆண்பால் மற்றும் பெண் பாலிலிருந்து பிரித்தறியுமிடத்து ஆசிரியரின் கருத்தில் மாறுபட நேர்கிறது. ஆண் என்பது நடை, உடை, பாவனை உள்ளிட்ட புலனுணர்வு வெளிப்பாட்டினை மட்டும் மய்யமிட்டதன்று. அது பாலுறுப்பு மாறுபாடு குறித்ததுமாகும். இப்பொருண்மை குறித்து சற்றே விரிவாக விவரித்து விரித்திருக்கலாம்.

கட்டுரைகள் பலதளங்களிலான வாசிப்பை மய்யமிட்டுக் கலைந்து கிடப்பது சற்றே துருத்தி நிற்கிறது. சான்றாக, ராஜ்கவுதமன், தமிழவன் ஆய்வுகள் ஒருபுறம் காத்திரமாய் நிற்க, மறுபுறம் வைரமுத்துவின் கவிதை வழியாகச் சூழலியம் நோக்கிய புறப்பாடு தொய்வளிக்கிறது. காத்திரமான விசாரணைகளிலிருந்து விடுவித்து இன்புறு நோக்கிற்கு தன்னை மாற்றிக்கொள்ளும் வாசக மனத்தின் இயல்புப் பண்பாக இதனைக் கொள்ளலாம். என்றாலும், ஒரு விமர்சன நூல் வாசிப்புக்குள் இத்தன்மை பொருந்திடவில்லை.

வாழ்த்தும் எதிர்நோக்கும்

இந்நூலின் மொழிநடை இலக்கியச் செழுமைமிக்கது. வாசிப்போர்க்கு பல கலைச்சொற்களை அறிமுகம் செய்கிறது. கட்டுரையை கருவை நோக்கிச் செலுத்தும் பாங்கு சிறப்பு. அறிமுகநிலை வாசகர்க்கு உந்துதலையும் தேர்ந்த வாசகர்க்கு புத்தொளியும் ஆய்வுநிலை வாசகர்க்கு புதியத் திறப்புகளையும் தந்து நிற்கும் இந்நூல் தனது இலக்குகளை அடைந்திட வாழ்த்துகள். தம் வாசிப்பனுவங்களை அதன்வழி பெறப்பட்டச் சிந்தனை நுட்பங்களை நூலாக்கித் தந்திருக்கும் இரா.அந்தோணிராஜ் அவர்கள் தொடர்ந்து பல நூல்களை வழங்கிட வேண்டும். 

வணக்கம்.

சி.விஜய், தமிழாசிரியர், தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை.


No comments: