Thursday, May 13, 2021

மதத்தை பற்றி லெனின் - புத்தக அறிமுகம்

புத்தகம் : மதத்தை பற்றி லெனின் 

பாவை பதிப்பக வெளியீடு. அலைகள் வெளியீட்டிலும் கிடைக்கிறது.

"மதக்கேடுகளின் மிக மோசமான மூலாதாரம், இல்லாமையும் கல்லாமையும் ஆகும்" என்கிறார் லெனின். 

இல்லாமை என்பது சமூகத்தின் சுரண்டலும் அதற்கு காரணமான வர்க்க வேறுபாடும் இருப்பதை குறிக்கிறது. கல்லாமை என்பது இயற்கையை பற்றிய அறியாமையை குறிக்கிறது. இயற்கையை பற்றிய கல்வியும் அதன் தொடர்ச்சியான விஞ்ஞான வளர்ச்சியும், வர்க்கம் மறைவதற்கான சமூக பொருளாதார வளர்ச்சியுமே மதத்தின் அழிவுக்கு இட்டுச் செல்லும். என்கிறார் லெனின்.

அரசாங்கத்தை பொறுத்தவரையில் மதம் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம் என்று பிரகனப்படுத்தப்பட வேண்டும். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை மதம் தனிப்பட்ட விவகாரமல்ல. மதம் அரசாங்கத்தின் சார்புடையதாகவும், மத சம்பந்தமான நிறுவனங்களுடன் அரசு எவ்வித தொடர்பும் கொண்டிருக்ககூடாது. எவரும் எந்த மதத்தை தழுவவும், மதநம்பிக்கையற்றவராய் இருப்பதற்கும் முழு உரிமையுண்டு. நிச்சயமாக ஒவ்வொரு சோசலிஸ்டும் மதநம்பிக்கையற்றவர்தான். மதத்தினை காரணம் காட்டி மக்களை பாகுப்படுத்தி அரசு பார்க்க கூடாது. அரசின் ஆவணங்களில் கூட மக்களின் மதம் பற்றி பெயரளவில் குறிப்பிடுவது கூட நீக்கப்படவேண்டும். மத சம்பந்தமான கோவில்களுக்கு நிறுவனங்களுக்கோ அரசு உதவித்தொகை கொடுக்க கூடாது. மத சம்பந்தமான நிறுவனங்கள் சுயமாக உருவாக்கப்பட்டு நடத்தப்படுபவையாக இருக்க வேண்டும். அரசியலில் இருந்து மதம் முற்றாக வேறுபடுத்தப் பட வேண்டும் என்கிறார் லெனின்.

மதத்தை அரசியலிலுருந்து கல்வி நிறுவனங்களிலிருந்து பிரித்துவிடுவது என்பது சுரண்டும் வர்க்கங்களுக்கும் நிறுவனப் படுத்தப்பட்ட மத பிரச்சாரங்களுக்கும் இடையில் உள்ள இணைப்பை ஒழிப்பதாகும். உழைக்கும் மக்களுக்கு விஞ்ஞான கல்வியையும் மத எதிர்ப்பு பிரச்சாரத்தையும் சிறந்த முறையில் கட்டாயமாக்கப் பட வேண்டும். எனினும் தனிநபரின் மெல்லிய மத உணர்வுகளை புண்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அவ்வாறு செய்வது மதவெறியை அதிகப்படுத்தவே உதவும்.

முந்தைய நிலப்பிரத்துவ (மன்னர்) ஆட்சியில் கோவில்களும் அதன் நிறுவனங்களும் அரசுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். அப்போது மாற்று மத நம்பிக்கையுள்ளவர்களையும், மத நம்பிக்கையற்றவர்களயும் பல சட்டங்கள் இயற்றி அரசு தண்டித்தது. நிறுவனமான  கோவில்களின் மதகுருக்களும் பூசாரிகளும் அரசாங்க உத்தியோக்கத்தை எளிதாகப் பெற்றனர்.

கல்வி நிலையங்களும் மதமும் முற்றாக பிரிக்கப்பட வேண்டும். மதத்தை அரசிடம் இருந்து பிரிப்பதன் மூலம் தான் பத்திரிக்கை பிரச்சாரம் மூலமாகவும், வாய்ப்பிரச்சாரத்தின் மூலமாகவும், சித்தாந்த ஆயுதங்களின் மூலமாகவும் பலமாக மதத்தை நம்மால் எதிர்க்க முடியும். மேலும் மதக்கேடுகளை வெறும் பிரச்சாரத்தின் வழியே அறிவு புகுட்டுவதால் நீக்கி விடலாம் என நம்பும் முதலாளித்து ஜனநாயகவாதிகளின் வலையில் நாம் விழுந்துவிட கூடாது. மதம் என்பது பொருளாதாரத்தில் உண்டாகும் வர்க்க ஒடுக்குமுறையின் பிரதிபலிப்பும் அதன் விளைவும் என்பதை முதலாளித்துவ ஜனநாயகவாதிகள் புரிந்து கொள்வதில்லை. எவ்வளவு பிரசுரங்கள் வெளியிட்டாலும், எவ்வளவு பிரச்சாரம் செய்தாலும் ஒடுக்கப்படும் பாட்டாளிவர்க்கம் விழிப்படைந்து முதலாளி வர்க்கத்தை எதிர்த்து தீவிரமாக போராடாமல் வெறும் பிரச்சாரத்தில் மட்டும் அறிவொளி கிடைத்துவிடாது. இந்த உலகத்திலேயே சொர்க்கத்தை படைக்க ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை உண்மையான புரட்சி போராட்டத்திற்கு ஒன்றுபடுத்துவது என்பது மேல் உலகத்திலுள்ள சொர்க்கம் பற்றிய கருத்தை அழிப்பதை காட்டிலும் முக்கியமானது என்கிறார் லெனின்.

மேலும் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவதற்கு மத நம்பிக்கை உள்ளவர்களை நாம் தடைசெய்வதில்லை, தடை செய்யவும் கூடாது. அவர்களிடம் நாம் எப்போதும் அறிவியல்பூர்வமான போதனைகளை செய்து கொண்டே இருக்க வேண்டும். இதனை வைத்து மதப்பிரச்சனைகளுக்கு நாம் முதலிடம் கொடுக்கிறோம் என்று குழப்பிக்கொள்ள கூடாது. மதப்பிரச்சனை எப்போதும் நம் இயக்கத்தில் முதலிடம் பெறுவதில்லை. பிற்போக்கு முதலாளிய வர்க்கம் மதப்பிரச்சனைகளை தூண்டிவிடுவதில் அதிக ஆர்வம் செலுத்துகிறது. அதன் மூலம் முக்கியமான அடிப்படையான பொருளாதார அரசியல் பிரச்சனைகளில் இருந்து மக்களுடைய கவனத்தை அவர்கள் திருப்ப பார்க்கிறார்கள். பாட்டாளிவர்க்க ஒற்றுமையையும் அறிவியல் பூர்வமான உலக கண்ணோட்டத்தையும் தொடர்ச்சியாக போதிப்பதன் மூலம் இம்மாதிரியான மதப்பிரச்சனைகளை தூண்டிவிடாமல் அவற்றை எதிர்த்து நிற்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியும் பாட்டாளிவர்க்கமும் மதத்தின் ஆணிவேரான பொருளாதார அடிமைத்தனத்தை நீக்குவதில் தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தும்.

மதம் ஏன் இன்னும் நீடிக்கிறது என்று கேள்வி கேட்டால் அதற்கு காரணம் அறியாமைதான் என்று முதலாளித்துவ முற்போக்குவாதிகள் பதிலளிப்பார்கள். மதம் ஒழிக, நாத்திகம் நீடுழி வாழ்க என்று நாத்திக கருத்துக்களை பரப்புவதே மதத்தை ஒழிக்கும் முறை என்பார் அவர். இது குறுகிய முதலாளிய முற்போக்குவாதிகளின் கருத்தாகும். இவர்கள் மதத்தின் மூலவேர்களை புரிந்து கொள்ளவில்லை. இதனை பொருள்முதல்வாத முறையில் புரிந்துகொள்ளாமல் கருததுமுதல்வாத முறையில் புரிந்து கொள்கிறார்கள். நவீன முதலாளிய நாடுகளின் மோசமான சுரண்டல் அமைப்பால் உழைக்கும் மக்கள் சொல்ல முடியாத அளவு துயரம் அனுபவிக்கின்றனர். அந்த துயரத்திற்கான காரணத்தை அவர்கள் அறியவில்லை. அந்த துன்ப துயரத்திற்கான பயம்தான் இந்த நவீனகால மதத்தின் ஆணிவேராகும். முதலாளியத்தின் கடுமையான சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் மக்களின் உள்ளங்களில் இருந்து வெறும் கல்வி புகட்டி மட்டும் மதத்தை போக்கி  விட முடியாது. இந்த மக்களே எழுச்சியுற்று மதத்தின் மூல வேர்களை எதிர்த்து நிறுவன ரீதியாக ஒன்றினைந்து போராட கற்றுக்கொண்டால் மட்டும்தான் மக்களின் மனங்களில் இருந்து மதத்தை துடைத்தெரிய முடியும்.

சமூகத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் இருள் அறியாமை மூடநம்பிக்கைகளை ஒழிக்க மார்க்சிய கல்வி என்ற நேர்வழி மட்டும்தான் இருப்பதாக ஒரு மார்க்சியவாதி கருதுவாரெனில் அது மிகப்பெரிய தவறாகும். சமூகத்தின்  பல்வேறு நாத்திக முற்போக்கு கருத்துக்களையும் பரப்ப வேண்டும். அவர்களின் சொந்த வாழ்க்கை விசயங்களில் தொடர்புப் படுத்தி புரிய வைக்க வேண்டும். பல்வேறு நாத்திக முற்போக்கு கருத்துள்ள புத்தகங்களை மொழிப் பெயர்த்து அதிலுள்ள அறிவியலுக்கு புறம்பான பகுதிகளை நீக்கி, சுருங்கி தேவையான பிற்சேர்க்கைகள் சேர்த்து வெளியிட வேண்டும்‌

மதத்தின் அடிப்படையை தாக்கிய நாத்திக எழுத்துக்கள் மக்களின் மத நம்பிக்கையிலிருந்து விடுபடுவதற்கு மார்க்சியத்தை காட்டிலும் பெரிதும் உதவிகரமாய் இருந்தது என்று நமக்கு வரலாறு காட்டுகிறது. அவ்வகையில் மார்க்சியத்தோடு அத்தகைய நூல்களையும் இணைத்து மக்களிடம் கொடுக்க வேண்டும்‌ என்கிறார் லெனின்.

 வைதீக இந்துமதம் இந்தியாவின் அரசியலில், கல்வி நிறுவனங்களில் கோலோச்சும் இக்காலக்கட்டத்தில் மதத்தை பற்றிய தெளிவான சித்தாந்த அறிவை பெற லெனினின் இந்நூல் பெரிதும் உதவும் படியுங்கள்.

No comments: