அழகான பெண் தான் மனைவியாக வரவேண்டும் என்று நினைக்கிறீர்களா.?
திருமணத்திற்கு பின் உங்கள் மனைவியை வைத்து fair&lovely விளம்பரம் எடுக்க போகிறீர்களா? அல்லது உலக அழகி போட்டிக்கு அனுப்பப் போகிறீர்களா?
திருமணம் என்பது வெறும் உடலுறவு என்னும் ஒன்றிற்காக செய்துகொள்ளும் ஒரு சம்பிரதாயம் இல்லை. அடுத்த தலைமுறையை உலகிற்கு அளித்து வாழ்க்கை நெறிகளையும், முறைகளையும், அறத்தையும் கற்றுக்கொடுத்து அதை இனிவரும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தும் அற்புதமான உயிரியக்கச் செயல். அதற்கு கட்டாயம் புற அழகு தேவையா? அதிலும் குறிப்பாக பெண்ணுக்கு மட்டும் அழகு வரையறை நிர்ணயிக்கப்படுவது ஏன்.?
விடை : ஆண்களின் நுகர்வு மேலாதிக்கச் சிந்தனை.
கலவி மட்டுமே திருமணத்தின் இலக்காக இருக்க முடியுமா.? உடல் தேவை நிறைவேற்றல் ஒரு செயலுக்குத்தான் திருமணம் என்று பெயர் என்ற எண்ணம் கொண்டிருந்தால்... மன்னிக்கவும் நீங்கள் ஒரு மடையர்.!
திருமணம் ஒரு இனிய பந்தம். ஓர் புனித உடன்படிக்கைக்குக் கீழான இணையேற்பு உறவு. ஓர் இணையின் வாழ்வும் ஒழுக்கமும் தலைமுறைகளாய் தொடர்வதால் 'ஆயிரங்காலத்துப் பயிர்' என்பது உண்மையே.!
இரு எதிர்பாலினத்தார் பரஸ்பரம் தம் அன்பொழுக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு உறவிற்கு பெயர் தான் திருமணம். இதற்கு புறஅழகு என்கிற அலகு அத்தனை அவசியமாய் இல்லை.
உங்களுக்கு 80 வயதாகும் போது உங்கள் துணைக்கு 75 வயதாவது ஆகும். கன்னம் சுருங்கி, பற்கள் இன்றி தன்னை சுமப்பதே உடலுக்கு சுமையாகிவிடும். பேரப்பிள்ளைகள் ஆளுக்கொரு மூலையில் மொபைல் போனில் உரையாடிக் கொண்டிருப்பார்கள். அருகில் இருக்கும் நீங்கள் உயிரற்ற பொருளாக கூட கணக்கிடப்பட மாட்டீர்கள். உங்களுடையவை யாவும் மகன் பெயரில் இருக்கும்.
இன்று வாய் நிறைய அரசியல் பேசும் உங்களை, அகவை 80ல் ஓட்டு போட அழைத்து செல்லுதல் ஒரு சுமை.! அதுக்கு ஆட்டோ பிடித்து... பூத்துக்கு தூக்கிப் போய்..! அய்யய்யோ... ஆகாத வேலை என்றெண்ணி ஒருவரும் அழைத்துச் செல்ல மாட்டார்கள்.
குடும்பம் மொத்தம் ஓட்டு போட சென்றிருந்த வேளையில் ஒருத்தி நரைத்த முடியுடன் சுருங்கிய முகமும் நடுங்கிய கைகளுடன் 'என்னங்க, விடுங்க நம்ம புள்ளைங்க தான? நல்லா இருந்துட்டு போகட்டும். மனசுல எதையும் வச்சிக்காதீங்க. இந்தாங்க இந்த சுகர் மாத்திரையை சாப்பிடுங்க' என்று சொம்பில் தண்ணீருடன் நீட்டுவாள். அவள்தான் மனைவி. படுக்கையில் இருந்தாலும், ராசாத்தி ராசாத்தி என்று கடைசி மூச்சிலும் அவளை மட்டுமே தேடுவானே அந்த உறவிற்கு பெயர் தான் கணவன்.
அம்மா இறந்த பிறகு ஜிமிக்கி எனக்கு, தாலி செயின் உனக்கு. அண்டா எனக்கு குண்டா உனக்கு என்று பங்கு வைத்துக் கொள்ளும் சம்பிரதாயங்கள் நடக்கையில், ஒரு காய்ச்சல் தலைவலிக்கும் உட்காராத மனுஷன் ஒரு மூலையில் உட்கார்ந்து 'என்னை விட்டுட்டு போயிட்டியேம்மா இனி யாருமா இருக்கா' என்று தலைமீது கைவைத்து உலகத்தையே மறந்து, 'என்னையும் உன் கூடயே கூட்டிட்டு போயிருக்க கூடாதா தாயி, இனி இந்த உசுரு இருந்தா என்ன? செத்தால் என்ன?' என்று தன்னையும் அறியாமல் கண்ணீர் வடிப்பானே அது தான் இல்லறக் காதல்.
வீட்டுக்கு வந்ததும் அவளைத்தான் தேடும் அவன் கண்கள். பிறந்தகத்திற்கு அவள் பெற்றோரைப் பார்த்துவிட்டு வர அனுப்பிவிட்டு தனிமையை உணர்ந்து காத்திருப்பானே அது இல்லறக் காதல்.
வீட்டில் அம்மா இல்லை என்று குழந்தைகள் தேடவில்லை என்றாலும், 'அம்மாவுக்கு ஒரு போனை போடு, எங்க வந்துட்டு இருக்கானு கேட்போம்' என்று தோரணையாகத் தோற்று நிற்பான். இருபது முறையேனும் போன்செய்து பேசிவிட்டு, இரண்டு நிமிடம் கழித்து இருபத்தி ஓராவது முறை போன் செய்ய சொல்லுகையில்.. 'ப்பா அம்மா வருவாப்பா, ஏன்ப்பா காலில் சுடுதண்ணி ஊத்திகிட்டு நிக்கிற' என்று குழந்தைகளே திட்டும் அளவிற்கு ஒருவன் அகவை ஐம்பதிலும் குழந்தைத்தனமாக நடந்து கொள்வானே... அதற்கு பெயர் தான் இல்லறக் காதல்.
அந்த தேடல் மற்ற எந்த உறவிலும் இவ்வளவு அணுக்கமாக இருக்காது. எப்படா மனைவி அவங்க அம்மா வீட்டுக்குப் போவா நண்பர்களுடன் சுற்றுலா செல்லலாம் என்று சுயநலமாக யோசிக்காது அந்த இல்லறக் காதல்.
'துரை மாமா ஹாஸ்பிடலில் இருந்து டிஜ்சார் ஆகி இன்னைக்கு தான் வீட்டுக்கு வந்துருக்காங்களாம், வா ஒரு எட்டு போய் பார்த்துட்டு வருவோம்' என்று எங்கே சென்றாலும் அவளை இழுத்துச் செல்லும். அது தான் அந்த பந்தத்தின் மகிமையே.
அழகும் வீண். சௌந்தரியமும் வீண். எல்லாம் முதல் குழந்தை வரை தான். அப்புறம் அவளுக்கு நரைத்த முடி எட்டிப் பார்க்கும், உங்களுக்கு முடி இருக்குமா இருக்காதா என்பது சந்தேகம் தான்.
'மனைவி என்பவள் வாழ்க்கை துணைவியானவளே தவிர, கண்ணுக்கு காட்சி பொருள் இல்லை.' இதை உணர்ந்து கொண்டால் போதும். யாரை திருமணம் செய்தாலும் அவர்களை அழகாகப் பார்க்க முடியும்.
புற அழகு தான் அழகு என்று நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடியை கழற்றி வைத்து விட்டுப் பாருங்கள். உலகம் மொத்தமும் அழகாகத் தெரியும்.!
நன்றறிவோம்.! அதை நன்கறிவோம்.!
.jpeg)

.jpeg)
.jpeg)
No comments:
Post a Comment