Monday, August 19, 2024

முப்பால் - புனிதங்களும் விளைவுகளும்

 

முப்பால் - புனிதங்களும் விளைவுகளும்


சி.விஜய்

உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,

தூய சவேரியார் கல்லூரி (.), பாளை.

          மனிதப் புலனுணர்வுக்கு புலப்படாத இயற்கை இயக்கங்களுக்கு கடவுள்சார் புனிதக் கற்பிதப்படுத்தியப் பின்னணியில் உலகியல் கூறுகள் விவாத மறுப்பிற்கு உள்ளாகியுள்ளன. இப்புனிதக் கற்பிதங்கள் சமய நிறுவனமாக்கலின்போது அரசதிகாரத்தை விடவும் வலியக் கட்டமைப்புகளாகி இறுகிப்போயின. இந்திய சனாதனமும் ஐரோப்பிய யூத மேனிலையாக்கமும் இதற்கு சான்றாகக் கொள்ளலாம். இக்கோட்பாடுகள் படிநிலைச் சமூக அமைப்புக்கான திட்டங்களை புனிதப் பூச்சுகளுக்குள் நிறுத்தின. புனிதங்களை அறிவியல்சார் மதிப்பீட்டிற்கு உட்படுத்துவதோ, விமரிசனம் செய்வதோ, கேள்விக்கு உட்படுத்துவதோ பெருங்குற்றமாகப் பார்க்கப்பட்டன. தமிழ்ச்சூழலில் இம்மாதிரியான புனிதங்கள் பல்வேறு காலங்களில் பலவற்றுக்கும் கற்பிக்கப்பட்டுள்ளன. சில இலக்கியங்களும் புனிதப்பூச்சுகளைப் பெற்று அறிவியல் ரீதியிலான இலக்கிய ஆய்வுகளுக்கு ஒவ்வாததாகி நிற்கின்றன.

          இவ்வகையில் அதிகமான புனிதக்கட்டுக்குள் ஆட்பட்ட முக்கியமான நூல் திருக்குறள் எனும் புனித அடையால் பெரிதும் அறியப்படும் முப்பால் ஆகும். இந்நூலின் மீது ஏற்றப்பட்டுள்ள புனிதங்களும் அவை உடைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் விவாதிக்கிறது இக்கட்டுரை.

முப்பால் மீதான புனிதக் கற்பிதங்கள்

          தமிழின் அற இலக்கிய வகையினதான முப்பால் மீது அதன் ஆக்கியோனின் முன்வைப்பிற்கு மாறாக சில கற்பிதங்கள் ஏற்றப்பட்டுள்ளன.

அவையாவன:-

·       பெயரடைப் புனிதங்கள்

·       சமய, சாதியப் புனிதங்கள்

·       உருவப் புனிதங்கள்

          இன்றைய அறிவியல் வளர்ச்சிகளும் கண்டடைவுகளும் புனிதங்களை உடைத்து வருகின்றன. அறிவியலுக்கு முகங்கொடுக்க இயலாமல் புனிதமறைகள் பலவும் திணறும் சூழலில், மானுட மதிப்பீடுகளையும் இயற்கை அறிவியல் அடிப்படைகளையும் பெருமளவு வாத, ஆதாரமாகக் கொண்டியலும் முப்பால் குறள்நூலை மறைநூல் எனப் புனிதக்கட்டுக்குள் நிறுத்துவது சரியன்று.

          திருக்குறளின் கருத்துக்கள் அறிவியல் யுகத்தின் மானுட மதிப்பீடுகளுடன் பெரும்பான்மை பொருந்தி நின்றாலும் சில பயன்படா பழமரபுகளையும் தாங்கிநிற்கிறது என்பதே உண்மை. அவ்வ மரபுகளைக் களைதலும் தலைமுறைகளுக்கு கடத்த மறுப்பதும் தேவையானதாகும். இத்தகைய மறுப்புகளை ஏற்க குறள் மீதான புனிதக் கற்பிங்களே தடைகளாக நிற்கின்றன. புனிதங்களின் தன்மைகளுடன் குறட்பாக்களை முன்வைத்து சமகாலத் தலைமுறைக்கு இப்பழமரபுகளை விளக்கி அடைசெய்கையில் அறிவுச்சுருக்கம் நிகழ்ந்துவிடுகிறது.

          மனிதத்தின் சிக்கல்கள் பலவற்றையும் நடப்பியல் உளப்பாங்குடன் அறிவியலை முன்னிறுத்தி விவாதிக்கும் குறளை கேள்விக்கு அப்பால் நிறுத்த முயலுவதும் அறிவார்ந்தக் கேள்விகளை அதன்மீது எழுப்பாதிருத்தலும் அதன் புகழை மட்டுப்படுத்துவதாகிவிடும். ஆகவே,

          மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்

          யாவுள முன்நிற் பவை.”

எனும் முப்பாலாசிரியரின் வழிகாட்டுதலோடு குறட்பாக்கள் மீதானப் புனிதங்களை சமகால அறிவியல் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அணுகிட வேண்டியது கட்டாயம்.

முப்பாலும் பெயரடைப் புனிதங்களும்

முப்பால் என்று ஆக்கியோனால் பெயரிடப்பெற்ற நூலுக்கு திரு + குறள்திருக்குறள் (புனிதக்குறள்) என்றமையும், மூன்றாம் பாலுக்கு முப்பாலாசிரியர் இட்டபெயர் காமத்துப்பால் என்றிருக்கஇன்பத்துப்பால்என்றழைத்தமையும் முப்பால் ஆசிரியரினும் மேலாக தங்களைக் கருதிக்கொண்ட பண்டைய அறிஞர்களின் வினைகளாகும்.

இப்பெயரடைகளின் நீட்சியாக தெய்வப்பனுவல், உத்தரவேதம் (இறுதி வேதம்), தமிழ் மறை (தமிழ் வேதம்), தமிழ்மனுநூல், உலகப் பொது மறை (பொதுவான வேதம்) வான்மறை எனப் புனித அடைகளை இட்டதின் பின்னணியில் முப்பாலின் பயன்மிகு மானுட முன்வைப்புகள் வியந்தோதுதலும் பயன்படா மரபுகள் அடைசெய்யப்படுதலும் இயக்கங்கொண்டுள்ளன.

 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்என்று பெயர் முதலான எந்த அடையாளத்தையும் குறிக்க விரும்பாத ஆசிரியருக்கு பிறந்த குலத்தைக் கற்பித்து சாதி அடையாளத்தைப் போர்த்தியதுடன் பொய்யில் புலவர், தெய்வப்புலவர், நான்முகனார் (பிரம்மனின் அடை) போன்றவையும் கற்பிக்கப்பட்டன. சைவ சமய நூலான திருவள்ளுவமாலை தான் முதன்முதலாக திருவள்ளுவர் என்ற பெயர்தாங்கி நிற்றலைக் கருதுகையில் பெயரிடும் பின்னணியில் வைதீகத் திட்டத்தின் நெடி வீசுகிறது.

தொடர்ந்து வள்ளுவக் குடிப்பிறப்பு, வாசுகி கற்பொழுக்கம், அந்தரத்தில் நின்ற கிணற்று நீர் முகவை என முப்பாலாசிரியர் குறித்த கற்பிதங்களுடனான புனிதங்கள் அறிவுசால் தமிழ்ச்சமூகம் சமகால மாணாக்கரின் அறிவுநீட்சி முன் வெட்கும் நிலைக்கு இட்டுச்செல்வனவாகும்.

முப்பாலும் சமய, சாதியப்புனிதங்களும்

முப்பால் எச்சமய நூல் என்பதும், குறளாசிரியர் எச்சாதி என்பதையும் ஆராய்வதில் மிகக் கவனத்தைக் குவிக்கிற தமிழ்ப்புலமும் அரசியல்புலமும் முப்பால் ஒரு சமயநூலே என்கிற கருத்தில் மாறுபடவில்லை. அரசியலார் குறளாசிரியருக்கு தம் விருப்பத்தின்பேரில் உடையணிந்தும் வண்ணந்தீட்டியும் நூலணிந்தும் நூலறுத்தும் தமக்குள் போட்டியிடுகின்றனர்.

குறட்பா வேதமறுப்பு சமயமான சமணம் என்று ஒருதரப்பும் (குந்குந்த ஆச்சாரியார்), சைவ மரபக்குரியது திருக்குறள் எனவும் (.பூர்ணலிங்கம் பிள்ளை), “வேதங்களின் சாரமே வள்ளுவம் என ஒருசாராரும் (அறிஞர் நாகசாமி), இலங்கையின் ஏலேலசிங்கன், ஆஸ்திரியாவின் பான்டேனஸ் பாதிரியார் கதைகளின் பின்புலத்துடன் கிறித்தவ வேதச் சார்புடையதுஎனவும் (ஜி.யூ.போப்) வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வள்ளுவ சாதியில் பிறந்தார் எனவும், வல்லப எனும் பதவி வகித்தவர் எனவும், மயிலையில் தோன்றியவர், குமரியில் பிறந்தவர் எனவும் பல கருத்துக்களும் மொழியப்பட்டுள்ளன. பிறப்பு அடிப்படையில் முப்பாலாசிரியருக்கு அடையாளமிடுதலின் காரணங்கள் விரிவாக ஆராயப்பட வேண்டும். ஒரு நூலின் கருத்துக்களை மதிப்பிட்டாய்தலைத் தாண்டி அதன் பெயரறியா ஆசிரியருக்கு பிறப்பின் அடிப்படைகளைக் கற்பித்து ஒரு சாதி அடையாளத்தை இடுகின்ற பாங்கினை தமிழுலகம் ஒப்பலாகுமோ.?

சிலை அடைகளும் சிறுமைப்பாடுகளும்

          பன்மொழி மொழிபெயர்ப்புகள், குறள் மாநாடுகள், புதிய ஆய்வுப்பார்வையுடனமைந்த குறள் ஆய்வுகளுக்கான பணக்கொடைகள், உலகப் பல்கலைக்கழகங்களில் குறள் ஆய்விருக்கைகள் உருவாக்கம் போன்ற முப்பாலை உலகறியச் செய்யும் முயற்சிகளின் பின்னணியில் கருத்துநிலை அணுகுதல்கள் இயக்கங்கொள்ள வாய்ப்புகள் பெருகிவருகின்றன. அதேவேளையில், இன்ன உருவத்தில் இன்னவாறு இருந்தார் என்பதற்கான அறிவியல் உறுதிப்பாடுகளுடனான சான்றுகள் ஏதுமில்லா குறளாசிரியருக்கு உருவம் தருதலும், அவ்வுருவங்களில் தமது சிந்தனைப் பின்புலத்திற்கு ஏதுவான குறியீடுகளை ஏற்றுதலும் போன்ற வியந்தோதல் அல்லது வழிபாட்டுக் கருத்தாக்கங்கள் வருத்தத்திற்குரியன. முப்பால் மற்றும் குறளாசிரியர் மீதான மொழிப்பற்றார்ந்தப் புனிதக் கட்டுகளே இதனை எதிர்வினவுதலுக்கான தடைகளாகவும் நிற்கின்றன.

          வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் சமயங்கள் தோன்றியிருந்தன என்றாலும் கடவுள்கள் பெருமளவு நிறுவனமாகாத காலத்தவர் என்பதனை ஒப்புக்காள்ளும் தமிழ்ச்சமூகம், பெயரறியா, ஊரறியா, உருவமறியா குறளாசிரியருக்கு சிலை நிறுவுதலின் வழியாக இன அடையாளமும், பெயர் குறித்தலின் வழியாக வர்ண அடையாளமும், குறள்களின் கருத்துக்களை தத்தம் சமயக் கருத்துக்களோடு பொருத்திக் கட்டுரைத்து மத அடையாளமும், இன்ன ஊரார் திருவள்ளுவர் என்றவழி சாதி அடையாளமும் இட்டுக்கொண்டு தன்னளவில் இன்பங்கொள்கின்றது.

          ஒருவர் இடும் அடையாளத்தை இன்ன பிறர் ஏற்காத சூழலில் தாங்கள் கட்டமைத்த குறள் தந்த ஆசிரியர் சிலை மீது தாங்களே கறுப்பு, காவி சாயங்கள் பூசி மானங்கெடுக்கின்றனர். இவர்தம் வெறுப்பு குறளையும் அதன் ஆசிரியரையும் ஏற்றிப்போற்றுவது என்பதை எங்ஙனம் தமிழுலகம் ஏற்கிறது. ஆக, ஆசிரியருக்கு உருவம் தருதலும் சிலை மேவி சிந்தனை பரப்புவோம் என்றலும் பொய்களன்றோ.?

பரிமேலழகர் உரைப் புனிதங்களும் உடைப்பும்

பரிமேலழகரின் உரையே குறட்பா மீதெழுந்த உரைகளுள் பெருஞ்சிறப்பு வாய்ந்ததென்று பழைய தமிழறிஞர் உரைத்ததும் தமிழ்ச்சமூகம் ஏற்றமைந்ததும் பரிமேலழகர் உரை குறளை வேதச்சார்புடன் அணுகியதாலேயேயாகும். கு.மோகனராசு, செ.யா.திருந்திளையன் உள்ளிட்ட ஆய்வாளர்கள் பரிமேலழகர் உரைத்தன்மைகளை ஆய்வுக்குட்படுத்தி இதனை விளக்க முயன்றுள்ளனர். இவ்வாய்வுகளின் வழி பரிமேலழகர் உரை முப்பாலை வேதச்சார்புடன் அமைந்த நூலாக நிறுவுவது சாதிய வர்ண முன்வைப்புகளுக்கு துணைபுரிகின்றமையை அறியமுடிகிறது. பரிமேலழகரை ஆதாரமாகக் காட்டியே தொல்லியலார் நாகசாமி உள்ளிட்ட பலரும் வேதவாதத்தினை முன்வைக்கின்றனர்.

வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இருவினையும் சேரா இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இலான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் என்பவற்றை செ.யா.திருந்திளையன் உரை ஒப்பாய்வுக்கு உட்படுத்தியுள்ளமை குறள் மீதான புனிதக் கட்டுகளுக்குள் அறிவியல் ஆய்வு ஒளியைப் பாய்ச்சுகின்றன. ஆனாலும் அவ்வெளிச்சத்தை அவர் பத்து பாடல்களுக்குள் பாய்ச்சி நிறுத்திக்கொண்டமையும், மாற்றுச் சிந்தனையுடன் பெருமளவு குறள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ள கு.மோகனராசுதெய்வம் தொழாஅள்என்றவிடத்து மயங்கி நிற்றலும் சமகால ஆய்வுகள் மொழிப்பற்றோடமைந்த சிந்தனைப்புலச் சார்பு பெற்றிருத்தலின் வெளிப்பாடாகும்.

புலவர் குழந்தை, பாவேந்தர் பாரதிதாசன், நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி போன்றோரின் மாற்று உரைகள் குறள் மீதான வைதீகப் பார்வைக் கோணங்களை உடைத்தன. என்றாலும் குறளின் மீதான புனிதநூல் பார்வை நீர்த்துப்போகாமல் வைத்துக் கொள்வதில் ஆ(சி)ரியப்புலம் தொடர்ந்து முனைப்பு காட்டுகிறது. அதன் வெளிப்பாடாகவே பள்ளிக் குழந்தைகளுக்கு தரப்படும் திருக்குறள் அறிமுகங்களில் கூட புனித மதிப்பீடுகள் இடம்பெற்றுவிடுகின்றன.

ஆய்வறிவியல் பண்பும் முப்பாலும்

          இலக்கியம் என்பது அது எழுகின்ற நிலம் மற்றும் மக்களின் வாழ்வியல் பண்பாட்டுப் பிரதியாக வெளிப்பட்டு, மக்கள்சார் விழுமியங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ பதிவிடுகின்றத் தன்மையுடையதாகும். ஒருகாலத்தில் எழுகின்ற இலக்கியம் காலப்போக்கில் மேலெழும் சிந்தனைப் போக்குகளுடன் மோதி புதியப் புரிதல்களுக்கு உட்படுவது அறிவியல் ஆய்வுலகில் இயல்பானக் காட்சியாகும். அவ்வகையில் குறளிலும் அக்காலத்தின் சமூக ஒழுங்கைப் பிரதிபலிக்கும் கூறுகள் நிறைந்துள்ளன.  சில முன்வைப்புகள் சமகால ஆய்வுக் கோணங்களில் விகாரமானத் தோற்றங்களைத் தருவதுண்டு.


         தோன்றின் புகழொடு தோன்றுக” (குறள் 236) “பெய்யனப் பெய்யும் மழை” (குறள் 55) “திங்களைப் பாம்பு கொண்டற்று” (குறள் 1146) “புலத்தலின் புத்தேழ் நாடுண்டோ” (குறள் 1323) என்ற சொலவடைகள் ஆய்வுப்புலங்களில் கையாளுகிறபோது தயக்கங்களை உருவாக்குதலை உணரமுடிகிறது. தரப்படுகின்ற விளக்கங்களின் போதாமைகள் புதிய முடிவுகளை எட்ட முடியாமல் நிற்கின்றன.

          சமகாலத்தின் அறிவுநிலைக்கேற்ற விளக்கங்கள் தரவியலாதபோது அவற்றை விடுத்துச் செல்வது கூட புரிந்து கொள்ளத்தக்கது. ஆனால், சமயங்கள் தமது புனித நூல்களுக்கு அடைசெய்து நிற்பது போல, வலிந்து மாற்று நியாயங்கள் தரப்படுகின்றனமை சரியன்று. சமகாலத்தில் குறட்பாக்களை ஆய்பவர்களும், குழந்தைக் கதைகளாக மாற்று இலக்கிய அமைப்புக்கு உட்படுத்துபவர்களும் சில குறட்பாக்களுக்கான விளக்கங்களுக்கு இதே பண்பினை வெளிப்படுத்துவது ஆபத்தானது.

          நவீனக் கருத்தியல் புலங்களின் வெளிச்சத்துக்குள் முப்பால் கருத்துக்கள் மிளிறும் வாய்ப்புகள் அதிகமுள்ளபோது அதற்கு இடமளித்து புதிய நோக்கிலமைந்த குறட்பா கருதுகோள்களைத் திட்டமிடுவதே சிறப்பாகும். சான்றாக, ராஜ்கௌதமன் குறள் முன்வைக்கும் அறங்களை மாற்றுச்சிந்தனையுடன் அணுகியுள்ளமை முப்பால் ஆய்வுகளுக்கான திசைவெளிக்கான முயற்சியாகக் கொள்ளலாம். இம்மாதிரியான குறட்பாக்களின் உள்ளடக்கங்களை நவீன முதலாளிய, பின்னைப் பெண்ணிய, தலித்திய மாற்று மதிப்பீடுகளுக்கு உட்படுத்தி ஆய்ந்திட மொழிப்பற்றுடனமைந்த குறள் புனிதக் கற்பிதங்கள் ஆய்வாளருக்கு மனத்தடைகளாக நிற்கின்றன.

முப்பாலும் மொழி அடையாளமிடுதலும்

          குறளை இன, வர்ண, மத அடையாளங்களுக்குள் அடைக்க முற்படுதல் போலவே தமிழ் மொழி அடையாளத்துள் சிறைப்படுத்துதல் இக்கால மொழியடையாள அரசியலாரின் முயற்சியாக உள்ளது. குறள் எந்தமொழியைச் சார்ந்த நூல் என்கிற வினாவை எழுப்பி விடைதர முயல்தல் நன்று.

          தமிழறிஞர் சோமசுந்தர பாரதியார், மா.ராசமாணிக்கனார், கே.கே.பிள்ளை என பலரும் குறளின் காலம் குறித்த மாறுபட்டக் கருத்துக்களைக் கொண்டிருக்க, தமிழுக்குச் செம்மொழி தகுதியை வழங்கியபோது பொது ஆண்டுக்கு முன் 31 ஆம் ஆண்டு என்று நடுவணரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதனை ஏற்காதோர் இன்னமும் பழமையானதென வாதிடுகின்றனர். அரசு ஒப்புக்கொண்ட கால அளவையே எடுத்துக்கொண்டால் கூட, அக்காலத்தில் தமிழி எழுத்து வடிவமுறை புழக்கத்தில் இருந்தமை அறியலாம். தமிழிலிருந்து கிளை மொழிகள் கிளைத்திறா காலம் என்பதும் உறுதி. குறிப்பாக, மொழியியலறிஞர் முத்துசண்முகனார் கூற்றுப்படி, மலையாள மொழி தமிழிலிருந்து கிளைத்து 900 ஆண்டுகள் ஆகியுள்ளன. தெலுங்கு, கன்னடம், சிங்களம் போன்ற மொழிகள் கிளைத்து 1500 ஆண்டுகளே ஆகியுள்ளன. அங்ஙனமாயின், தென்புல, திராவிட மொழிக்குடும்பத்தின் பொது வரிவடிவான தமிழியில் இயற்றப் பெற்றிருந்த குறள் திராவிட மொழிக்குடும்பத்தார் அனைவரும் உரிமைகொள்ள ஏதுவானது என்பதே உண்மை. திராவிடக் கருத்தியலை மாறுபடும் தமிழ் மொழியடையாள அரசியலாரின் இத்தகைய முயற்சியும் தவறானது ஆகும். ஏனைய அடையாளங்களைக் காட்டிலும் மொழி அடையாள அடைப்பு தான் குறள் மீதான மாற்றுச் சிந்தனை ஆய்வுகளுக்கு தடையாக அமைய வாய்ப்புள்ளது.

முடிவுரை

          அறிவு இயல் காலந்தோறும் வளர்ந்துகொண்டே இருக்கும். புதுப்புதுக் கருத்தியல் நோக்குகளும் எழுச்சி பெறுவது காலமாற்றத்தின் இயல்புகளே. எந்த இலக்கியமும் எல்லா காலத்தின் அறிவுநிலைக்கும் பொருந்திநின்று அமரத்துவம் அடைய முடியாது. குறளும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் குறளின் கருத்துக்களில் பெரும்பான்மையானவை இன்றைய அறிவியல் உலகிற்கும் வழிகாட்டும் மானுடச்சார்புடன் அமைந்துள்ளன. அவற்றை புனிதங்களாலும் அமரத்துவ வாதங்களாலும் மறைத்திடாமல் பொதுநிலையில் வைப்பதே பொருத்தமானது.           முப்பால் எனும் அதன் இயற்பெயருடன் ஆக்கியோன் பெயர் உறுதிப்படுத்தப்படாத நிலையில் குறட்பா தன் கருத்துநிலையில் அறியப்படுதலும் அளவிடப்படுதலும் நிராயுத நிலையாகக் காண்பதை தவிர்த்திட வேண்டும். குறட்பாக்களுக்கு வெல்லுந்திறனுண்டு என்பதே நமது மதிப்பீடு. ஆக, குறள் மீதான உணர்ச்சிக் குவிப்புகள் மற்றும் புனிதக் கட்டமைப்புகள் ஓர் இலக்கியமாக ஆய்வுக்குட்படுத்துவதில் பெறும் இடையூறுகளைத் தந்து நிற்கின்றன. இப்படியான காலச்சூழலில்

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து

இயற்கை அறிந்து செயல்  (அமைச்சு : 17)

என, குறளே குறளை சமயத்துக்கு அப்பால் மானுடச்சார்புடன் நிறுத்த வேண்டியக் கடப்பாட்டினை நமக்களிக்கிறது. தமிழ்ச்சமூகம் குறட்பாவின் அகத்தேயுள்ள மானுட மதிப்பீடுகளைத் திடமாக முன்னிறுத்துகிற வேளையில், நிலவுடமைய எச்சங்களான புறந்தள்ளப்பட வேண்டிய முன்வைப்புகளையும் காலத்தின் பதிவுகளாக பதிவுசெய்துவிட்டமையை ஏற்கின்ற நேர்மையும் பெற்றாக வேண்டும். மாறாக, குறளை மறைநூலாகவோ மறைநூல் பண்புகளுடனோ ஏற்கும்போது குறளின் மரபார்ந்த பழமைவாதக் கருத்துக்களுக்கு வலிந்து அடைதர வேண்டிய கடப்பாடு உருவாகிவிடுகிறது. மதச்சார்பினின்று மானுடச்சார்புக்கு மாற்றம்கொள்ள குறளை சில புனிதப் புதைகுழிகளிலிருந்து வெளியேற்றிட வேண்டியுள்ளது. நவீன, பின்னைய, மாற்றுச் சிந்தனைகள் ஏற்றம்கண்டுள்ள இக்காலத்தில் குறளின் காலத்தையும் கருத்தினையும் கட்டுடைத்து ஆய்ந்திட தமிழ்க்குழாம் திறந்த மனதுடன் முன்வருதல் வேண்டும்.

துணைநூல் பட்டியல்

·       செ.யா.திருந்திளையன், “பத்துக்குறள் விளக்கம் பொருந்துமா.?” - முதற்பதிப்பு 2018, மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை.

·       புலவர் என்..இராமலிங்கம், “ஓதலும் ஒழுகலும்” – முதற்பதிப்பு 2002, திருவள்ளுவர் பதிப்பகம், ஆதம்பாக்கம், சென்னை.

·       செ.நாராயணசாமி, “அவ்வை நூல்கள்” – முதற்பதிப்பு 2015, சுரா பதிப்பகம், அண்ணாநகர், சென்னை.

·       கு.மோகனராசு, “திருக்குறள் ஆய்வுத்தெளிவுகள்” - முதற்பதிப்பு 2016, மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை.

·       ராஜ் கௌதமன்தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்” – முதற்பதிப்பு 2018, என்சிபிஎச், ராயப்பேட்டை, சென்னை.

·       நோயல்ஜோசப் இருதயராஜ், “கோட்பாட்டு விமர்சனயுகம் விமர்சனக் கோட்பாட்டுயுகம்” – 2013, அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம், திருச்சி.

·       புலவர் பச்சைமால்முதற்பாவலர் திருவள்ளுவர்” - முதற்பதிப்பு 2001, தமிழாலயம் பதிப்பகம், சாமிதோப்பு, குமரி.

·       புலவர் மு.படிக்காமுவள்ளுவ் வளம்” - முதற்பதிப்பு 2015, வளவன் பதிப்பகம், தியாகராயநகர், சென்னை.

·       கவிஞர் செவ்வியன்திருக்குறள் அறம்குழந்தைகளுக்குத் திருக்குறள் பாடம்முதற்பதிப்பு 2017, திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம், நீலாங்கரை, சென்னை.

 

No comments: